under review

வாஞ்சிநாதசுவாமி கோயில்

From Tamil Wiki
வாஞ்சிநாத சுவாமி கோயில் (நன்றி: தரிசனம்)
வாஞ்சிநாதசுவாமி கோயில்

வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாஞ்சியத்தில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற தலம். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

திருவாஞ்சியம் கும்பகோணம்-நாச்சியார்கோவில்-நன்னிலம் வழித்தடத்தில் கும்பகோணத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நன்னிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருவாரூரில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

வரலாறு

வாஞ்சிநாதசுவாமி கோயிலின் வரலாற்றுப் பெயர்கள் வஞ்சியாபதி, சந்தானவனம், திருவரையூர், பூகைலாசம், காந்தாரண்யம். இக்கோயில் முதலில் சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. இக்கோயில் சந்தன மரங்கள் நிறைந்த காடுகளில் கட்டப்பட்டதால் காந்தாரண்யம் என அழைக்கப்பட்டது. சோழர், நாயக்கர் காலத்தின் பிரம்மாண்டத்தை இக்கோயிலின் கட்டிடக்கலையில் காணலாம். திருவாஞ்சியம், திருவெண்காடு, திருவையாறு, சாயவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் ஆகியவை காசிக்கு நிகராகப் புனிதமானதாகக் கருதப்படும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள்.

கல்வெட்டு

பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்த இருபத்தியேழு கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.

வாஞ்சிநாதசுவாமி கோயில் யமன் சன்னதி

தொன்மம்

  • இந்து புராணங்களின்படி ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பூமியின் அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் ஒரு பெரிய வெள்ளமான பிரளயத்தின் முடிவில் கூட அழிக்கப்படாத இடம் திருவாஞ்சியம் என்ற நம்பிக்கை உள்ளது.
  • க்ருத யுகத்தில் ரத்தினம், திரேதா யுகத்தில் தங்கம், துவாபர யுகத்தில் வெள்ளி, கலியுகத்தில் கிரானைட் என நான்கு யுகங்களில் ஒவ்வொரு யுகத்திலும் சிவபெருமானின் சிலை ஒவ்வொரு பொருளால் செய்யப்பட்டது.
  • சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த இடத்தை மிகவும் விரும்புவதாகக் கூறியதால் அவள் இந்த இடத்திற்கு வந்து இங்கேயே வாழ முடிவு செய்தாள். எனவே பார்வதி இங்கு 'வாழவந்த நாயகி' என அழைக்கப்பட்டாள்.
  • புராணத்தின் படி, ஸ்ரீதேவிக்கும் பூமாதேவிக்கும் இடையே ஏற்பட்ட சில மோதல்களால், ஸ்ரீதேவி மகாவிஷ்ணுவை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீதேவியுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று வரம் வேண்டி இங்குள்ள சிவனை வழிபட்டார். சிவபெருமான் அவரை ஆசிர்வதித்து தம்பதியரை மீண்டும் இணைத்ததாக நம்பப்படுகிறது. வாஞ்சை காரணமாக இந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.
  • மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், சூரியன், அக்னி, தேவர்கள், சப்தரிஷிகள், அத்திரி முனிவர், பராசரர் ஆகியோரும் இங்கு இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
  • இந்தக் கோயிலை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என அகஸ்தியர் கூறினார்.
யமன்

பல உயிர்களைப் பறித்ததால் பாவங்கள் பல செய்ததாக யமன் வருந்தினார். தான் ஒருவேளை இறந்தால் நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வு காண பிரம்மனிடம் ஆலோசனை கேட்டார். பிரம்மன் யமனிடம் பூமிக்கு சென்று காவிரி நதிக்கரையில் சந்தன மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் சிவனை நோக்கி தவம் செய்யும்படி கூறினார். யமன் 'காந்தாரண்யம்' என்று அழைக்கப்பட்ட ஸ்ரீவாஞ்சியம் தன் தவத்திற்கு பொருத்தமாக இருக்கும் என கண்டறிந்து தவம் செய்தார். யமனின் தவத்தால் மகிழ்ந்து சிவன் அவருக்கு தரிசனம் தந்து கடமையைச் செய்வதால் பாவம் நிகழாது என அறிவுறுத்தினார். சிவபெருமான் அவருக்கு இந்தக் கோயிலின் காவலர் அந்தஸ்தையும் வழங்கினார். யமன் இந்தக் கோயிலைக் கட்டி இங்கு தங்கியதாக நம்பப்படுகிறது. இத்தலத்திற்கு வரும் மக்கள் முதலில் யமனை வழிபட வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. சிவபெருமான் யமனை இங்கு வழிபட வரும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிம்மதியையும் கிடைக்கும் வகை செய்தார்.

கங்கை

பக்தர்கள் தங்கள் பாவங்களைத் தீர்க்க கங்கை நீரில் நீராடுவதால் அந்தப் பாவங்கள் அனைத்தையும் தான் பெற்றிருக்கலாம் என்று கருதி நிவாரணத்திற்காக சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தாள் கங்கை. இறைவன் அவளை ஸ்ரீவாஞ்சியத்திற்கு வந்து இந்தக் கோயிலின் குளத்தில் நீராடும்படி அறிவுறுத்தினார். இக்கோயிலின் குளம் சிவபெருமானால் தனது திரிசூலத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக நம்பப்பட்டது. கங்கை இத்தலத்திற்குச் சென்று குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டாள். அவள் இன்னும் இந்த கோவிலின் குளத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த குளம் 'குப்தகங்கா' என்று அழைக்கப்பட்டது.

வாஞ்சிநாதசுவாமி கோயில்

கோவில் பற்றி

  • மூலவர்: வாஞ்சிநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர்
  • அம்பாள்: மங்களாம்பிகை, வாழவந்தநாயகி, சுகந்தகுண்டலாம்பிகை
  • தீர்த்தம்: குப்தகங்கை, யமதீர்த்தம், ஆனந்ததீர்த்தம், தேவதீர்த்தம், லட்சுமிதீர்த்தம், நாகதீர்த்தம், சக்கரதீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: சந்தன மரம்
  • பதிகம் பாடியவர்கள்: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார்
  • இருநூற்று எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • எழுபதாவது சிவஸ்தலம்.
  • சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • கடைசியாக கும்பாபிஷேகம் ஏப்ரல் 10, 1989 அன்று நடந்தது

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இக்கோயிலில் மூன்று நடைபாதைகளும், பிரதான கோபுரம் ஐந்து அடுக்குகளும் கொண்டது. இந்த கோவிலில் ஒரு யம வாகனம் உள்ளது. அதன் மேல் சிவபெருமானின் சிலை திருவிழாக்களின் போது எடுத்துச் செல்லப்படும். கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் உள்ளது.

சிற்பங்கள்

இக்கோவிலில் சிவன், பார்வதி தேவியின் சன்னதிகள் தவிர, அபயங்கர விநாயகர், முருகன், அவரது துணைவியருடன் மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரின் சன்னதிகள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், க்ஷேத்திர லிங்கம், சட்டநாதர், துர்க்கை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மேலும் மாடவீதிகளில் தேயு லிங்கம், ஆகாச லிங்கம், தர்மாம்பாள், கைலாசநாதர், மகாலட்சுமி, சந்திரமௌலீஸ்வரர், சண்டிகேஸ்வரர், மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரர் உள்ளனர். மகாலட்சுமியின் யானைக்கு நான்கு தந்தங்கள் உள்ளது வித்தியாசமானது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரின் சிலைகளைக் காணலாம். இங்கு நவக்கிரகம் இல்லை. சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. யமனுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தலத்தில் யமனுடன் யம கணக்காளரான சித்ரகுப்தனையும் காணலாம். உள்மாடவீதியில் பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. அவர் யோக தோரணையில் அமர்ந்துள்ளார். அவனுடன் அவனது மலை நாய் காணப்படவில்லை என்பது இந்தச் சிலையின் தனிச் சிறப்பு. பைரவர் சன்னதிக்கு அடுத்து ராகு-கேது சன்னதி இரண்டும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

  • அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இக்கோயிலின் முருகப் பெருமானைப் போற்றிப் பாடல்கள் பாடினார்
  • இந்த கிராமத்தில் ஒரு மரணம் ஏற்பட்டாலும் கோவில் மூடப்பட வேண்டும் என்பது பாரம்பரியம்.
  • இக்கோயிலில் கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்
  • இந்த இடம் 'பூலோக கைலாசம்' என அழைக்கப்படுகிறது
  • தேவார நால்வர் தங்கள் பதிகங்களை வழங்கிய ஸ்தலங்களில் ஒன்று
  • ராகு-கேது தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரஸ்தலம். இங்குள்ள ராகு-கேதுவை வழிபடுவதன் மூலம் திருமண பாக்கியம், சந்ததி உண்டாகும், நரம்பு கோளாறுகள் குணமாகும்
  • பக்தர்கள் இங்கு யமனை வழிபட்டால் மரண பயம் நீங்கும் என்பது நம்பிக்கை
  • இங்குள்ள யமனை வழிபடுவதால் பக்தர்கள் வாழ்க்கை, இறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
  • திருவெண்காடு, சாயவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய இடங்களில் இறைவனின் பெயர்களில் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த தலங்கள் அனைத்தும் காசிக்கு இணையான புனிதமானதாக கருதப்படுகின்றன

வழிபாடு

  • இக்கோயிலில் முதலில் யமனுக்கும் பின்னர் மற்ற தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெறும். இக்கோயிலில் பக்தர்கள் முதலில் குப்தகங்கையில் நீராடி, பின்னர் இந்த குளத்தின் கரையில் உள்ள விநாயகரை வணங்கி, பின்னர் யமனின் சன்னதிக்குச் சென்று வழிபட்டு, இறுதியாக சிவன் சன்னதிக்குச் செல்ல வேண்டும்.
  • இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி தேவியை நூற்றியெட்டு தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து விதமான தோஷங்களிலிருந்தும் விடுபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
  • இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் சந்தன மரம். இங்கு பூஜைக்கு வில்வ இலைக்குப் பதிலாக சந்தன இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இங்கு திருஞானசம்பந்தரின் பாசுரத்தை ஓதினால், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள் என்பது நம்பிக்கை.
  • குப்தகங்க தீர்த்தம் வெளிப் பாதையின் வடக்குப் பகுதியில் உள்ளது. ஸ்தல புராணத்தின்படி, இந்தக் குளத்தில் புனித நீராடுவது வாரணாசி, ராமேஸ்வரம் மற்றும் கும்பகோணத்தில் உள்ள மகா மஹம் குளம் ஆகியவற்றில் நீராடுவதற்குச் சமம். குப்தகங்கைக் கரையில் உள்ள விநாயகரை புனித நீராடிய பிறகு வழிபட வேண்டும். இந்த தீர்த்தத்தில் நீராடுவது பக்தர்களுக்கு முக்தி பெற உதவும் என்றும், மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட உதவும் என்றும் நம்பப்படுகிறது.
  • இக்கோயிலுடன் தொடர்புடைய மேலும் மூன்று தீர்த்தங்கள் லட்சுமி தீர்த்தம், நாகதீர்த்தம், சக்கர தீர்த்தம். இவை முறையே லட்சுமி தேவி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டன. தமிழ் மாதமான ஆவணியில் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தீர்த்தத்தில் நீராடுவது, பிரிந்த குடும்பத்துடன் ஒருவரை மீண்டும் இணைக்கும் என நம்பப்படுகிறது. தமிழ் மாதமான வைகாசியில் திருவோணம் நட்சத்திர நாளில் நாக தீர்த்தத்தில் நீராடுவது அனைத்து நாக தோஷங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கும் என நம்பப்படுகிறது. தமிழ் மாதமான ஆவணியில் ஏகாதசி/துவாதசி நாட்களில் சக்கர தீர்த்தத்தில் நீராடினால் ஒருவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • முதல் மாடவீதியில் உள்ள விநாயகர் வெண்ணெய் பிள்ளையார் என அழைக்கப்பட்டார். வயிற்றுக் கோளாறால் அவதிப்படுபவர்கள் இந்தப் பிள்ளையாரின் வயிற்றில் சிறிது வெண்ணெய் தடவினால் அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 6-12
  • மாலை 3.30-8.30

விழாக்கள்

  • ஆடி பத்தாம் நாள் ஆடிப்பூரம் திருவிழா
  • ஐப்பசி பன்னிரெண்டாம் நாள் கடை ஞாயிறு திருவிழா
  • மாசி பத்தாம் நாள் மாசி மகம்
  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலம்
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம்.
  • கார்த்திகையில் திருகார்த்திகை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் குப்தகங்கையில் தீர்த்தவாரி
  • மார்கழியில் திருவாதிரை
  • மாசியில் சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படும்

உசாத்துணை


✅Finalised Page