under review

ஜெயந்தி நாகராஜன்

From Tamil Wiki
முனைவர், எழுத்தாளர் ஜெயந்தி நாகராஜன்
Dr, Jeyanthi Nagarajan

ஜெயந்தி நாகராஜன் (ஓ.எஸ். ஜெயந்தி; முனைவர் ஜெயந்தி நாகராஜன்) (பிறப்பு: மார்ச் 25, 1954) தமிழக எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர்,நாடக நடிகர். பள்ளி ஒன்றை நிர்வகித்தார். பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். குழந்தை இலக்கியத்திற்குப் பல பங்களிப்புகளைத் தந்தார்.

பிறப்பு, கல்வி

ஜெயந்தி நாகராஜன், சென்னை திருவல்லிக்கேணியில், மார்ச் 25, 1954 அன்று, சதாசிவன்-சாரதா தம்பதியினருக்குப் பிறந்தார். திருவல்லிக்கேணியில் பெற்றோர் இவர் பெயரில் நடத்தி வந்த ‘ஜெயந்தி சிறுவர் பள்ளி'யில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வி கற்றார். தமிழில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (Mphil)பட்டங்கள் பெற்றார். ’அழ. வள்ளியப்பாவின் படைப்புக்களில் வாழ்வியல் அறங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சென்னை அம்பத்தூரில் ’சத்தியமூர்த்தி வித்யாஷ்ரம்’ எனும் பள்ளியைத் தொடங்கி நடத்தினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கணவர்: நாகராஜன், ஸ்ரீ சக்ரா டயர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். இவர்களுக்கு ஜனனி மகேஷ், ரோஹிணி தியாகராஜன் என இரு மகள்கள்.

Jeyanthi Nagarajan Books
Jeyanthi Nagarajan Books
ஜெயந்தி நாகராஜன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஜெயந்தி நாகராஜனின் தந்தை சதாசிவன் ஓர் எழுத்தாளர். அவர் மூலம் நூல்கள் பல அறிமுகமாயின. செய்தித் துணுக்குகளை, வாசகர் கடிதங்களை ‘ஓ.எஸ். ஜெயந்தி ' என்ற பெயரில் இதழ்களுக்கு அனுப்பினார். அவை வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அழ. வள்ளியப்பா, ஜெயந்தி நாகராஜனை ஊக்குவித்தார். வள்ளியப்பாவின் பாடல்களை மையமாக வைத்துக் கதாகாலட்சேபம் செய்து டி.கே.ஷண்முகம், கொத்தமங்கலம் சுப்பு போன்றோரின் பாராட்டுதல்களைப் பெற்றார். தினமணி கதிர், அமுதசுரபி, லேடீஸ் ஸ்பெஷல் போன்ற இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். பொம்மை, பேசும்படம், ஃபிலிமாலயா போன்ற இதழ்களில் பங்களித்துள்ளார்.

ஜெயந்தி நாகராஜன், பள்ளிக் குழந்தைகளுக்காகப் பல பாடல்களை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ‘முத்துச்சரம்’ என்ற பெயரில் நூலாக வெளியானது. தொடர்ந்து கதைகள், நாடகங்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் பலவற்றை எழுதினார். ஜெயந்தி நாகராஜனின் பாடல்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. வள்ளியப்பா மீது கொண்ட பற்றால் ‘பிள்ளைக் கவியரசர் வள்ளியப்பா’ என்ற தலைப்பில் புதுக்கவிதை வடிவில் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

ஜெயந்தி நாகராஜன் எழுதிய ‘இலக்கிய நாடகங்கள்’ எனும் நூல் மதுரை நாயக்கர் கல்லூரியில் மாணவர்கட்குப் பாடமாக வைக்கப்பட்டது. சுமார் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் பெரும்பாலானவை சிறார்களுக்கானவை. இவரது பெயரில் ‘ஜெயந்தி சிறுவர் சங்கம்’ என்ற அமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவரது படைப்புக்களை மாணவர்கள் இளம் முனைவர், முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தனர்.

கவிதை உறவி விருது

நாடகம்

ஜெயந்தி நாகராஜன், வானொலி நாடகங்கள் பலவற்றில் நடித்தார். செந்தாமரை,ஹெரான் ராமசாமி, லதா, இந்திரா, சி.ஐ.டி. சகுந்தலா, நாடக நடிகர் ப்ரசன்னா, ஜெயகுமார், க்ரேஸி மோகன் குழுவைச் சார்ந்த ரமேஷ் எனப் பலருடன் இணைந்து நடித்தார்.

கே.ஆர். வாசுதேவன் விருது

தொலைக்காட்சி

சென்னைத் தொலைக்காட்சியின் மனைமாட்சி பகுதியில் பலரை நேர்காணல் செய்தார். பல கவியரங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதை வாசித்தார். ‘ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சிகான முக்கிய விருந்தினர்கள், அதற்கான கருத்துரை போன்றவற்றில் பங்களித்தார். யு.எம்.கண்ணனுடன் இணைந்து இவர் இடம் பெற்ற ‘உரைகல்’ நிகழ்ச்சி, சுவைஞர்களால் வரவேற்கப்பட்ட ஒன்று. சன் தொலைக்காட்சியில் பெப்ஸி உமா நடத்திய ‘ஸ்டார் ஷோ’ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பேட்டிக்கான வினாக்களைத் தயாரித்து கொடுப்பவராகவும் பங்களித்தார்.

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது
சாலமன் பாப்பையா உடன்
எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்னன் உடன்

விருதுகள்

  • வள்ளியப்பா இலக்கிய விருது
  • ’கவிதை உறவு’ அமைப்பு வழங்கிய டாக்டர் மு.வ. நினைவு விருது
  • புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ’எழுத்துச் சுடர்’ விருது
  • ’உரத்த சிந்தனை’ அமைப்பு வழங்கிய ஜீவி விருது
  • சென்னை கிழக்குத் தாம்பரம் அரிமா வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருது
  • ஹைதராபாத் நிறை இலக்கிய வட்டம் வழங்கிய ‘கே.ஆர். வாசுதேவன்’ விருது
  • வரலாற்றுச் செம்மல் பட்டம்
  • இலக்கிய மாமணி பட்டம்

ஆவணம்

மதுரை செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியை முனைவர் பூங்கோதை அவர்கள் எழுதிய ஜெயந்தி நாகராஜனின் வாழ்க்கை வரலாற்றை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து வெளியிட்டுள்ளது.

இலக்கிய இடம்

பத்திரிக்கையாளர், குழந்தை இலக்கிய எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நாடக ஆசிரியர் எனப் பல துறைகளிலும் இயங்கி வரும் ஜெயந்தி நாகராஜனின் படைப்புகள் பலவும் பொது வாசிப்புக்குரியவை. பல படைப்புகளைத் தந்திருந்தாலும் ஜெயந்தி நாகராஜன், கவிஞராகவே அறியப்படுகிறார். தமிழ் பயின்றவர் என்பதால் இலக்கியச் செறிவுடனும், வள்ளியப்பா வழி வந்ததால் குழந்தைகளுக்காக சந்த நயத்துடன் எளிய தமிழிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

நூல்கள்

சிறார் நூல்கள்
  • முத்துச்சரம்
  • மழலையர் பாடல்கள் - 50
  • மழலையர் பாட்டு
  • சிறுவருக்கான சிறந்த பாடல்கள்
  • குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள்
  • சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்
கட்டுரை நூல்கள்
  • டயானா: வேல்ஸ் தேசத்துத் தேவதை
  • ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
  • ஹெலன்கெல்லர் : அதிசயப் பெண்
  • குயிலே கவிக்குயிலே : கவிக்குயில் சரோஜினி நாயுடு
  • தாமஸ் ஆல்வா எடிசன்: உழைப்பின் உருவம்
  • ரேடியம்: மேரி க்யூரி
  • சங்ககாலப் பெண் புலவர்கள்
  • புதுமைப்பெண் இந்திரா
  • கோதையின் கதை
  • தங்கச் சுரங்கம்
  • மங்காப்புகழ் பெற்ற பெண் திலகங்கள்
  • கலியுக தெய்வம் ஷீரடி சாயி
  • ஒரு கதாசிரியரின் கதை (ஹாரிபாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே ரோலிங்கின் வாழ்க்கை வரலாறு)
  • பாரதி இசைபாடும் வானவில் பண்பாட்டு மையம்
  • சிகரம் தொட்டவர்கள்
  • எளிய நடையில் மகாபாரதக் கதைகள்
  • சாதனை படைத்த சிந்தனையாளர்கள்
  • நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு
  • அறிஞர்கள் வரலாறு 66
இலக்கிய நூல்கள்
  • நீ பாதி நான் பாதி கண்ணே (கலித்தொகை காட்டும் காதல் நாடகம்)
  • கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் (குறுந்தொகை காட்டும் காதல் நாடகம்)
  • மார்கழிப் பூவே
  • கம்ப ராமாயணம் - பாகம் - 1
  • கம்ப ராமாயணம் - பாகம் - 2
நாடகம்
  • காவியத் தலைவி கண்ணகி
  • விசித்திர அரசர்
  • புராண நாடகங்கள்
  • இலக்கிய நாடகங்கள்
சிறுகதைகள்
  • யாரோ ... இவர் யாரோ....
குறு நாவல்
  • குறுந்தொகையில் ஒரு சிறுகதை

உசாத்துணை


✅Finalised Page