under review

வானம் வசப்படும்

From Tamil Wiki
வானம் வசப்படும்

வானம் வசப்படும் (1992) பிரபஞ்சன் எழுதிய நாவல். பாண்டிச்சேரியை களமாகக் கொண்டு, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை சார்ந்து எழுதப்பட்டது. மானுடம் வெல்லும் நாவலின் இரண்டாம் பகுதி இது.

எழுத்து வெளியீடு

மானுடம் வெல்லும் பிரபஞ்சன் எழுதி தினமணி கதிர் வார இதழில் 1990 முதல் வெளிவந்த நாவல். வானம் வசப்படும் அதன் தொடர்ச்சியாக 1993 முதல் வெளியாகியது. அறுபது அத்தியாயங்கள் கொண்டதாக திட்டமிடப்பட்டு முன்னரே முடிக்கப்பட்டது. கவிதா பதிப்பகம் இதை நூலாக வெளியிட்டது. 1995-ல் இந்நாவலுக்குச் சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. இந்நாவல் மானுடம் வெல்லும் முன்வைக்கும் பாண்டிச்சேரி அரசியலை ஆனந்தரங்கம் பிள்ளையை மையமாக்கி மேலும் விரிவாகச் சித்தரிக்கிறது. இது ஆனந்தரங்கம் பிள்ளையின் தினப்படிச்சேதிக்குறிப்புகளைச் சார்ந்து எழுதப்பட்டது.

கதைச்சுருக்கம்

புதுச்சேரிக்குப் புதியதாய் வந்திருக்கும் குவர்னர் தூய்ப்ளெக்சை ஆனந்தரங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பதில் ஆரம்பிக்கிறது நாவல். தூய்ப்ப்ளெக்ஸ் நேர்மையும் திறமையும் கொண்டவர். அவர் மனைவி மதாம் ழான் தூய்ப்ளெக்ஸ் ஊழல் நிறைந்தவள். ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் தரப்பில் தளபதியாக வருகிறார். அரசியல்சூழ்ச்சிகளால் தூய்ப்ளக்ஸை தோற்கடிக்கும் கிளைவ் சந்தாசாகிப்பை வென்று கொலைசெய்து முகமது அலியை ஆர்க்காடு நவாப் ஆக்குகிறார்.

இந்நாவல் அரண்மனைச் சூழ்ச்சிகளை பெரிதும் பேசுகிறது. புதுச்சேரி கவர்னருக்கு உதவியாக மொரீஷியஸ் தீவின் கவர்னர் லபூர்தொன்னே வந்து சேர்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே ஆணவப்பூசல் நிகழ்கிறது. 1746-ல் நடந்த ஆங்கிலோ-பிரெஞ்ச் போரில் சென்னையை கைப்பற்றியபின் தனிப்பட்ட பேரத்தில் ஆங்கிலேயர்களிடமே திரும்ப விற்று விடுகிறார் லபூர்தொன்னே.லபூர்தொன்னே பின்னாளில் கைது செய்யப்பட்டு பிரான்ஸ் கொண்டு செல்லப்படுகிறார்.இந்நாவலில் வேதபுரீஸ்வரர் ஆலயம் இடிக்கப்படுவது, சேசு சபை பாதிரியார்களின் மதமாற்ற முயற்சி, போர்களில் சாமானியர்கள் அடையும் அலைக்கழிப்புகள் என அக்காலகட்டம் சித்தரிக்கப்படுகிறது.

இந்நாவல் ஆனந்தரங்கம் பிள்ளையின் பார்வையை ஒட்டியே விரிகிறது. இது தூய்ப்ளெக்ஸின் வீழ்ச்சி வரை எழுதப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் நின்றுவிட்டது. "குவர்னர் மிகுந்த நம்பிக்கையோடு கடலைப் பார்த்தார், பின்னர் நிலத்தைப் பார்த்தார்.பிரெஞ்சு தேசத்தின் கொடி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிந்து, கர்நாடக மண்ணையே மூடுவதாக அவருக்கு ஒரு பிரமை தோன்றியது. அப் பிரமை தந்த ஆனந்தக்களிமயக்கில் ஆழ்ந்தார் குவர்னர் துய்ப்ளெக்ஸ்." என முடிகிறது.

மூன்றாம் பகுதியில் பிரபஞ்சன் பாண்டிச்சேரியின் பிற்கால வரலாற்றை ஆனந்தரங்கம் பிள்ளைக்கு பிறகு எழுதப்பட்ட குறிப்புகள் வழியாக எழுதுவதாக இருந்தார்.

இலக்கிய இடம்

வானம் வசப்படும் மானுடம் வெல்லும் நாவலின் வடிவமுழுமை அமையாதது. இது ஒரு பெரிய நாவலின் மூன்றிலொரு பங்கு என்று சொல்லலாம். ஆனால் இந்நாவலும் அன்றைய அரசியல்சூழ்ச்சிகளையும், அதிகாரப்பேரங்களையும் மிகைப்படுத்தாமல் யதார்த்தமாகச் சொன்னமையால் முக்கியமான இலக்கிய ஆக்கமாகவே உள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:34 IST