under review

சிறுவர் இலக்கிய வரலாறு

From Tamil Wiki
சிறுவர் இலக்கிய வரலாறு

சிறுவர் இலக்கிய வரலாறு (1980) எழுத்தாளர் பூவண்ணனால் எழுதப்பட்ட நூல். சங்க காலம் முதல் சிறுவர் இலக்கியத்தின் பாதையையும் வளர்ச்சியையும் விளக்கும் நூல்.

ஆசிரியர் குறிப்பு

சிறுவர் இலக்கிய வரலாறு நூலின் ஆசிரியர் பூவண்ணன். இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன். இவர் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1955-ம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் பூவண்ணன் எழுதிய 'உப்பில்லாத பண்டம்' நூல் முதல் பரிசைப் பெற்றது. ஆலம் விழுது, காவேரியின் அன்பு ஆகிய இரண்டு சிறார் நெடுங்கதைகளும் திரை வடிவம் பெற்றன.

தோற்றம்

பூவண்ணன் 1960-ம் ஆண்டு 'குழந்தை இலக்கிய வரலாறு' என்ற பெயரில் 122 பக்க நூலொன்றை வெளியிட்டார். 1980-ம் ஆண்டு அந்த நூலில் மேலும் இணைக்க வேண்டியவை அதிகமாக உள்ளன எனக் கருதி அந்நூலில் இருந்த சில விவரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு புதிதாக எழுதினார். நூலுக்கு 'சிறுவர் இலக்கிய வரலாறு' என்பதே பொருத்தமாக இருக்கும் எனக்கருதி இப்பெயரை இட்டார்.

பதிப்பு, வெளியீடு

பூவண்ணன் எழுதிய 'சிறுவர் இலக்கிய வரலாறு' என்னும் இந்நூலை சென்னை, வானதி பதிப்பகம் நவம்பர் 1980-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு/உள்ளடக்கம்

சிறுவர் இலக்கிய வரலாறு நூல் கீழ்காணும் பனிரெண்டு கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்டது.

சிறுவர் இலக்கியத்தின் தேவை

சிறுவர் இலக்கியத்தின் அவசியத்தைப் பற்றி இக்கட்டுரை கூறுகிறது. முக்கியமாக கதையோ கவிதையோ இளமையிலேயே கற்கும் சிறார்கள் பதின்ம வயதிற்குமேல் பேரிலக்கியங்களை எளிதாக உணர்ந்து வாசிக்க முடியும் என சுட்டப்படுகிறது.

சிறுவர் இலக்கியத்தின் தொன்மை

அகநானூறு பாடல் எண் 56- ல் நிலவினைப் பார்த்து 'நீ இங்கு வந்தால் உனக்கும் பால் தருவேன்' என்று ஒரு தாய் கூறுவது சிறுவர் இலக்கியக் கூறு என்று சுட்டுகிறார் பூவண்ணன். விடுகதையை பிசி என்ற சொல்லால் குறித்து அதன் வகைகளை தொல்காப்பியம் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தொல். பொருளதிகாரம் 485-வது சூத்திரத்திற்கு பேராசிரியரின் உரை சிறுவர் கதையேதான் என ஆசிரியர் நிறுவுகிறார்.

சிறுவர் பாடல்கள்

சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டுவதற்காக பாடப்பட்ட 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' பாடலில் தொடங்கி ஔவையாரின் ஆத்திச்சூடி, பாரதியாரின் பாப்பா பாட்டு வழியாக 1980 வரை வெளிவந்த சிறுவர் பாடல்களை எழுதிய அனைத்து ஆசிரியர்களையும் அவர்களின் பாடல்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர் பூவண்ணன். குறிப்பாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், சுப்பு ஆறுமுகம் போன்றவர்களின் பாடல்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

சிறுவர் கதைகள்

அச்சில் வந்த முதல் சிறுவர் கதை நூலான, வீரமாமுனிவர் வெளியிட்ட 'பரமார்த்த குரு கதை' தொடங்கி தாண்டவராய முதலியார் தொகுத்த 'கதா மஞ்சரி' அ. மாதவையா எழுதி வெளியான 'பால விநோதக் கதைகள்' போன்றவற்றின் விவரங்களும், 1980 வரை வெளியான சிறுவர் சிறுகதைகள், சிறுவர் நாவல்களைப் பற்றிய தகவல்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுவர் கட்டுரைகள்

சிறுவர்கள் வாசிக்கும் வகையில் எளிய மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. எழுதிய ஆசிரியர்கள் மற்றும் நூல்களின் பெயர்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

சிறுவர் நாடகங்கள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறுவர் நாடக நூல்களைப் பற்றிய விவரங்களை அளிக்கிறது இக்கட்டுரை. நாடகக் குழுக்களை பற்றியும் அதை நடத்தியவர்களைப் பற்றியும் நாடக அரங்குகளைப் பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன.

சிறுவர் பத்திரிக்கைகள்

தமிழில் முதன் முதலாக 1840-ம் ஆண்டு 'பால தீபிகை' என்ற முத்திங்களிதழ் வெளிவந்த செய்தியுடன் சிறுவர் பத்திரிக்கைகளின் முழு விவரங்களையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தம்பிடிப் பத்திரிக்கை, காலணாப் பத்திரிக்கை, அரையணாப் பத்திரிக்கை, ஓரணாப் பத்திரிக்கை, இரண்டணாப் பத்திரிக்கை, நான்கணாப் பத்திரிக்கை மற்றும் ஆறணாப் பத்திரிக்கை என்ற குறுந்தலைப்புகளில் இந்த விலைகளில் விற்கப்பட்ட நூல்களைப் பற்றி குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

சிறுவர் திரைப்படங்கள்

சிறுவர்களுக்கான ஆங்கிலப் படங்களையும் பிற மொழிப் படங்களையும் குறிப்பிட்டு தமிழில் வெளிவந்த சிறுவர் படங்களைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. இந்திய சிறுவர் திரைப்படக் கழகம் ( Children's Film Society India) பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

சிறுவர் நூல்கள்

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் வெளியாகும் சிறுவர் நூல்களின் எண்ணிக்கையும் தமிழில் வெளியாகும் சிறுவர் நூல்களின் எண்ணிக்கையும் ஒப்பிடப்பட்டு இதனை உயர்த்துவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை விவரிக்கிறார் பூவண்ணன்.

சிறுவர் நூலகங்கள்

சிறுவர்கள் அதிக அளவில் வாசிக்க, அதிக சிறுவர் நூல்கள் வெளிவர சிறுவர் நூலகங்களின் தேவை வலியுறுத்தப்படுகிறது.

குழந்தை எழுத்தாளர்கள்

குழந்தை இலக்கியம் எழுதும் ஆசிரியர்களைப் பற்றியும் அவர்களின் பொருளாதார நிலை பற்றியும் இக்கட்டுரையில் சுட்டப்படுகிறது.

வளம் பெறுக

நூலின் முடிவுரை.

மதிப்பீடு

சிறுவர் இலக்கியத்தின் வரலாற்றையும் பரிணாம வளர்ச்சியையும் சித்தரிக்கும் 'சிறுவர் இலக்கிய வரலாறு' இந்த வகைமையில் ஓர் முன்னோடி படைப்பாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page