இளையவன் (கவி ஆளுமை)

இளையவன் (கே. பாலசுப்பிரமணியன்) (பிறப்பு: ஜூன் 10, 1945) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர். உலக வங்கி திட்டத்தின் மண்டலக் கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றினார். மரபுக் கவிதைகளையும் சிறார்களுக்கான பாடல்களையும், சிறுகதைகளையும் எழுதினார். கவிமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
கே. பாலசுப்பிரமணியன் என்னும் இயற்பெயர் கொண்ட இளையவன், ஜூன் 10, 1945 அன்று, மயிலாடுதுறையில் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - ராஜலக்ஷ்மி இணையருக்குப் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
தனி வாழ்க்கை
இளையவன் உலக வங்கி திட்டத்தின் மண்டலக் கண்காணிப்பு அதிகாரியாகப் (Regional Superintendent, World Bank Project) பணியாற்றினார். மணமானவர். மனைவி, பவானி. இவர்களுக்கு இரு மகன்கள்.

இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
இளையவன் அழ. வள்ளியப்பாவின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். பள்ளி மாணவராக இருக்கும்போதே கவிதைகள் எழுதினார். மூத்த சகோதரர் குருமூர்த்தி என்னும் மாயூரனால் இலக்கிய ஆர்வம் பெற்றார். அவரைப் பின்பற்றி இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். இளையவனின் முதல் சிறுகதை 'எமன் வேஷம்' புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 'டிங் டாங்' இதழில் பிரசுரமானது. தொடர்ந்து 'கண்ணன்' உள்ளிட்ட சிறார் இதழ்களிலும், தினமணியின் இணைப்பாக வெளிவந்த 'பாலர் பவன'த்திலும் சிறார்களுக்கான பாடல்கள், சிறுகதைகள், தொடர்களை எழுதினார்.
கவிதை முயற்சிகள்
இளையவனின் முதல் கவிதை நூல், 1960-ல், எழுத்தாளர் ரமணீயன் நடத்தி வந்த அகல் பதிப்பகம் மூலம் வெளியானது. தொடர்ந்து இளையவன் கவிதைகளில் கவனம் செலுத்தினார். வள்ளியப்பாவையும், சுரதாவையும், 'லெமன்' எனப்படும் லெட்சுமணனையும் தனது முன்னோடிகளாகக் கொண்டார். காஞ்சி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதியால் 'இளையவன்' என்று பெயர் சூட்டப்பட்டார். அதையே தனது புனை பெயராகக் கொண்டு எழுதினார்.
இளையவன், கண்ணன் தொடர்கதைப் போட்டிக்காக 'புதுமை நெஞ்சம்' என்ற நாவலை எழுதினார். சிறுகதை, நாவல், கவிதை, உபன்யாசம் என்று பல தளங்களில் இயங்கினார். ஆர்வி, கே.ஆர். வாசுதேவன், அழ. வள்ளியப்பா போன்றோரது அறிவுறுத்தலால் கவிதையை மட்டுமே தனது களமாகக் கொண்டு செயல்பட்டார். காந்தியின் வரலாற்றை 'மோகனப் புயல்' என்ற தலைப்பில் கவிதைத் தொடராக கலைமகளில் எழுதினார். 'சிறுவர் இராமாயணம்' என்ற தலைப்பில் சிறார்களுக்காக இராமாயண நூலை எழுதினார். ரத்னபாலாவில் 13 மாதங்கள் ஒரு கவிதைத் தொடரை எழுதினார். காமராஜர், ஸ்ரீ அன்னை, அரவிந்தர் பற்றிய தொடர்களை எழுதினார். இவை பின்னர் நூல்களாக வெளிவந்தன.
அமைப்புச் செயல்பாடுகள்
இளையவன், சிறுவனாக இருக்கும்போதே, 1957-ல், தான் வசித்த குடவாசலில் நேதாஜி சிறுவர் சங்கத்தை நிறுவினார். மாணவர்களை ஒருங்கிணைத்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தினார்.
சென்னையில் வசித்தபோது பாரதி கலைக்கழகத்துடன் இணைந்து பல்வேறு கவியரங்குகளைத் தலைமை தாங்கி நடத்தினார். ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அக்காலத்துப் பல இளம் கவிஞர்களை ஊக்குவித்தார்.
இளையவன், திருச்சியில் பணியாற்றும்போது சிறார்களையும், இளைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'இலக்கியச்சாரல்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். கவிஞர் வைரபாரதி, முனைவர் சி.ஆர். மஞ்சுளா உள்ளிட்ட பலர் இலக்கியச் சாரல் அமைப்பு மூலம் இலக்கிய ஆர்வமும் கவனமும் பெற்றனர்.
இளையவன், ஹைதராபாத்தில் வசிக்கும் போது 'நிறை இலக்கிய வட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹைதராபாத்தில் வசிக்கும் தமிழர்களிடையே இலக்கிய வளர்க்கும் பணியை முன்னெடுத்தார். பட்டிமன்றம், கவியரங்கம், ஆண்டு விழா, கம்பன் விழா, பாரதி விழா எனப் பல இலக்கிய நிகழ்வுகளை நிறை இலக்கிய வட்டம் மூலம் ஒருங்கிணைத்தார்.
இளையவன், 700-க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார்.
இதழியல்
இளையவன், 'இலக்கியச்சாரல்' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஹைதராபாத்தில் 'நிறை' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.
இளையவனால் ஊக்குவிக்கப்பட்ட அவரது மாணவர்கள், 'இளையவன்' என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினர்.
ஊடகம்
இளையவன் வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். சான்றோர் சிந்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
விருதுகள்/பரிசு
- ஆனந்த விகடன் நடத்திய சிறுவர் இலக்கியப் போட்டியில் கவிதைக்கு முதல் பரிசு
- கண்ணன் தொடர்கதைப் போட்டிக்காக எழுதிய 'புதுமை நெஞ்சம்' நாவலுக்கு முதல் பரிசு
- குன்றக்குடி அடிகளார் அளித்த 'பட்டிமன்றச் சீராளர்' விருது
- மதுரை ஆதினம் அளித்த 'கவிஞானவாரிதி' விருது
- பாரதி கலைக்கழகம் அளித்த 'கவிமாமணி' விருது
- சேக்கிழார் மன்றம் அளித்த 'பாலகவி ரத்னா' பட்டம்
- கண்ணதாசன் விருது
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது
- கவி காளமேகம் விருது
- கவிச்சக்கரவர்த்தி பட்டம்
- எழுத்துச்சுடர் பட்டம்
வாழ்க்கைப் பதிவுகள்
பூர்ணிமா என்பவர் இளையவனுடைய கவிதைகளைப் பற்றி ஆராய்ந்து அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.
இளையவனின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுத்தாளர் ஜெயந்தி நாகராஜனும் ஆங்கிலத்தில் துளசிபட்டும் எழுதினர். முனைவர் சி.ஆர். மஞ்சுளா 'மரபுப் பூங்காவில் இளையவன்' என்ற தலைப்பில் இளையவனின் கவிதைகளைப் பற்றி ஆராய்ந்து திறனாய்வு நூல் ஒன்றை வெளியிட்டார். கவிஞர் வைரபாரதி இளையவன் பற்றி 'காவிய தவம் என்ற நூலை எழுதினார்.
மதிப்பீடு
இளையவன், தனது இலக்கியச்சாரல், நிறை இலக்கிய அமைப்புகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஊக்குவித்தார். சிறார்களுக்காகப் பங்களித்த மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராகவும், மரபு வழுவாது இனிய, எளிய தமிழில், சந்த நயங்களுடன் பல கவிதைகளை எழுதிய முன்னோடி தமிழ்க் கவிஞர்களுள் ஒருவராகவும் இளையவன் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- புதுமை நெஞ்சம் நாவல்
- மோகனப் புயல் (காந்தி வரலாறு)
- பெருந்தலைவர் காமராஜர் (காமராஜர் வரலாறு)
- ஸ்ரீ அன்னை (கவிதைக் காவிய நூல்)
- ஸ்ரீ அரவிந்தர் (கவிதைக் காவிய நூல்)
- சிறுவர் இராமாயணம்
மற்றும் பல
உசாத்துணை
- இளையவன் நேர்காணல், தென்றல் இதழ்
- இலக்கியச் சாரல் வெள்ளிவிழா, தினசரி இதழ் கட்டுரை
- நிறை இலக்கிய வட்ட ஆண்டு விழா, யூ ட்யூப் தளம்
- இளையவன் கவிதை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:11:35 IST