விசாலாட்சி அம்மாள்
- விசாலாட்சி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விசாலாட்சி (பெயர் பட்டியல்)
விசாலாட்சி அம்மாள் (பண்டித விசாலாக்ஷி அம்மாள்) (1881-1926) தமிழில் தொடக்ககாலத்தில் நாவல்களை எழுதிய எழுத்தாளர். தமிழின் முதல் பெண் இதழாளர் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
1881-ம் ஆண்டு இசைக்கலைஞரான வெங்கட்ராம ஐயருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மைசூரில் பிறந்தார். வெங்கட்ராம ஐயர் புதுக்கோட்டை, எட்டையபுரம், ராமநாதபுரம், மைசூர் சமஸ்தானங்களில் அரசவை இசைக்கலைஞராக இருந்தார். விசாலாட்சி அம்மாள் அரசகுடியினரிடம் பழக்கம் கொண்டிருந்தார். அவர்களுடன் இணைந்து கல்வி கற்றமையால் தமிழ், சம்ஸ்கிருதம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
விசாலாட்சி அம்மாள் தன் எட்டாவது வயதில் அத்தைமகனை மணந்தார். பதிநான்கு வயதில் விதவையானார். ஆனால் அன்றிருந்த எதிர்ப்புகளை மீறி மைசூர் மகாராணி பெண்கள் கல்லூரியில் கல்வி கற்று பட்டப்படிப்பை முடித்தார். அங்கேயே ஆசிரியையாக பணிபுரிந்தார்.
இலக்கிய வாழ்க்கை
விசாலாட்சி அம்மாள் தன் 20-வது வயதில் தந்தையின் எதிர்ப்பையும் மீறி தன் முதல் நாவலான லலிதாங்கியை எழுதினார். அதை அன்று புகழ்பெற்றிருந்த லோகோபகாரி என்னும் இதழுக்கு அனுப்பினார். 1902-ல் லோகோபகாரி பதிப்பகம் லலிதாங்கி நாவலை வெளியிட்டது. அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டு மாதங்களில் இரண்டாம் பதிப்பு வந்தது. பதிப்புரிமைத்தொகையும் குறிப்பிடத்தக்க அளவு கிடைத்தது. இதனால் ஊக்கம் பெற்ற விசாலாட்சி அம்மாள் ஜலஜாட்சி என்னும் தன் இரண்டாவது நாவலை எழுதினார். அந்நாவலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு நாவலகளையும் நடராஜ ஐயர் என்ற புனைப்பெயரில் எழுதினார். இரண்டாவது நாவலான ஜலஜாட்சி வெளிவந்த பின்பு தான் தன் பெயரை வெளிப்படுத்தினார். பணம் புகழ் இரண்டையும் கண்ட தந்தை வெங்கட்ராம ஐயர் விசாலாட்சி அம்மாள் எழுதுவதற்கு ஆதரவாளர் ஆனார். முழுநேர எழுத்தாளர் ஆகும் நோக்கத்துடன் விசாலாட்சி அம்மாள் 1904-ல் தந்தையுடன் சென்னைக்கு வந்தார்.
சென்னைக்கு வந்த விசாலாட்சி அம்மாள் தேவி,சந்திரப்பிரபா, ஜோதிஷ்மணி, நிர்மலா ஆகிய நாவல்களை எழுதினார். அவையனைத்துமே மிகப்பரவலாக வாசிக்கப்பட்டன. முப்பது நாவல்களை எழுதினார். தன்னை அவர் 'நாவலிஸ்ட்’ என்று அழைத்துக் கொண்டார். 'பண்டிதை’ என்ற அடைமொழி இல்லாமல் அவர் எந்தப்படைப்பையும் எழுதியதில்லை. அவருடைய மொழி நடையும் பண்டித நடையாகவே இருக்கும்.
இதழியல்
லோகோபகாரி இதழை நடராஜ ஐயர் என்பவர் நடத்திவந்தார். விசாலாட்சி அம்மாள் லோகோபகாரி இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். நடராஜ ஐயர் நோயுற்று இறக்கவே லோகோபகாரி இதழ் ஓராண்டு வெளிவரவில்லை. பின்னர் அதற்கு வைத்யநாத ஐயர் என்பவர் ஆசிரியரானார். அவருடன் ஓராண்டுக்குள் விசாலாட்சி அம்மாளுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஆகவே இதழில் இருந்து விலகி 1909-ல் ஹிதகாரிணி என்னும் இதழை சொந்தமாக தொடங்கினார். பின்னர் ஹிதகாரிணி அச்சகத்தில் இருந்து ஆன்மிகச் செய்திகளுக்காக ஞானசந்திரிகா என்னும் இதழையும் தொடங்கி நடத்தினார்.
1911-ல் தந்தையும் 1912-ல் தாயும் மறைந்தனர். விசாலாட்சி அம்மாள் ஒரு சிறுவனை தத்தெடுத்து அவர்களுக்குரிய இறுதிச்சடங்குகளை நிறைவேற்றினார். 1915 வரை ஹிதகாரிணி வெளிவந்தது. விசாலாட்சி அம்மாளின் வாழ்க்கையின் பிற்காலச் செய்திகள் தெரியவரவில்லை.
விருதுகள்
1910-ல் சிருங்கேரி மடம் இவர் நடத்திய ஞானசந்திரிகா இதழை பாராட்டி இவருக்கு பண்டிதை என்னும் பட்டத்தை வழங்கியது. பண்டிதை விசாலாட்சி அம்மாள் என்றே இவர் அறியப்படுகிறார்.
இலக்கிய இடம்
பண்டிதை விசாலாட்சி அம்மாளின் நாவல்கள் இன்று இலக்கியம் சார்ந்து பொருட்படுத்தப்படுவதில்லை. அவை திருப்பங்களும் செயற்கை நிகழ்ச்சிகளும் நீண்ட உரையாடல்களும் கொண்ட பொதுவாசிப்பு நூல்கள். ஆனால் தமிழில் முதல் பெண் இதழாளர், முதல் பெண் எழுத்தாளர் என அவர் கருதப்படுகிறார். பின்னர் வந்த வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்ற பெண் எழுத்தாளர்களுக்கும் அவரால் உருவாகி வந்த குமுதினி, குகப்பிரியை, எஸ்.அம்புஜம் அம்மாள் போன்ற பெண் எழுத்தாளர்களுக்கும் அவரே தொடக்கம். விதவையாக இருந்தும் எதிர்ப்புகளை மீறி கல்விகற்று, சூழலுடன் போராடி தனித்தன்மையுடன் நிலைகொண்டு, எழுத்துக்கள் வழியாக கருத்துப்பிரச்சாரம் செய்த அவருடைய முன்னுதாரணம் பின்னர் வந்தவர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. தமிழின் பெண்ணிய வரலாற்றில் முதன்மை ஆளுமை பண்டித விசாலாட்சி அம்மாள்தான். ஆனால் அவர் பொதுவாக தமிழ் அறிவுச்சூழலில் கவனிக்கப்படாதவராகவே இருக்கிறார்.தமிழில் பெண்ணுரிமை, பெண் விடுதலை ஆகியவற்றின் வரலாறு எழுதப்படும்போது அவரில் இருந்து அது தொடங்கப்படும்.
நாவல்கள்
- லலிதாங்கி
- ஜலஜாக்ஷி
- தேவி சந்திரபிரபா
- ஜோதிஷ்மதி
- நிர்மலா
- ஆனந்த மஹிளா
- ஹேமாம்பரி
- ஸரஸ்வதி
- கௌரி
- ஞானரஞ்சனி
- ஸுஜாதா
- வனஸுதா
- ஜெயத்சேனா
- மஹிஸுதா
- ஸ்ரீமதி ஸரஸா
- இரட்டைச் சகோதரர்கள்
- விராஜினி
- ஆரியகுமாரி
- ஸ்ரீகரீ
- ஜ்வலிதாங்கி
- மஹேச ஹேமா
உசாத்துணை
- விடுதலைக்கு முந்தைய தமிழ் நாவல்கள், மு. பழனியப்பன்
- பழைய தமிழ் எழுத்தாளார்கள், லண்டன் சுவாமிநாதன்8/
- மறுமணம் பற்றி அம்பை/
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:40 IST