under review

வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை

From Tamil Wiki
வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை நூல்

வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை (பதிப்பு: 1990) மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் புலவர் தணிகைவேள் பாரதியார். முனைவர் வே. இரா. மாதவன் இந்நூலின் பதிப்பாசிரியர்.

வெளியீடு

பண்டைய ஏட்டுச்சுவடிகளிலிருந்து பல்வேறு இலக்கிய, சமய, புராண நூல்களைப் பதிப்பித்திருக்கும் முனைவர் வே. இரா. மாதவன் பதிப்பித்த நூல், வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை. இந்நூலை, தஞ்சாவூரைச் சேர்ந்த பாவை வெளியீட்டகம் 1990-ல் வெளியிட்டது. இச்சுவடி நூலை இயற்றியவர் தணிகைவேள் பாரதியார். இந்நூலின் காலம் பற்றி அறிய இயலவில்லை.

ஆசிரியர் குறிப்பு

புலவர் தணிகைவேள் பாரதியாரைப் பற்றிய விவரங்களை முழுமையாக அறிய இயலவில்லை. 'வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை' தவிர்த்து சமயம் மற்றும் தல புராண நூல்கள் சிலவற்றை எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது, சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் திருக்கோயில் தலபுராணம். தணிகைவேள் பாரதியார் 'அருட்கவி' என்று போற்றப்பட்டார்.

நூல் அமைப்பு

வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை நூல், முனைவர் வே. இரா. மாதவனின் பதிப்புப் பாயிரமாக ஏழு பாடல்களும், சிரவையாதீனக் கவிஞர் ப.வெ. நாகராசன் மூன்று சிறப்புப் பாயிரங்களும் கொண்டது. விநாயகர் மீதான காப்புச் செய்யுளைத் தொடர்ந்து, ஏழேழு மாலை என்பதற்கேற்ப 49 பாடல்கள் இடம் பெற்றன. நூலின் இறுதியில் வாழ்த்துச் செய்யுள் இடம்பெற்றது. பாடல்கள் நேரிசை வெண்பாவில் உள்ளன.

உள்ளடக்கம்

வறுமையால் மிகவும் துன்பப்பட்ட தணிகைவேள் பாரதியார், அவ்வறுமையை, சிவன் மற்றும் முருகனின் பக்தனான தன்னை விட்டு 'நீங்கு' என்றும், 'போ' என்றும், 'பற', 'விலகு', 'ஓடு' 'ஏகு', 'செல்', 'நட' என்றும் பல பாடல்களில் பாடியுள்ளார்.

பாடல் நடை

தோன்றிய நாள்முதலாய்த் தொல்லை பலகொடுத்த
மான்றல் வறுமையினி வாழ்வையோ? - ஈன்றானும்
தாயும் இறையாய் எனக்கிருக்கச் சற்றெண்ணி
நீயும் எனைவிட்டு நீங்கு.

வாலப் பருவமுதல் வந்தலைத்த நல்குரவே
கோலத் தெரிவையிடங் கொண்டானைச் சீலத்
தகவாகப் போற்றினேன் சார்ந்த வறுமை
புகலாகா வாறு நீ போ.

வெண்ணீற்றுக் கோலத்தான் வெள்விடை ஏறுவானை
உண்ணீர்மை யாலே உறவைத்தேன் - கண்ணேறு
காட்டாய் வறுமையே காண்பொருள் பெற்றார்பால்
பாட்டாய்ப் படித்தேன் பற.

வறுமையே என்பால் வளர்ந்ததால் வையம்
சிறுமையே கொண்டதைச் சிந்தி - வெருவி
விடைகொடுத்தேன் செல்லே விடையன் திருமால்
நடைமுறை சொல்வேன் நயந்து.

நல்குரவே உன்னாலே நான்பட்ட துன்பமெலாம்
சொல்குவதும் அல்லல் துயரறவே - மல்குவளம்
தாம்பெறவே நம்பன் தனிப்பாதம் போற்றுவன்
தேம்பாய் வறுமைநீ செல்.

தள்ளும் வறுமையே நீசெய் சதுரதனால்
எள்ளி எனைப்பேச விட்டனையே - வள்ளி
கணவற்குத் தாதை கழற்கடியேன் நீபோ
பணமிருந்தும் பாங்கில்லார் பால்

மதிப்பீடு

வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை நூல் எளிய, இனிய நடையில் இயற்றப்பட்டுள்ளது. வறுமையை விரட்டும் வகையில் சொல் பலிதத்துடன் இயற்றப்பட்ட நூலாகவும், வறுமை நீங்க வேண்டிப் பாராயணம் செய்யப்படும் நூலாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:19:02 IST