under review

விழியன்

From Tamil Wiki
எழுத்தாளர் விழியன்
விழியன்

விழியன் (உமாநாத் செல்வன்; பிறப்பு: அக்டோபர் 30, 1980) தமிழக எழுத்தாளர். சிறார் இலக்கியம் சார்ந்து பல நூல்களை எழுதினார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பள்ளிக் கல்விக்கான துணைக் குழுவில் உறுப்பினர். தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றார். பரதநாட்டியம் கற்றவர். புகைப்படக் கலைஞர்.

பிறப்பு, கல்வி

உமாநாத் செல்வன் என்னும் இயற்பெயரை உடைய விழியன், அக்டோபர் 30, 1980 அன்று, வேலூரை அடுத்த ஆரணியில், செந்தமிழ்ச் செல்வன் - குணசுந்தரி இணையருக்குப் பிறந்தார். வேலூரில் உள்ள டவுன்ஷிப் ஆங்கிலப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். வேலூர் வாணி வித்யாலயா பள்ளியில் மேல்நிலைக் கல்வி படித்தார். வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (VIT University, Vellore) மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பி.ஈ பட்டம் பெற்றார். வேலூர் என்ஜினியரிங் கல்லூரியில் (Vellore Engineering College) எம்.ஈ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

விழியன், பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றினார். தற்போது சென்னையில் மென்பொருள் துறை வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். மணமானவர். மனைவி வித்யா.

விழியன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

விழியன் வாண்டுமாமாவின் கதைகள், டிங்கிள், பூந்தளிர், ராணி காமிஸ் போன்ற இதழ்களை வாசித்து இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தந்தையின் சேகரிப்பில் இருந்த மார்க்சிய சிந்தனைகள் கொண்ட நூல்கள், ரஷ்ய நாவல்களை வாசித்தார். தொடர் வாசிப்பு எழுதத் தூண்டியது. கவிதைகள் இவரை ஈர்த்தன. மடற்குழுக்களிலும், குழுமங்களிலும், இணைய தளங்களிலும் கவிதைகள், குறுங்கட்டுரைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்களை எழுதினார். முதல் நூல் ‘தோழியே உன்னைத் தேடுகிறேன்’, 2005-ல் வெளியானது. கடித இலக்கிய பாணியில் அமைந்த அந்த நூலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

சிறார் இலக்கியம்

விழியன், சிறார் இலக்கியத்தின் மீது கொண்ட காதலால், சிறுவர்களுக்காக எழுதினார். முதல் சிறார் இலக்கியப் படைப்பு, ‘காலப்பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே’ என்ற இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பாக, 2009-ல் வெளிவந்தது. அந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிறார் இலக்கியங்களில் கவனம் செலுத்தினார். 4 முதல் 7 வரை உள்ள சிறுவர்களின் சிந்தனைகளுக்கேற்பவும், 8 முதல் 14 வரை உள்ள சிறார்களுக்காகவும் தனது களத்தை இரு பிரிவாகப் பரித்துக் கொண்டு எழுதினார். இவரது படைப்புகள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

அமைப்புச் செயல்பாடுகள்

விழியன், குழந்தை இலக்கியச் செயல்பாட்டாளாராக இயங்கினார். பள்ளிக் குழந்தைகளுக்குக் கதை சொல்லுதல், வாட்ஸப் அப் மூலம் சிறுவர்களுக்குக் கதை சொல்லுதல், சிறுவர் இலக்கியத்தில் இயங்கும் இயக்கங்களை ஒன்றிணைத்தல்; ஆர்வலர்கள், படைப்பாளிகளை ஒன்றிணைத்துத் தொடர் பணிமனை / சந்திப்புகளை நிகழ்த்துவது. குழந்தைகளுடன் கதை சொல்லல் நிகழ்ச்சி நடத்துவது போன்ற பணிகளை முன்னெடுத்தார்.

விழியன் புகைப்படக் கலைஞராகவும் செயல்பட்டார். இவரது புகைப்படங்கள் கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளியாகின.

(விழியனின் புகைப்படங்கள்)

பொறுப்புகள்

  • தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பள்ளிக் கல்விக்கான துணைக் குழுவில் உறுப்பினர்.
  • சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்.

விருதுகள்

  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருது - அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை நூலுக்காக.
  • ஆனந்த விகடன் இதழின் 2013-ம் ஆண்டின் சிறந்த சிறார் நூல் தேர்வு- மாகடிகாரம்
  • சேஷன் சம்மான் விருது - 2015.
  • எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் வழங்கிய அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - மலைப்பூ சிறார் நாவல் (2022)
  • சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது
  • நியூஸ்7 தொலைக்காட்சியின் யுவ ரத்னா விருது
  • வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சிறந்த முன்னாள் மாணவர் விருது

இலக்கிய இடம்

விழியன் சிறார்களிடையே பொது அறிவை வளர்த்தல், விஞ்ஞானச் செய்திகளை அவர்களிடம் சேர்த்தல், சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், சிந்தனையை மேம்படுத்துதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு எழுதினார். குழந்தைகளுக்கான மொழியில், அவர்களைக் கவரும் வகையில் எளிய நடையில் எழுதினார். சிறார்களுக்காக எழுதிவரும் படைப்பாளிகளுள் முக்கியமானவராக விழியன் மதிப்பிடப்படுகிறார்.

விழியன் சிறார் நூல்கள்

நூல்கள்

சிறுகதை மற்றும் நாவல்கள்
  • பென்சில்களின் அட்டகாசம்
  • பென்சில்களின் அட்டகாசம் 2.0
  • உங்கா சிங்கா மங்கா
  • 1650 - முன்ன ஒரு காலத்துல
  • அக்னிச்சுடர்கள்
  • அதென்ன பேரு கியாங்கி டுயாங்கி
  • அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை
  • அனிதாவின் கூட்டாஞ்சோறு
  • அன்பிற்கு ஆயிரம் முகங்கள்
  • உச்சி முகர்
  • ஒரே ஒரு ஊரிலே
  • கடல்ல்ல்ல்
  • காரா பூந்தி
  • காலப் பயணிகள்
  • கிச்சா பச்சா
  • குறுங்...
  • ஜூப்பிடருக்குச் சென்ற இந்திரன்
  • டாலும் ழீயும்
  • திரு. குரு ஏர்லைன்ஸ்
  • தேன் முட்டாயி
  • பம்பம்டோலேய்
  • பியானாவின் பிறந்தநாள் பரிசு
  • கூட்டாஞ்சோறு
  • பெருங்கனா
  • மன்னர் பராக்
  • மலைப் பூ
  • மியாம்போ
  • யட்சியின் குமிழி ஆசை
  • ராபுலில்லி -1
  • ரோபூ
  • வளையல்கள் அடித்த லூட்டி
  • குழந்தைமையை நெருங்குவோம்!
  • சகி வளர்த்த ஓகி
ஆங்கில நூல்கள்
  • Pencil's Day Out
  • Thiru Guru Airlines

உசாத்துணை


✅Finalised Page