under review

விமல் குழந்தைவேல்

From Tamil Wiki
விமல் குழந்தைவேல் (நன்றி-காலச்சுவடு)

விமல் குழந்தைவேல் (ஜுன் 22, 1960) இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர். சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதிவருகிறார்.

தனிவாழ்க்கை

விமல் குழந்தைவேல், ஜுன் 22, 1960-ல் இலங்கையின் அம்பாறை மாவட்டத்து அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் கோளாவில் கிராமத்தில் பிறந்தார். தந்தை குழந்தைவேல். 1988 -ல் புலம்பெயர்ந்தார். தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். சாலமன் என்ற மகனும், திருமணமான ஒரு மகளும் உண்டு.

இலக்கிய வாழ்க்கை

சிறுகதைகள், நாவல்கள் என 1990-களில் எழுதத் தொடங்கிய விமல் குழந்தைவேல் இதுவரை 4 சிறுகதைத் தொகுதிகளும் 3 நாவல்களும் எழுதியுள்ளார். 'வெள்ளாவி’ நாவல் (2004) வெளிவந்த பின் பரவலாக அறியப்பட்டார். 'கசகறணம்’ நாவலை (2011) தனது ஆத்மார்த்தமான படைப்பு என்று கருதிகிறார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற்றும் உயிர்நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

Vimal Kulanthaivelu

வட்டாரத் தமிழைப் பதிவு செய்தது, கோளாவில் பகுதியில் நிலவிய சமுதாய அமைப்பு, அவ்வமைப்பில் நிலவிய சீர்கேடுகள், பெண்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றினைச் சேர்ந்த பெண்கள் போடியார் போன்றவர்களிடமிருந்து எதிர்கொள்ளூம் பாலியல் ரீதியிலான வன்முறைகள், நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை பதிவு செய்திருப்பது என்ற வகையில் 'வெள்ளாவி’ நாவல் முக்கிய ஆக்கமாகக் கருதப்படுகிறது.

இலக்கிய இடம்

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான 100 நாவல்களின் பட்டியலில் "வெள்ளாவி" நாவல் உள்ளது. குறிப்பிடும்படி எழுதிவரும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் ஒருவராக விமல் குழந்தைவேலைக் குறிப்பிடும் ஜெயமோகன் தனது நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் நூலில் 'வெள்ளாவி’ நாவலை சிபாரிசு செய்துள்ளார். சிறந்த ஈழத்து சிறுகதைகள் (தொகுப்பாசிரியர் - ரியாஸ் குரானா), ஞானம் இதழின் ஈழத்து புலம்பெயர் இலக்கிய சிறப்பிதழ், கண்ணில் தெரியுது வானம் ( தொகுப்பாசிரியர் – இ. பத்மநாப அய்யர் 2001) தொகுப்புகளில் விமல் குழந்தைவேலின் கதைகள் வெளிவந்துள்ளன.

அகநிலைப்பார்வையில் குறுகலான எல்லைகளை மட்டுமே மட்டுப்படுத்திப் பேசக்கூடியதாக இல்லாமல் புறநிலைப்பார்வை விரிந்த பரப்பில் நம்மை இன்னொரு தரப்பாக்கி வெளியே நின்று நோக்க வைக்கும் படைப்பு விமல் குழந்தைவேலின் ’ கசகறணம்’ இருப்பதாக விமர்சகர் கருணாகரன் (இலங்கை) கூறுகிறார்.

விருதுகள்

'கசகறணம்’ - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வழங்கும் சிறந்த நாவலுக்கான விருது - 2011[1]

நூல் பட்டியல்

சிறுகதைத்தொகுப்புகள்
  • தெருவில் அலையும் தெய்வங்கள்[2] - 1998, மணிமேகலைப் பிரசுரம்
  • அவளுக்குள் ஒருத்தி - 1999, மணிமேகலைப் பிரசுரம்
  • அசதி - 2003, ஈ-க்வாலிரி கிராபிக்ஸ், கொழும்பு
  • குறளிக் குஞ்சன்
நாவல்கள்
  • மண்ணும் மல்லிகையும் - 1999, குமரன் பப்ளிஷர்ஸ்
  • வெள்ளாவி - 2004, உயிர்மை பதிப்பகம்
  • கசகறணம் - 2011, காலச்சுவடு பதிப்பகம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page