வீரை வெளியன் தித்தனார்
வீரை வெளியன் தித்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
வீரை வெளியன் தித்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
வீரை வெளியன் தித்தனார் பாடிய பாடல் அகநானூறில் 188-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இரவில் தலைவியை காணவந்த தலைவனிடம், தலைவியிடம் சொல்வது போல தினைப்புனத்தில் தலைவியை சந்திக்கலாம் எனத் தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குறவர் இன இளம்பெண்கள் தினை பயிரிடப்படும் வயலை காவல் காப்பர்.
- குறவ பெண்கள் வேங்கை மலரால் செய்யப்பெற்ற மாலைகளையும் அசோக மரத்து இலையாலான தழையாடையும் அணிந்திருப்பர்.
- தழலை, தட்டை முதலிய கருவிகளை கொண்டு ஒலியெழுப்பி தினைப்பயிரை தின்று சேதம் விளைவிக்க வரும் பறவைகளை விரட்டுவர்.
- உவமை: மழையை கொண்டுவரும் கார்க்காலத்து மேகத்தில் இருந்து வெளிப்படும் மின்னலானது, நல்லாட்சி செய்யும் அரசனின் படையின் உள்ள போர்வீரன் சுழற்றும் போர் வாளின் வீச்சினை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாடல் நடை
அகநானூறு - 188
- திணை: குறிஞ்சி துறை: இரவில் சிறைப்புறமாகத்தோழி சொல்லியது
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர்
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
பொலிந்த ஆயமொடு காண் தக இயலி,
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே!
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:44:30 IST