under review

உமா பதிப்பகம்

From Tamil Wiki

உமா பதிப்பகம் (1986) சென்னையில், இராம. இலட்சுமணனால் தொடங்கப்பட்டது. செவ்விலக்கிய நூல்கள், இதிகாச, புராண நூல்கள், சமய, பக்தி, ஜோதிட நூல்கள், சிறார் நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்தது.

(உமா பதிப்பகம் என்ற பெயரில் கொழும்பிலும், மலேசியாவிலும் இரு பதிப்பகங்கள் செயல்படுகின்றன)

உமா பதிப்பக நூல்கள்

தோற்றம், வெளியீடு

தேவக்கோட்டையைச் சார்ந்த இராம. இலட்சுமணன் செட்டியார், 1986-ல், சென்னையில், உமா பதிப்பகத்தை நிறுவினார். முதல் வெளியீடாக, ’அனுபவத் தையற்கலை - சிறுவா், சிறுமியா், பெண்கள் உடை’ என்ற நூலை வெளியிட்டார். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பாரதியாா், பாரதிதாசன், நாமக்கல் கவிஞா் வெ. இராமலிங்கம் பிள்ளை போன்றோரின் நூல்களை மலிவு விலையில் வெளியிட்டார்.

இலக்கியம், வரலாறு, பொது நூல்கள், மருத்துவ நூல்கள், பன்னிரு திருமுறை, இதிகாசம், புராணம், சிறார் இலக்கியம் எனப் பல வகைமைகளில் உமா பதிப்பகம் நூல்களை வெளியிட்டது. கம்பராமாயணம், மகாபாரதம், அஷ்ட பிரபந்தம் போன்றவற்றை வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியாரின் உரையுடன் பதிப்பித்தது. ஞா. மாணிக்கவாசகன் உரையுடன் கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வெளியிட்டது.

மு.பெ. சத்தியவேல் முருகனாரின் ‘பன்னிரு திருமுறை’ நூலை வெளியிட்டது. காரைக்குடி கம்பன் கழக நூல்கள் பெரும்பாலானவை உமா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. உமா பதிப்பகம் வெளியிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்கள், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதுகளைப் பெற்றன. உமா பதிப்பகத்தின் நூல்கள் பல, தமிழகத்தின் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக உள்ளன.

இராம. இலட்சுமணனின் மகன் லேனா. ராமநாதன், தற்போது உமா பதிப்பகத்தின் நிர்வாகியாக உள்ளார்.

நூல்களும் ஆசிரியர்களும்

உமா பதிப்பகம் கீழ்க்காணும் நூல்களை வெளியிட்டது.

  • பன்னிரு திருமுறை - இராம லெட்சுமணன்
  • திருக்குறள் – மூலமும், பரிமேலழகர் உரையும் - வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
  • கம்பராமாயணம் ஆறு காண்டங்கள், ஏழு தொகுதிகள் – உரை - வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
  • வில்லிபுத்தூரார் இயற்றிய மகாபாரதம், ஏழு தொகுதிகள் – உரை - வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
  • பிள்ளைப்பெருமாளையங்கார் அருளி செய்த அஷ்ட பிரபந்தம் - மூலமும், உரையும் - வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்; சே .கிருஷ்ணமாச்சாரியார்; வை.மு.சடகோபராமானுஜாசாரியார்
  • திருப்புகழ் ஐந்து தொகுதிகளும் உரையுடன் - வ.சு.செங்கல்வராயப் பிள்ளை
  • திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - முனைவர் பழ.முத்தப்பன்
  • நாலாயிர திவ்யப் பிரபந்தம் - மூலமும் உரையும் - தி. திருவேங்கட இராமானுஜதாசன்
  • ஐம்பெரும் காப்பியங்கள் உரையுடன் - ஞா. மாணிக்கவாசகன்
  • நெஞ்சறி விளக்கம் - மூலமும் உரையும் - ஞா. மாணிக்கவாசகன்
  • உமர்கய்யாம் பாடல்கள் - ஞா. மாணிக்கவாசகன்
  • விவேக சிந்தாமணி தெளிவுரை - ஞா. மாணிக்கவாசகன்
  • அவ்வைக்குறள் மூலம், விளக்க உரை, அரும்பதவுரை - ஞா. மாணிக்கவாசகன்
  • அறநெறிச்சாரம் - மூலமும் உரையும் - ஞா. மாணிக்கவாசகன்
  • உயிரினத்தின் கதை - கல்வி கோபாலகிருஷ்ணன்
  • சைவ சித்தாந்த சாத்திரங்கள் (மெய்கண்ட சாத்திரங்கள்) - முனைவர் பழ.முத்தப்பன்
  • அருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள் - வ.சு.செங்கல்வராயப் பிள்ளை
  • திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) - புலவர் பி.ரா. நடராசன்
  • திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) - புலவர் பி.ரா. நடராசன்
  • தாயுமானார் பாடல்கள்
  • எட்டுத்தொகை நூல்கள்
  • ஐம்பெரும் காப்பியங்கள்
  • திருப்புகழ் - ஐந்து தொகுதிகள்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

மற்றும் பல.

மதிப்பீடு

உமா பதிப்பகம், இலக்கிய நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயமுன்னேற்றச் சிந்தனை நூல்கள், தமிழகச் சுற்றுலாத் தளங்கள் பற்றிய நூல்கள், இயற்கை மருத்துவம், தொழில் மற்றும் ஜோதிடம் குறித்த நூல்கள், சமயம், புராணம், இதிகாசம், சிறார் இலக்கியம் எனப் பல வகைமைகளில் நூல்களைப் பதிப்பித்தது. பழைய இலக்கிய நூல்கள் பலவற்றை உரையுடன் மீண்டும் பதிப்பித்தது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பில்லாமல் இருந்த தமிழறிஞர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் கம்ப ராமாயண உரை நூல்களைப் பதிப்பித்தது உமா பதிப்பகத்தின் குறிப்பிடத்தகுந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2024, 08:43:24 IST