under review

அழகு சக்திகுமரன்

From Tamil Wiki
கவிஞர் அழகு சக்திகுமரன் (படம் நன்றி: புஸ்தகா.இன் தளம்)

அழகு சக்திகுமரன் (சொ.க. முருகன்; பொற்கிழி கவிஞர் அழகு சக்திகுமரன்; கவிமாமணி அழகு சக்திகுமரன்) (பிறப்பு: ஜூலை 02, 1948) கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

சொ.க. முருகன் என்னும் இயற்பெயர் கொண்ட அழகு சக்திகுமரன், ஜூலை 02, 1948 அன்று, தமிழ்நாட்டில் கோவில்பட்டியில், சொ. கந்தசாமிப் பிள்ளை - வள்ளியம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வி கற்ற இவர், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அறிவியலில் இளநிலை (பி.எஸ்.ஸி) பட்டம் பெற்றார்.

தொடர்ந்து கல்வியியலில் இளநிலை (பி.எட்.) பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், கல்வியியலில் முதுநிலை பட்டமும் பெற்றார். ஜோதிடம் கற்றார்.

தனி வாழ்க்கை

அழகு சக்திகுமரன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். திருமண வாழ்க்கை பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.

அழகு சக்திகுமரன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

அழகு சக்திகுமரன் பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் படித்து வாசிப்பில் ஆர்வம்கொண்டார். ஆசிரியர்கள் மூலம் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். சொ.க. முருகன் என்னும் இயற்பெயரை விடுத்து அழகு சக்திகுமரன் என்ற புனைபெயரில் எழுதினார். கவிதை, கட்டுரை, பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். விமலா ரமணி, ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலரால் ஊக்குவிக்கப்பட்டார்.

ஜனவரி 2012-ல் இலங்கையில் 'கொழும்பு தமிழ் சங்கம்' நடத்திய சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் (International Writer's conference) ஆய்வரங்க மதிப்பீட்டாளராகப் பணியாற்றினார்.

மேடையுரை

அழகு சக்திகுமரன், பட்டி மன்றப் பேச்சாளர், நடுவர், கவியரங்கத் தலைவர், ஆன்மிக சொற்பொழிவாளர் எனப் பல விதங்களில் பங்களித்தார். சிறந்த பேச்சாளராகவும், சொற்பொழிவாளராகவும் அறியப்பட்டார்.

ஊடகம்

அரட்டை அரங்கம், அகட விகடம் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்தார்.

பொறுப்பு

கோயம்புத்தூர் உலகப் பொதுமறை திருக்குறள் சேவை மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.

விருதுகள்

மதிப்பீடு

அழகு சக்திகுமரன் கவிதைகளையும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் எழுதினார். ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதினார். திருக்குறள் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்தார். எழுத்தாளராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும், ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • அன்னை தந்த ஆனந்தம்
  • கவிதைக் கழனி
  • தமிழன் தலைவனாக வேண்டும்
கட்டுரை நூல்கள்
  • அழகன் முருகனின் அறுபடை வீடுகள்
ஆன்மிகம்
  • பரவசமூட்டும் கந்தபுராணக் கதைகள்
  • எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிறுகதைத் தொகுப்பு
  • தெய்வம் நின்று கொல்லும்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2025, 19:12:36 IST