under review

சி.கே. சுப்பிரமணிய முதலியார்

From Tamil Wiki

To read the article in English: C.K Subramania Mudaliar. ‎

சி.கே. சுப்பிரமணிய முதலியார்
உரைத்திறன்
பித்தன் ஒருவனின் சுயசரிதம்

சி.கே. சுப்பிரமணிய முதலியார் (சி.கே.எஸ்.) (சிவகவிமணி சுப்ரமணிய முதலியார்) (20 பிப்ரவரி , 1878-1961) சைவ அறிஞர், தமிழறிஞர்.பெரிய புராணத்திற்கு விரிவுரை எழுதியவர். வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

பிறப்பு,கல்வி

கோயம்புத்தூருக்கு தொண்டைமண்டலம் மாங்காட்டிலிருந்து குடியேறிய கொண்டல்கட்டி குடிநெல்விளையார் மரபைச் சேர்ந்த வழக்கறிஞரும் தமிழறிஞருமான உ. கந்தசாமி முதலியார்க்கும் வடிவம்மாளுக்கும் , கோயம்புத்தூரில், பிப்ரவரி 20 , 1878-ல் சுப்ரமணிய முதலியார் பிறந்தார்.

சுப்பிரமணிய முதலியார் தொடக்கக் கல்வியை தந்தையிடமும் பின் வைத்திலிங்கம் என்பவரிடம் கற்றார். 1894 முதல் 1906 வரை திருச்சிற்றம்பலம் பிள்ளை என்பவரிடம் சைவக்கல்வி பெற்றார்.தில்லைச் சிவஞான தனிவாழ்வடிகள், இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான் ஆகியோரிடமும் சைவக் கல்வி பெற்றார் என்று திருத்துறையூர் கு. ஆறுமுக நாயனார் குறிப்பிடுகிறார்.

சைவ அறிஞரான கந்தசாமி முதலியாரைப் பார்க்க வந்த சண்முக மெய்ஞான சிவாச்சாரியார் சுப்ரமணிய முதலியாருக்குச் சைவக்கல்வியை அளித்தார்.1918-ல் திருப்போரூர் சாந்தலிங்க அடிகள் சங்கத்தின் சார்பில் கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் கோவைக்கு வந்து சில மாதங்கள் தங்கி பெரியபுராண விரிவுரை ஆற்றியபோது அவருக்கு ஏடு வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. அது பெரிய புராணத்தை ஆழ்ந்து கற்க உதவியது.

தனிவாழ்க்கை

சுப்ரமணிய முதலியார் சென்னையில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலத்தில் சேலம் கங்கைவல்லியைச் சேர்ந்த கனகசபை முதலியாரின் மகளான மீனாட்சியம்மையைத் திருமணம் செய்து கொண்டார். மீனாட்சியம்மை இளமையிலேயே மறைந்துவிட்டார். அதன்பின் மீனாட்சியம்மையின் உறவினராகிய சேலத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரை மணம்புரிந்துகொண்டார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லை. மீனாட்சியம்மாள் 1956-ல் மறைந்தார். சி.கே.சுப்ரமணிய முதலியார் தன் தம்பி இராஜரத்தின முதலியாரின் மகள் மங்கையர்க்கரசியை தத்து எடுத்து வளர்த்தார்.

சுப்பிரமணிய முதலியார் கோவையில் 1903 முதல் 1951 வரை 48 ஆண்டுகள் முழுநேர வழக்கறிஞராக இருந்தார்.1910-ல் அறநிலையப் பாதுகாப்புத் துறை உறுப்பினர் பதவியேற்றார். 1922 முதல் 1925 வரை கோவை நகரசபை உறுப்பினர், துணைத் தலைவர் பதவிகளை வகித்தார்

கல்விப்பணிகள்

சுப்ரமணிய முதலியார் 1926 முதல் 1929 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி ஆணையராகப் பணியாற்றினார். சென்னை பல்கலையின் செனட் உறுப்பினர் என்னும் பொறுப்பும் வகித்தார்.

அமைப்புப் பணிகள்

  • சுப்ரமணிய முதலியார் சேக்கிழார் திருக்கூடம் என்னும் அமைப்பை நிறுவி பெரியபுராணத்தை பரப்பினார்.
  • தன் ஆசிரியர் திருச்சிற்றம்பலம் பிள்ளை நிறுவிய கோவை தமிழ்ச்சங்கம் வளர்ச்சியடைய பணியாற்றினார்.
  • சுப்ரமணிய முதலியார் தேவாரப் பாடசாலை ஒன்றையும் நடத்திவந்தார்.

சொற்பொழிவாளர்

சி.கே.சுப்ரமணிய முதலியார் புகழ்பெற்ற சைவச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் பச்சையப்பன் கல்லூரியில் 1930 ல் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு 1933-ல் 'சேக்கிழார்' என்ற பெயரில் நூலாகியது.

தேசிய விடுதலை இயக்கம்

சுப்பிரமணிய முதலியார் சிறுவயதிலேயே காங்கிரஸ் முன்னெடுத்த அரசியலில் தீவிரமாக இருந்தார். சென்னையில் லால்மோகன் கோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி அவர் பேசியதைக் கேட்க சென்ற நிகழ்வை "பித்தன் ஒருவனின் சுயசரிதை" என்ற தன்வரலாற்று நாலில் கூறுகிறார். இந்நூல் 1956-ல் எழுதப்பட்டு 2006-ல் வெளிவந்தது. விபின் சந்திர பாலருக்குக் கோவையில் விழா கொண்டாடினார். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய அய்யருக்குக் கோவையில் வரவேற்பு கொடுத்தார். அந்நியத்துணி பகிஷ்கரிப்பு இயக்கத்திலும் இவருக்குப் பங்கு உண்டு.

சுப்பிரமணிய முதலியாருக்கு அரவிந்தர், ஜி. சுப்பிரமணிய அய்யருடன் கடிதப் போக்குவரத்து இருந்தது. ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் சுட்டுக் கொன்றபோது, நீலகண்ட பிரம்மச்சாரி கொடுத்த தகவலின்படி சென்னைப் போலீசார் ஆகஸ்ட் 11, 1914-ல் சுப்பிரமணிய முதலியாரின் வீட்டைச் சோதனை செய்தனர். வ.உ.சிதம்பரம் பிள்ளை . சிறையிலிருந்தபோது சுப்பிரமணிய முதலியார் பல உதவிகள் செய்திருப்பதை வ.உ.சிதம்பரம் பிள்ளை தன் தன்வரலாற்றில் குறிப்பிடுகிறார்

இதழியல்

சி.கே.சுப்ரமணிய முதலியார் இராமச்சந்திர ரெட்டியாருடன் இணைந்து 'கொங்குமலர்' மாத இதழை நடத்தினார்

இலக்கியவாழ்க்கை

1924-ல் சுப்பிரமணிய முதலியார் முதலில் எழுதிய நூல் 'மாணிக்க வாசகர்' அல்லது 'நீத்தார் பெருமை'. 1930-ல் அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு 'சேக்கிழார் நூல்'. இவை தவிர பெருங்கருணையம்மைப் பிள்ளைத் தமிழ், திருத்தொண்டர் புராணத்தில் முருகன், அர்த்தநாரீஸ்வரர் அல்லது மாதிரிக்கு பாதியின் கருவூர்த்தேவர், வாசீகர் அல்லது மெய்யுணர்தல் என்னும் சிறு நூல்களையும் ஆக்கியுள்ளார்.

பெரியபுராண உரை

சுப்ரமணிய முதலியாரின் முதன்மைக்கொடையாக கருதப்படுவது பெரிய புராண உரை. சுப்பிரமணிய முதலியார் 1934 முதல் 1953 வரை 19 ஆண்டுகள் செலவிட்டு பெரியபுராணம் முழுமைக்கும் உரை எழுதினார்.பெரியபுராணத்திற்கு ஆறுமுகநாவலர் எழுதிய உரை காரைக்காலம்மையார் பாடலுடன் நின்றுவிட்டது. மழவை மகாலிங்கையர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், திருமயிலை சுப்பா ஞானியார், சிதம்பரம் பே.ராமலிங்கம் பிள்ளை, ஆறுமுகத் தம்புரான் சுவாமிகள், திருமயிலை சுப்பராய நாயக்கர், திருமயிலை செந்திவேலு முதலியார், காஞ்சிபுரம் ஆலாலசுந்தரம் பிள்ளை, திரு.வி.கல்யாண சுந்தர முதலியார், வா. மகாதேவ முதலியார் போன்றவர்களின் உரைகள் பொழிப்புரை, பதவுரைகளுடன் அமைந்தன. முழுமையான விரிவான உரை சுப்ரமணிய முதலியார் எழுதியதே. சுப்ரமணிய முதலியார் தன் உரைக்கு ஆதாரமாக அமைந்த நூல் வா. மகாதேவ முதலியார் எழுதிய பெரியபுராண ஆராய்ச்சி என்னும் நூலே என்று குறிப்பிடுகிறார்.

ஏழு தொகுதிகளாக சுப்ரமணிய முதலியாரின் பெரியபுராண ஆராய்ச்சியுரை வெளிவந்தது. 1935 ல் முதல் தொகுதியும் 1954ல் ஏழாம் தொகுதியும் வெளிவந்தன. 5 ஜூன் 1935 சேக்கிழார் திருநாளில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் ஆயிரம்கால் மண்டபத்தில் நூல்வெளியீடு நடைபெற்றது. முதலியாரின் ஆராய்ச்சி உரை வெளிவர திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுரம் மடங்களும் சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் உதவின.. சுப்பிரமணிய முதலியார் 1935க்கு முன்பும் பின்னரும் மு. கதிரேசன் செட்டியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோர்களுடன் உரையாடியபோது கிடைத்த தகவல்களையும் இந்த உரையில் பயன்படுத்தியிருக்கிறார். அவர் காலத்தில் வெளிவந்த கல்வெட்டுகளையும் பல்லவ சோழ வரலாற்றையும் தன் உரை விளக்கத்தில் கொடுத்துள்ளார்.

சைவம்

சுப்ரமணிய முதலியார் நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கு முதலியார் பயணம் செய்தார். நம்பியாரூரர், திருவெண்ணெய்நல்லூர் முதல் திருவாரூர் வரை சென்ற யாத்திரை வரைபடத்தை உருவாக்கினார். தமிழகத்துக் கோவில்களில் உள்ள பெரிய புராணச் சிற்பங்களை அடையாளம் கண்டு கள ஆய்வு நடத்தித் தகவல்கள் சேகரித்து பதிப்பித்தார். பட்டீஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தச் செலவில் திருப்பணிகள் செய்தார். கும்பாபிஷேக விழாக்களை பொறுப்பேற்று நடத்தினார்.

-ல்லற வாழ்வின் போதே சைவ நெறிக்கு ஏற்ப சுப்ரமணிய முதலியார் சிதம்பரம் முத்துக் குமாரக் குருக்களிடம் சிவ தீக்கை பெற்றார். -ல்லற வாழ்வின் பிற்காலத்தில் இவர் அகத்துறவியாக வாழ்ந்தார். வாழ்வின் நிறைநிலையில் மதுரை ஆதீனத்தின் வழியாகப் புறத்துறவும் ஏற்றார் . 1958ல் சம்பந்த சரணாலயத் தம்புரான் என்னும் பெயருடன் ருத்திராட்சம் அணிந்து துறவியானார். (பார்க்க: முதலாம் சம்பந்த சரணாலயர் , சம்பந்த சரணாலய தம்புரான்)

விருதுகள்

  • 1940 ல் சிவகவிமணி என்ற பட்டத்தை சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அளித்தது.
  • 1954 ல் திருமறை ஞான பானு என்ற பட்டம் மதுரை ஆதினத்தாரால் வழங்கப் பெற்றது.

மறைவு

சி.கே.சுப்ரமணிய முதலியாரின் அறுபதாம் ஆண்டு விழா திருக்கடையூரிலும் எழுபதாமாண்டு விழா பேரூரிலும் நடைபெற்றது. துறவுபூண்டு கோவையில் வாழ்ந்தவர் ஜனவரி 24, 1961-ல் காலமானார்.

வாழ்க்கை வரலாறுகள்

சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதிப்பாசிரியர்கள் - முனைவர் சா.கிருட்டின மூர்த்தி, முனைவர் ச. சிவகாமி,

இலக்கிய இடம்

சி.கே.சுப்ரமணிய முதலியார் பெரியபுராணத்திற்கு எழுதிய உரைக்காக பெரிதும் மதிக்கப்படுகிறார். பிற்காலத்தைய உரைகள் பெரும்பாலும் அவருடைய உரையின் வழிவந்தவை. வரலாற்றுப்பின்புலம், தத்துவம் ஆகியவற்றை விரிவாக கருத்தில்கொண்டு எழுதப்பட்டது அவ்வுரை.

நூல்கள்

செய்யுள்
  • திருப்புக் கொளியூர் அவினாசிப் பெருங்கருணையம்மைப் பிள்ளைத் தமிழ்
  • கந்தபுராண போற்றிக் கலிவெண்பா
  • திருப்பேரூர் இரட்டை மணிமாலை
  • மருதங்கோவை
உரைநடை
  • மாணிக்க வாசகர் அல்லது நீத்தார் பெருமை (1924)
  • சேக்கிழார் நூல் (1930).
  • சேக்கிழாரும் சேயிழைக் கிழாரும்
  • செம்மணித்திரள்
  • கருவூர்த்தேவர்
  • திருத்தொண்டர் புராணத்தில் முருகன்
  • அர்த்தநாரீஸ்வரர் அல்லது மாதிருக்கும் பாதியான்
  • திருத்தொண்டர் புராணத்தில் முருகன்
  • வாசீகர் அல்லது மெய்யுணர்தல்
  • ஒரு பித்தனின் சுயசரிதை (தன்வரலாறு)
உரை
  • க்ஷேத்திர திருவெண்பா (பதினோராம் திருமுறை)
  • பெரியபுராணம் (பந்னிரண்டாம் திருமுறை)

உசாத்துணை


✅Finalised Page