under review

குடைமங்கலம்

From Tamil Wiki

குடைமங்கலம் பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனின் வெண்கொற்றக்குடை ஆட்சியின் குறியீடாக அமைவதால் குடை மங்கலம் அரசனின் நல்லாட்சியை வாழ்த்தும் துறை.

விளக்கம்

குடை மங்கலம் என்பதற்கு குடையைப் புகழ்தல் என்பது பொருள். அரசனுடைய வெண்கொற்றக் குடையைப் புகழ்வது ஒரு பழம் மரபு.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் 'நான்கு திசைகளிலும் தன் புகழ் பெருகும்படி அரசுவீற்றிருந்த மன்னனின் குடையைப் புகழ்தல்' என குடைமங்கலத்தின் இலக்கணத்தைக் கூறுகிறது.

நால்திசையும் புகழ்பெருக
வீற்றிருந்தான் குடைபுகழ்ந்தன்று (கொளு.34)

தன்னைச் சேர்ந்தார்க்குக் குளிர்ந்த நிழல் தந்து, தன் பகைவர்களுக்குக் கதிரவன்போல் வெப்பம் தரும் - என்று குடையை வெண்பா சிறப்பிக்கிறது.

'தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா
வெந்நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம்....... ......

தொல்காப்பியம்

"நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும்" என்று தொல்காப்பியத்தின் புறத்திணையியல் கூறுகிறது.

எடுத்துக்காட்டு

புறநானூறு 60

முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, 5
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன்,
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், 10
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே?

செந்நிற மீன்கள் இமைக்கும் வானத்தில் தோன்றும் முழுநிலாவைப் பார்த்து விறலியும் பாணனும் தம் அரசன் வளவன் (பெருந்திருமாவளவன்) வெண்கொற்றக் குடை போல் உள்ளதால் தொழுவதாகக் கூறு குடையின் சிறப்பைப் பாடுவதால் இது குடை மங்கலம்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 14:26:55 IST