கண்ணன் என் கவி
கண்ணன் என் கவி: பாரதியின் கவிதையும் இலக்கிய பீடமும் (1937 ) கு.ப.ராஜகோபாலன் - சிட்டி இணைந்து எழுதிய நூல். பாரதி மகாகவி அல்ல என்று பி.ஶ்ரீ.ஆச்சார்யா மற்றும் கல்கி கூறியதற்கு மறுப்பாக பாரதியை மகாகவி என்று நிறுவும் நோக்கத்துடன் எழுதப்பட்ட இலக்கியவிவாத நூல்.
எழுத்து, வெளியீடு
பாரதி மகாகவியா விவாதம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. கண்ணன் என் கவி கு.ப. ராஜகோபாலன், சிட்டி இருவரும் இணைந்து எழுதியது. 1937ல் இந்நூலை சுதந்திரச் சங்கு காரியாலயம் திருவல்லிக்கேணி சென்னை வெளியிட்டது. இந்நூல் வ.ராமசாமி ஐயங்காருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. முன்னர் இந்நூலின் உள்ளடக்கம் கட்டுரைகளாக தினமணி இதழிலும் சுதேசமித்திரன் இதழிலும் வெளிவந்தது.
பின்புலம்
1935 முதல் 1937 வரை பாரதியை மகாகவி என்று வ.ரா குறிப்பிட்டமைக்கு எதிராக கல்கி முதலியோர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் நிகழ்ந்த விவாதத்தில் பாரதி மகாகவியே என்ற கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.
உள்ளடக்கம்
இந்நூல் கு.ப.ரா எழுதிய 'பாரதியின் கவிதை', சிட்டி எழுதிய 'பாரதியின் இலக்கிய பீடம்' என்னும் இரண்டு பகுதிகள் கொண்டது. 'சிலமாதங்களுக்கு முன் தமிழ்ப் பத்திரிகைகளில் அவருடைய கவிதை பற்றி ஒரு விவாதம் நடந்தது. அவர் ஒரு மகாகவி என்றனர் சிலர். அல்ல, சாதாரண நல்ல கவிதான் என்றனர் சிலர். அவ்விவாதத்தின் தொடர்ச்சியாக, அதன் ஒரு உற்பத்தியாக, பின்வரும் கட்டுரைகள் எழுதப்பட்டன. பாரதி மகாகவி என்று ஸ்தாபிக்க இவற்றில் சிறு முயற்சி செய்யப்பட்டுள்ளது. அவரது காவிய எழுத்துக்கள் யாவும் கூடியவரையில் பாரபட்சமற்ற ஒரு சிறு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன' நூலாசிரியர்கள் முன்னுரையில் குறிப்பிடுகிறார்கள்.
பாரதியை தேசபக்தக் கவிஞர், சீர்திருத்தக் கவிஞர், வேதாந்தக் கவிஞர் என வெவ்வேறு அடையாளங்கள் போட்டுச் சுருக்குவதற்கு எதிரான தர்க்கங்களுடன் தொடங்கும் இந்நூல் மகாகவி என்பவர் யார் என்பதை உலக நவீனக் கவிதைமரபைக்கொண்டு வரையறை செய்து, அதனடிப்படையில் பாரதி மகாகவியே என வாதிடுகிறது.
அழகியல்
தமிழ் அழகியல் விமர்சனம் என்னும் இலக்கிய அணுகுமுறை வ.வே. சுப்ரமணிய ஐயர் தொடக்க காலத்தில் சுப்ரமணிய பாரதியின் கண்ணன்பாட்டு நூலுக்கு எழுதிய முன்னுரையில் இருந்தும், கம்பர் கவிதைகளுக்கு எழுதிய ஆங்கில ஆய்வுரையில் இருந்தும் தொடக்கம் கொள்கிறது. தமிழில் மரபிலக்கியம் சார்ந்த இலக்கிய அணுகுமுறையே இருந்தது. அது தூய செவ்வியலையும், கற்பனாவாதச் செவ்வியலையுமே ஏற்றுக்கொண்டது. ஐரோப்பியச் சூழலில் உருவான நவீன கற்பனாவாதம் பாரதி வழியாகவே தமிழில் அறிமுகமாகியது. மரபு சார்ந்த அணுகுமுறையால் நவீனக் கற்பனாவாதத்தை மதிப்பிட முடியவில்லை. அதற்கான முன்னுதாரணமான வழியை உருவாக்கிய நூல் கண்ணன் என் கவி.
இலக்கியம் என்பது செய்திறன், பேசுபொருள் ஆகிய இரண்டையும் சார்ந்தது அல்ல என்றும் அது கவிஞனின் உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிகளின் இயல்பான தீவிரவெளிப்பாடு என்றும் இந்நூல் வாதிடுகிறது. கவிஞனை மதம் அல்லது கொள்கை சார்ந்த ஏதேனும் பொதுப்போக்கின் உறுப்பாக பார்க்கும் பார்வையை நிராகரித்து கவிஞன் என்னும் தனியாளுமையாகவே அணுகவேண்டும் என கூறுகிறது. நவீனக் கவிஞன் என்னும் அடையாளத்தை தமிழில் நிறுவிய நூல்களில் முன்னோடியானது இது.
விவாதங்கள்
கண்ணன் என் கவி நூலை தொடர்ந்து கவிதையின் அழகியல் குறித்த விவாதங்கள் நிகழும் என்று அதன் ஆசிரியர்கள் எதிர்பார்த்தாலும் அவ்வாறு நிகழவில்லை. 1981-ல் தான் அந்நூலின் மறுபதிப்பு வெளிவந்தது. ஆனால் பாரதி ஒரு மகாகவி என்னும் எண்ணம் தமிழ் பொதுச்சூழலில் நிலைகொண்டது.
இலக்கிய இடம்
கண்ணன் என் கவி இரண்டு வகையில் முக்கியத்துவம் கொண்ட படைப்பு.
தமிழில் அழகியல் சார்ந்த இலக்கிய விமர்சனக் கொள்கைகள் வேரூன்றத் தொடங்கிய காலகட்டத்தில் எழுதப்பட்ட முழுமையான இலக்கியக் கோட்பாட்டு நூல் இது. கற்பனாவாதம் சார்ந்து இது இலக்கிய அழகியலை வரையறை செய்கிறது. பிற்பாடு தமிழில் இந்த அழகியல் கண்ணோட்டம் நவீனத்துவ அழகியல் கண்ணோட்டத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும் தொடக்கம் என்னும் நிலையில் இந்நூல் உருவாக்கிய விவாதம் தமிழில் அழகியல் விமர்சனத்துக்கான அடிப்படைகளை உருவாக்கியது.
பாரதி மறைந்த சில ஆண்டுகளுக்குள் வெளிவந்த இந்நூல் அவருடைய இலக்கிய இடத்தை நிறுவியதில் முக்கியமான பங்காற்றியது. வ.வெ.சு ஐயர் கண்ணன் பாடல்கள் நூலில் பாரதிக்கு எழுதிய முன்னுரையில் முன்வைக்கும் பார்வையை விரிவாக்கம் செய்து பாரதியை ஒரு கற்பனாவாதக் கவிஞர் என்று நிறுவுவது மட்டுமல்லாமல் நவீன இலக்கியத்தின் முன்னோடியாகவும் இந்நூல் வரையறை செய்தது.
உசாத்துணை
- கண்ணன் என் கவி- இணையநூலகம்
- கண்ணன் என் கவி இணைய வடிவம்
- மகாகவி விவாதம் ஞானி
- மகாகவி பாரதியார் வ.ரா
- பாரதி - மறைவு முதல் மகாகவி வரை- கா.சிவத்தம்பி. அ.மார்க்ஸ் (1982)இணையநூலகம்
- பாரதியின் கவித்துவம் ஞானி தஞ்சை தமிழ்ப்பல்கலை வெளியீடு
- ந.சுப்பு ரெட்டியார் கண்ணன் பாட்டுத்திறன்
- பாரதி வழி. ப.ஜீவானந்தம் இணையநூலகம்
- பாரதி பற்றி க.நா.சு. இலக்கியவட்டம் கட்டுரை
- பாரதி தோன்றிய காலம். பாரதி பற்றிய க.நா.சுப்பிரமணியம் எழுதிய கட்டுரைகள். தொகுத்தவர் : துரை.லட்சுமிபதி
- மக்கள் கவி பாரதி- அண்ணாத்துரை
- மகாகவி பாரதியார். சி.என்.அண்ணாத்துரை
- கலையின் பிறப்பு- க.நா.சு கட்டுரை
- மகாகவி விவாதம் ஜெயமோகன்
- மகாகவி விவாதம் தொடர்ச்சி ஜெயமோகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2025, 16:52:24 IST