உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும், புறநானூற்றிலும் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் தாமோதரன். உறையூரில் பிறந்தார். மருத்துவர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும் (133, 257), புறநானூற்றிலும்(60, 170, 321) உள்ளன. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும், பிட்டங்கொற்றனையும் பாடியுள்ளார்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்
- உறையூரை ஆண்டவன். குராப்பள்ளியில் உயிர் துறந்தான். பிற அரசர்களுடன் நட்பு கொண்டிருந்தான். பாண்டி வேந்தன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியுடன் நட்பு கொண்டிருந்தான்.
- கடல் உப்பு ஏற்றிய வண்டியைக் காட்டுமலையில் இழுத்துச்செல்லும் வலிமை மிக்க காளைமாடு போன்றவன் வளவன்.
பிட்டங்கொற்றன்
- வீட்டு வேலியில் உள்ள நெல்லிமரத்தின் கனிகளை உண்ணும் காட்டுப் பசுக்கள், அழகிய வீடுகளுடைய சிற்றூர், பகற் பொழுதெல்லாம் வேட்டையாடித் திரிகின்ற, கல்வியில்லாத, வேற்பயிற்சியுள்ள வேட்டையாடி உண்ணும் வேடர்கள், “ஒல்” என்னும் ஓசையுடன் பறை கொட்டுபவனின் பறையொலி, புலி படுத்திருக்கும் மலையில் ஆந்தையின் அலறல் மாறி மாறி ஒலிக்கும் மலை நாட்டுக்குத் தலைவன்.
- சிறிய கண்களையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களில் விளையும் ஒளி பொருந்திய முத்துகளை விறலியர்க்குக் கொடுப்பவன். நாரைப் பிழிந்து எடுத்த விரும்பத்தக்க கள்ளின் தெளிவை, யாழோடும் பண்ணோடும் பாடும் பாணர்களுக்குக் கொடுத்து அவர்களையும் அவர்களின் சுற்றத்தாரையும் உண்ண வைப்பவன். பகைவர்க்கு அவன் இரும்பைப் பயன்படுத்தும் வலிய கொல்லனின் உலைக்களத்தில் விரைந்து சம்மட்டியால் அடிக்கப்படும் பட்டடைக்கல் போன்ற வலிமையுடையவன்.
பிற
- வெண்கடம்பு மலர்கள் அணிந்த தலைவி.
- சிறப்பாகப் போர்புரியும் ஆற்றலுடைய புறத்தே புள்ளிகளையுடைய பெண்பறவையின் சேவல் வெண்ணிறமான எள்ளை உண்கிறது.
- வரகுக் கதிர்களின் மறைவில் எலி மறைந்து வாழ்கிறது.
பாடல்கள்
- அகநானூறு 133[1]: பாலை ('பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது)
- அகநானூறு 257[2]: பாலை (உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது)
- புறநானூறு 60[3] (திணை: பாடாண்; துறை: குடை மங்கலம்)
- புறநானூறு 170[4] (திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை)
- புறநானூறு 321[5] (திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை)
பாடல் நடை
- அகநானூறு 133
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?'
- புறநானூறு: 60
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து,
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்
- உறையூர் மருத்துவன் தாமோதரனார்: tamilvu
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Nov-2022, 09:31:50 IST