under review

ஆறுமுக நாவலர்

From Tamil Wiki

To read the article in English: Arumuka Navalar. ‎

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழறிஞர், சைவஅறிஞர், தமிழ் & ஆங்கில ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். திருக்குறள் பரிமேலழகர் உரை, நன்னூற் காண்டிகை மற்றும் பல பழந்தமிழ் நூல்களையும் பதிப்பித்தார். சைவ சமய சொற்பொழிவுகள் மற்றும் அச்சுப்பணிக்காக நினைவுகூரப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சைவ மீட்பியக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் டிசம்பர் 18, 1822-ல் கந்தப்பிள்ளைக்கும் சிவகாமிக்கும் கடைசி மகனாக ஆறுமுக நாவலர் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை. ஐந்து வயதில் ஏடு தொடங்கினார். சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் மூதுரை முதலிய நீதிநூல்களையும், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் பயின்றார். சரவணமுத்து புலவர் மற்றும் சேனாதிராச முதலியாரிடம் உயர்கல்வி பயின்றார். தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றார்.

சைவ வினாவிடை

ஆசிரியப்பணி

தாம் பயின்ற யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். ஆறுமுகத் தம்பிரான் இவருடைய மாணவர்.

பைபிள் மொழியாக்கம்

பீட்டர் பெர்சிவல் என்னும் மதபோதகரிடம் அணுக்கமான ஆறுமுக நாவலர் பைபிளை மொழியாக்கம் செய்த குழுவில் பிழைநோக்குநராக பணியாற்றினார். வட்டுக்கோட்டை குருமடம் போன்றவற்றுடன் இணைந்து பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் பைபிள் மொழியாக்கப் பணி நடந்து கொண்டிருந்த போது சென்னை கிறிஸ்தவ சபையினரும் இதே பணியை செய்து கொண்டிருந்ததை கேள்வியுற்று எந்த மொழிபெயர்ப்பு சிறந்தது என்பதை நிறுவ ஆறுமுக நாவலருடன் பெர்சிவல் பாதரியார் சென்னை வந்தார். மழவை வித்துவான் மகாலிங்க ஐயர் நடுவராகச் செயல்பட்டு ஆறுமுக நாவலரின் மொழிபெயர்ப்பே சிறந்தது என்ற தீர்ப்பை வழங்கினார். அதுவே ஏற்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது,

சைவப்பணி

இலங்கையில் அமெரிக்க மிஷன் அமைப்பு வட்டுக்கோட்டை குருமடம், தெல்லிப்பளை கல்லூரி முதலியவற்றை நிறுவி தீவிரமாக மதப்பரப்பு செய்துகொண்டிருந்தது. ஆங்கிலக்கல்வியின் பொருட்டு யாழ்ப்பாண உயர்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருந்தனர். இது சைவத்தை அழிக்கும் என்று கருதிய ஆறுமுக நாவலர் சைவ மதப் பரப்பாளராக ஆனார். கிறிஸ்தவர்கள் சைவ மதத்தை கண்டித்து எழுதிய துண்டுப்பிரசுரங்களுக்கு மறுப்பாக கண்டன வெளியீடு களை வெளியிட்டபடி அவருடைய சைவப் பணியை தொடங்கினார். சிறுநூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டார். சைவத் தோத்திர நூல்களுக்கு உரை எழுதினார்.

உவமான சங்கிரகம்

சிறு நூல்களை எழுதினார். பழமையையும், மரபையும் மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டார். சிதம்பரத்தில் நவம்பர் 11, 1864-ல் 'சைவப் பிரகாச வித்யாசாலை' என்ற சைவ பாடசாலையைத் தொடங்கினார். போர்ச்சுகீசியரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார். சைவ சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

சைவம் சார்ந்த பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவச் சொற்பொழிவு செய்து தமது புலமையை வெளிப்படுத்தி திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடமிருந்து நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலம் தங்கி சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.

தமது-ல்லத்தில் வித்தியானுபாலன அச்சியந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

மீண்டும் சென்னைக்கு திரும்பி திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல சைவ நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவச் சொற்பொழிவுகள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.

நீதிநெறி விளக்கம்
பூலோகசிங்கம், நாவலர் வரலாறு

1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் சொற்பொழிவாற்றினார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்தில் பேசினார். குன்றக்குடி ஆதீனத்திலும் திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய ஊர்களிலும் சொற்பொழிவாற்றினார். சிதம்பரத்திற்குச் சென்று 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். 1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.

1870 ல் ஆறுமுக நாவலர் கோப்பாயில் ஒரு சைவக் கல்விநிலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871-ல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.

1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

ஆறுமுகநாவலர் நினைவகம்

ஆறுமுக நாவலரின் சைவ அணுகுமுறை

ஆறுமுக நாவலர் சைவம் சார்ந்து உறுதியான மரபுவழிப் பார்வை கொண்டிருந்தார். சைவ ஆகமமுறைகள் அனைத்து ஆலயங்களிலும் விதிவிலக்கில்லாமல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என வாதிட்டார். சிதம்பரம் ஆலயம் சைவ வழிபாட்டுக்குள் உள்ள தனித்தன்மைகொண்ட போக்குகளையோ சைவத்திற்குள் கிளைத்த ராமலிங்க வள்ளலாரின் இயக்கம் போன்ற புதிய போக்குகளையோ அவர் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சைவ மடங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். மரபை நிலைநாட்டுவதில் மடங்கள் தலைமைதாங்கவேண்டும் என எண்ணினார்.

ஆறுமுக நாவலர் சைவம் என்பது தென்னாடு சார்ந்தது என்று நம்பினார். ஆகவே ஆகமங்களுக்கு அடுத்தபடியாக சைவத் திருமுறைகளையே சைவமூலநூல்களாக முன்வைத்தார். தேவார பாராயணத்தை எல்லா ஆலயங்களிலும் நடைமுறைப்படுத்த முயன்றார்.

மரபான சைவ ஆசாரங்களை வலியுறுத்தினார். சைவர்கள் சிவதீக்கை எடுத்துக்கொள்வது உட்பட எல்லா வாழ்க்கைப்பழக்கங்களையும் கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்தினார். சைவர்கள் குலத்தில் குறைந்தோருடன் சேர்ந்திருந்து உண்பதை, தாழ்த்தப்பட்டோரைத் தொடுவதை விலக்கினார்.

அடிப்படையில் ஆறுமுகநாவலரை ஒரு மரபுமீட்புவாதி, பழமைநோக்கு கொண்டவர் என்று வரையறை செய்யலாம்.

ஆறுமுகநாவலர் தபால்தலை

இலக்கியப்பணிகள்

சொற்பொழிவாளர்

ஆறுமுக நாவலரின் முதன்மை ஊடகமாக மேடையுரையே இருந்தது. வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847-ல் முதல் சொற்பொழிவு ஆற்றினார். அதுவே அவரை சைவ அறிஞராக வெளிக்காட்டியது. வாழ்நாள் முழுக்க சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்த அவருடைய இறுதிச் சொற்பொழிவு 1879-ல் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது.

உரையாளர்

ஆறுமுக நாவலர் சரித்திரம்

ஆறுமுகநாவலர் இரு தளங்களில் நூல்களை எழுதியிருக்கிறார். தமிழிலக்கணம் சார்ந்தும் சைவநெறிகள் சார்ந்தும் அவர் நூல்கள் அமைந்தன. அவர் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும்.

'தமிழ் உரை நடையின் தந்தை’, 'தமிழ் வசன நடையின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். மேலைநாட்டவர் பயன்படுத்திவந்த முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, வினாக்குறி, வியப்புக்குறி ஆகியவற்றை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.

பதிப்பாளர்

ஏட்டுச்சுவடிகளை கண்டறிந்து பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களை பதிப்பித்தார்.

அருட்பா மருட்பா விவாதம்

ஆறுமுகநாவலர் சிலை

வடலூர் இராமலிங்க வள்ளலார் எழுதிய பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் வெளியிடப்பட்டன. அருட்பா என்னும் சொல் சைவத் திருமுறைகளுக்கே பொருந்தும் என்றும் இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை அவ்வாறு கூறலாகாது என்றும் ஆறுமுக நாவலர் வாதிட்டார். இரு தரப்பிலும் பலர் கண்டனங்களையும் மறு கண்டனங்களையும் எழுதினர். தன்னை இராமலிங்க வள்ளலார் அவமதித்துவிட்டதாக ஆறுமுக நாவலர் வழக்கு தொடுத்தார். அதில் இராமலிங்க வள்ளலார் தான் அவ்வாறு கூறவில்லை என மறுக்கவே அதுவே போதும் என வழக்கை திரும்பப்பெற்றுக்கொண்டார். (பார்க்க அருட்பா மருட்பா விவாதம்)

விருதுகள்

  • திருவாவடுதுறை ஆதினம் நாவலர் என்ற பட்டத்தை வழங்கினார்.

மறைவு

ஆறுமுக நாவலர் டிசம்பர் 5, 1879-ல் (கார்த்திகை 21) வண்ணார்பண்ணையிலுள்ள தம் வீட்டில் காலமானார்.

நினைவகங்கள், வாழ்க்கை வரலாறுகள்

விமர்சனங்கள்

நல்லூர் ஆறுமுக நாவலர் அவருடைய சைவக் கடும்போக்குக்காக கண்டிக்கப்படுகிறார். சைவ ஆகம வழிபாட்டை முன்னிறுத்தி பிற வழிபாடுகள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்தார். அது விமர்சனத்துக்கு உள்ளாகியது

நல்லூர் ஆறுமுக நாவலர் சைவ ஆசாரங்களை வலியுறுத்தினார். தீண்டாமை உட்பட பழைய பழக்கவழக்கங்களை முன்வைத்தார். அவர் அதன்பொருட்டும் கண்டிக்கப்படுகிறார்

நூல்கள்

நூலகம் இணைய நூலகம் அமைப்பில் ஆறுமுகநாவலர் பதிப்பித்த நூல்கள் உள்ளன

இயற்றி பதிப்பித்த சைவ சமய நூல்கள்
  • சைவ சமய சாரம்
  • சிவாலய தரிசன விதி
  • நித்திய கருமவிதி
  • சிரார்த்த விதி
  • தர்ப்பண விதி
  • குருசிஷ்யக்கிரமம்
  • மருட்பா (போலியருட்பா மறுப்பு)
இயற்றி பதிப்பித்த கிறித்தவமத கண்டன நூல்கள்
  • சிவதூடணப் பரிகாரம்
  • மித்தியாவாத நிரசனம்
  • சுப்பிர போதம்
  • வச்சிரதண்டம்

பார்க்க கண்டன வெளியீடு

இயற்றி பதிப்பித்த வசன நூல்கள்
  • பெரியபுராண வசனம்
  • திருவிளையாடற்புராண வசனம்
  • கந்தபுராண வசனம்
  • பெரியபுராண சூசனம்
  • யாழ்ப்பாணச் சமயநிலை
இயற்றி பதிப்பித்த பாட நூல்கள்
  • பாலபாடம் 1
  • பாலபாடம் 2
  • பாலபாடம் 3
  • பாலபாடம் 4
  • இலக்கண வினா விடை
  • சைவ வினா விடை
பதிப்பித்த நூல்கள்
மூலப்பதிப்புகள்
  • வில்லிபுத்தூரார் பாரதம்
  • சேது புராணம்
  • கந்த புராணம்
  • பெரிய புராணம்
  • திருவாசகம்
  • திருக்கோவையார்
  • திருச்செந்தூரகவல்
  • நால்வர் நான்மணிமாலை
  • மறைசையந்தாதி
  • சிதம்பர மும்மணிக்கோவை
  • குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
  • உவமான சங்கிரகம்
  • இரத்தினச் சுருக்கம்
மூலமும் உரையும் கொண்ட பதிப்புகள்
  • நன்னூல் விருத்தியுரை
  • நன்னூல் காண்டிகையுரை
  • தொல்காப்பியச் சூத்திரவிருத்தி
  • சிதம்பரமான்மியம்
  • சிவஞானபோதமும் வார்த்திகமென்னும் பொழிப்புரையும்
  • இலக்கணக் கொத்துரை
  • தொல்காப்பியம் சொல்லதிகாரம்
  • சேனாவரையம்
  • சிவஞானபோத சிற்றுரை
  • சிவராத்திரி புராணம்
  • சிவசேத்திராலய மஹாத்ஸவ உண்மைவிளக்கம்
  • சிவாலய தரிசனவிதி
  • சுப்பிரமணிய போதகம்
  • இலக்கண விளக்கச் சூறாவளி
  • திருக்குறள் பரிமேலழகருரை
  • கொலை மறுத்தல்
  • தருக்க சங்கிரகவுரை
  • அன்னபட்டீயம்
  • பிரயோக விவேகம்
  • திருச்சிற்றம்பலக் கோவையுரை
  • திருக்கோவையார் நச்சினார்க்கினியருரை
  • சூடாமணி நிகண்டுரை
புத்துரைப் பதிப்புகள்
  • ஆத்திசூடி
  • கொன்றைவேந்தன்
  • நன்னெறி
  • நல்வழி
  • வாக்குண்டாம்
  • கோயிற்புராணம்
  • திருமுருகாற்றுப்படை
  • சைவ சமய நெறி
  • சிவதருமோத்தரம்
  • திருச்செந்தினீரோட்டக யமகவந்தாதி
  • மருதூரந்தாதி
  • சௌந்தரியலகரி

உசாத்துணை


✅Finalised Page