under review

இசை (கவிஞர்)

From Tamil Wiki

To read the article in English: Isai (poet). ‎

கவிஞர் இசை

கவிஞர் இசை [ஏ.சத்யமூர்த்தி] (ஜூன் 01, 1977) தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

பிறப்பு, கல்வி

இசையின் இயற்பெயர் சத்யமூர்த்தி. இசை கோவை மாவட்டம் இருகூரில் K.R. ஆறுமுகம் நாகரத்தினம் இணையருக்கு ஜூன் 01, 1977-ல் பிறந்தார். இருகூர் தொடக்கப்பள்ளி, கோவையில் ஆரம்பக்கல்வியையும் ஒண்டிப்புதூர் கதிரிமில்ஸ் மேனிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வியையும் பயின்றார். கோவை மதுக்கரை சுப்பராயலு பார்மசிக் கல்லூரியில் மருந்தாளுநர் படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

இசை மார்ச் 22, 2009-ல் சு.அமுதாவை மணம் புரிந்துகொண்டார். தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இசையின் முதல் கவிதை ஞாநி நடத்திய தீம்தரிகிட இதழில் 2002-ல் வெளியானது. இசையின் முதல் கவிதைத்தொகுப்பு ”காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி” 2002-ல் வெளியானது. தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என நா. சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாம், மு. சுயம்புலிங்கம், ஷங்கர்ராமசுப்ரமணியன் ஆகியோரை குறிப்பிடுகிறார். இசையின் கட்டுரைகள், கவிதைகள் இலக்கிய மின்னிதழ்கள், இதழ்களில் வெளிவருகின்றன.

இலக்கிய இடம்

நவீனக் கவிதையில் படிமம், மொழி ஆகியவற்றில் இருந்த செறிவையும் இறுக்கத்தையும் தளர்த்தி இயல்பான உரையாடல்தன்மையை கொண்டுவந்த கவிஞர்களில் முக்கியமானவர் இசை. கேலியும் பகடியும் மென்மையான புன்னகையுமாக வாசகனுடன் பேசுவதுபோல எழுதப்பட்ட கவிதைகள் அவருடையவை. நுண்சித்தரிப்புக்கள் கொண்டவை. தமிழ்க்கவிதையின் மையப்பேசுபொருளான அன்னியமாதல், தனிமை, உறவுச்சிக்கல்கள் ஆகியவற்றை பேசினாலும் முற்றிலும் புதியவகையில் நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளோ கசப்புகளோ இல்லாமல் எழுதப்பட்டவை.

’எந்தக் கலையும் அதன் உச்சத்தை அடைந்த பிறகு வரும் காலம் என்பது அது வரையிலான அதன் ஓட்டத்தை நிறுத்தி, தான் ஓடி வந்த தூரத்தை திரும்பிப் பார்க்கும் காலம். இழந்ததை, அடைந்ததை கணக்கிட்டு தன்னைத் தானே வருத்திக் கொள்ளவும், சிரித்துக் கொள்ளவுமான காலம். அந்த வகையில் இசையின் சிரிப்பு நவீன தமிழ்ச்சூழலின், தமிழ்க் கவிதையின் மீதான சிரிப்பு’ என விமர்சகரான ஏ.வி.மணிகண்டன் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • ஆனந்த விகடன் விருது
  • விஜயா வாசகர் வட்டத்தின் புதுமைப்பித்தன் விருது
  • ஆத்மாநாம் கவிதை விருது
  • இளம்படைப்பாளிகளுக்கான சு. ரா. விருது
  • சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது

நூல்பட்டியல்

கவிதைகள்
  • காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி (2002)
  • உறுமீன்களற்ற நதி (2008)
  • சிவாஜிகணேசனின் முத்தங்கள் (2011)
  • ஆட்டுதி அமுதே! (2016)
  • அந்தக் காலம் மலையேறிப்போனது (2017)
  • வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் (2018)
  • நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் (2019)
  • உடைந்து எழும் நறுமணம் (2021)
  • இசை கவிதைகள் (முழுத்தொகுப்பு, 2008-2023)
கட்டுரைகள்
  • அதனினும் இனிது அறிவினர் சேர்தல் (2013)
  • லைட்டா பொறாமைப்படும் கலைஞன் (2015)
  • உய்யடா! உய்யடா! உய்! (2017)
  • பழைய யானைக் கடை (2017)
  • மாலை மலரும் நோய் (திருக்குறள் காமத்துப்பால் உரை) (2020)
  • தேனொடு மீன் (2020)
  • அழகில் கொதிக்கும் அழல் 2022

இணையப்பக்கம்

இணைப்புகள்


✅Finalised Page