வடக்கன்குளம் தூய திருக்குடும்ப தேவாலயம்
வடக்கன்குளம் தூய திருக்குடும்ப தேவாலயம் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் கிராமத்தில் உள்ளது. தூய திருக்குடும்ப ஆலயம் தூத்துக்குடி மறைமாவட்டம்[1] கடற்கரை அல்லாத பகுதியில் அமைந்த முதல் பங்கு[2] திருவாலயம். இவ்வாலயம் 'சின்ன ரோம்' என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது. புனிதர் ஜான் டி பிரிட்டோ வடக்கன்குளத்தில் முதல் திருவாலயத்தை நிறுவினார். புனிதர் தேவசகாயம் பிள்ளை வடக்கன்குளம் ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்.
வரலாறு
ஓலை ஆலயம்
வடக்கன்குளம் தூய திருக்குடும்ப தேவாலயம் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் கடற்கரை அல்லாத பகுதியில் கட்டப்பட்ட முதல் திருப்பங்கு. மதுரை மிஷனின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்த கடைசி ஆலயம். பொ.யு. 1680-ல் சாந்தாயி என்பவர் கிறிஸ்தவராக மதமாற்றம் பெற்ற முதல் பெண். இவர் தோப்புவிளையிலிருந்து வடக்கன்குளத்திற்கு குடியேறியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
பொ.யு. 1685-ல் தூத்துக்குடி மாவட்டம் கம்மநாயக்கன்பட்டியின் திருப்பங்கு தந்தையாக விளங்கிய ஜான் டி பிரிட்டோ தன் குதிரையில் வடக்கன்குளம் வந்த போது அங்கே நான்கு கிறிஸ்துவ குடும்பங்களைச் சந்தித்தார். அவர்களுக்காக ஓலையால் ஆன ஒரு திருவாலயத்தை நிறுவினார். இதுவே வடக்கன்குளத்தில் அமைந்த முதல் திருவாலயம். ஜான் டி பிரிட்டோ 1686-ல் இவ்வாலயத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு திருமுழுக்கு அளித்தார். இக்காலத்தில் மதுரை மிஷனிலிருந்து கொச்சி இயேசு சபை நேமம் மிஷனுடன் வடக்கன்குளம் இணைக்கப்பட்டது. பொ.யு. 1699-ல் ஜான் டி பிரிட்டோ மறைவிற்கு பிறகு அருட்தந்தை டி'சூசா வடக்கன்குளத்தில் தங்கி திருப்பணி செய்தார்.
பொ.யு. 1742-43-ல் 'போர்சுகலில் இருந்து வடக்கன்குளத்திற்கு' என்ற குறிப்பு பொறிக்கப்பட்ட மரப்பெட்டி தெற்கு கடற்கரையோர கிராமம் கூட்டப்புளியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் இக்குறிப்புடன் மூன்று கன்னி மேரி திருவுருவச் சிலையும் இருந்தது. ஒன்று, கம்மநாயக்கன்பட்டி ஆலயத்திற்கும், ஒன்று ஆயர்களுக்கும் வழங்கப்பட்டது. மற்ற சிலை வடக்கன்குளம் ஆலயத்தில் நிறுவப்பட்டது. இதுவே தற்போது காட்சி மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை. வேதநாயகம் சாஸ்திரியாரின் தந்தையான தேவசகாயம் பிள்ளை மே 14, 1745 அன்று அருட்தந்தை புதேரியிடம் திருமுழுக்குப் பெற்றார். அருட்தந்தை புதேரி பொ.யு. 1750-ல் இவ்வாலயத்தைப் புதுப்பித்துக் கட்டினார். 1752-ல் தேவசகாயம் பிள்ளையின் மறைவிற்கு பிறகு அவரது தலைப்பாகை திருக்குடும்ப ஆலயத்தில் பாதுகாக்கப்படுகிறது. அவரது மனைவி ஞானப்பூ (பார்கவி ) வடக்கன்குளம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
பொ.யு. 1787-ல் இயேசு சபை தடை செய்யப்பட்ட போது கிராங்கனூர் பேராயர் தோரீஸ் திருப்பணியை கவனித்தார். சிலகாலம் புதுச்சேரி குருக்களும் வடக்கன்குளத்தில் தங்கி பணியாற்றினர் என அருட்தந்தை பவோனேயின் மிஷன் அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.
கற்கட்டடம்
பொ.யு. 1838-ல் பழைய ஓலையால் ஆன சர்ச் தகர்க்கப்பட்டு புதிய கற்கட்டடம் செய்யும் பணி பிரான்சின் துலூஸ் பகுதி இயேசு சபை பணியாளர்கள் வந்த போது தொடங்கியது. பிரெஞ்ச் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹென்றியெட் பெல்டெர்க் திருமணம் ஆகி 27 ஆண்டுகளுக்குப் பின் மேரி அன்னையின் அருளால் குழந்தை பிறந்ததால், அவர் வடக்கன்குளம் தேவாலயம் அமைய நிதி வழங்கினார். புதிய கட்டடத்திற்கான அடிக்கல் 1855 -ம் ஆண்டு நாட்டப்பட்டு, ஜூன் 29, 1872 அன்று மதுரை ஆயர் கனோஸால் திறந்துவைக்கப்பட்டது. அருட்தந்தை கிரிகோரி வடக்கன்குளத்தில் பங்குதந்தையாகப் பணியாற்றினார். பொ.யு. 1993-ல் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த ரெவரண்ட் அமலநாதர் வடக்கன்குளம் ஆலயத்தைப் புண்ணியத் திருத்தலமாக[3] அறிவித்தார்.
பிற கட்டடங்கள்
பொ.யு. 1953-ல் அருட்தந்தை பெனடிக்ட் ஆலயத்திற்கு அருகே சிறிய மண்டபம் ஒன்றை அமைத்தார். பொ.யு. 2004-ல் அருட்தந்தை பன்னீர்செல்வம் அம்மண்டபத்திற்கு மேடை கட்டி அழகு செய்தார். அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் 2010-ல் புதிய நற்கருணை ஆலயம் ஒன்றை அமைத்தார். 2011-ல் அதனை விரிவாக்கினார். அவர் காலத்தில் (2009 - 2011) இரண்டு மேல்நிலைப்பள்ளிகளுக்கான கட்டடம் கட்டப்பட்டது.
மாதா கலையரங்கம்
பொ.யு. 2019-ல் புனித செபஸ்டின் ஆலயத்தை அருட்தந்தை ஜான் பிரிட்டோ புதுப்பித்தார். மாதா கலையரங்கம் என்ற திறந்த வெளி அரங்கத்தை அமைத்து அதில் ஜான் டி பிரிட்டோவிற்கான நினைவிடத்தை உருவாக்கினார். புனித ஜார்ஜ் பக்க ஆலயத்தை புதுப்பித்தார். இவ்வாலயம் தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அவர்களால் ஆகஸ்ட் 14, 2020-ல் திறந்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு காணிக்கை மாதாவின்[4] ஆலயம் நிறுவப்பட்டு டிசம்பர் 06, 2020 அன்று ஆயர் ஸ்டீபனால் திறந்துவைக்கப்பட்டது. ஆலயத்திற்கான கொடிமரமும், புதிய கட்டமைப்பும் தொடங்கப்பட்டன. 2022-ல் ஹைதராபாத் பேராயர் ஆண்டனி பூலாவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
குருச்சிலை
மங்கம்மாள் சாலையில் அமைந்திருந்த தேவசகாயம் பிள்ளைக்கான குருச்சிலை ஜான் பிரிட்டோவால் ஆலயத்துடன் இணைக்கப்பட்டது. 2022-ல் புனித தெரசா தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.
தொன்மம்
அக்டோபர் 23, 1803 அன்று நிகழ்ந்ததாக ஒரு தொன்மக் கதை இவ்வாலயம் பற்றி நிலவுகிறது. காலை 11.20 மணியளவில் விண்ணேற்பு அன்னையின் திருவுருவச் சிலை கரங்களை நீட்டி முகம் துயரமடைந்து கண்களில் கண்ணீர் வடிந்தது. இதை சவரிமுத்துப்பிள்ளை, உபதேசியார் யாகப்பர் பிள்ளை ஆகியோர் கண்டதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்ட மக்கள் ஆலயத்திற்கு வந்து அழுது மனந்திரும்பி "Parce Domine, parce populo tuo...", "Mea culpa, mea culpa, mea maxima culpa" போன்ற ஜெபப்பாடல்களைப் பாடியதாகவும், அதன் பின் அன்னையின் திருவுருவம் இயல்புநிலைக்குத் திரும்பியதாகவும் 'La Mission du Maduré' என்ற பிரெஞ்ச் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவாலய அமைப்பு
முக்கோண வடிவில் அமைந்த திருக்குடும்ப ஆலயம் ஓவல் வடிவிலும், பீடத்தின் மேல் நின்று பார்க்கும் போது யு வடிவிலும் காட்சி கொண்டுள்ளது. உள்ளே நுழைவதற்கு மூன்று திசைகளில் என ஐந்து நுழைவுவாயில் உள்ளன. தாமரை மொட்டு (டூம்) வடிவ கோபுரங்கள் மூன்றும் அதனை தாங்கும் உத்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மைய ஆலயமான திருக்குடும்ப தேவாலயத்துடன் பிற ஆலயங்களான, செயிண்ட் மைக்கேல், செயிண்ட் ஜார்ஜ், செயிண்ட் செபாஸ்டின், செயிண்ட் , காட்சி மாதா, காணிக்கை மாதா, வடக்கன்குளம் வேளாங்கன்னி ஆலயங்களும் இடம்பெற்றுள்ளன.
தேவாலயத்துடன் தொடர்புடைய புனிதர்கள்
தேவசகாயம் பிள்ளை
நீலகண்டன் பிள்ளை என்னும் இயற்பெயர் கொண்ட தேவசகாயம் பிள்ளை மே 14, 1745 அன்று வடக்கன்குளம் திருக்குடும்ப தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்று தேவசகாயம் பிள்ளை என்ற பெயரும் பெற்றார். பொ.யு. 1752-ல் தேவசகாயம் பிள்ளையின் மறைவிற்குப் பின் அவரது தலைப்பாகை வடக்கன்குளம் ஆலயத்தில் பாதுகாக்கப்படுகிறது. தேவசகாயம் பிள்ளையின் மனைவி ஞானப்பூவின் கல்லறை வடக்கன்குளம் ஆலய வளாகத்தில் புனித திரு அன்னை ஆலயத்தின் இடதுபுறம் உள்ளது. கிறிஸ்தவ தமிழறிஞரான வேதநாயகம் சாஸ்திரியார் தேவசகாயம் பிள்ளை, ஞானப்பூ இணையருக்குப் பிறந்தவர்.
பார்க்க: தேவசகாயம் பிள்ளை
சாந்தாயி
சாந்தாயி தோப்புவிளை கிராமத்தை சேர்ந்த பெண்மணி. இவர் கிறிஸ்தவராக மதம் மாறி வடக்கன்குளத்தில் குடியேறினார் (பொ.யு. 1680). இவரே வடக்கன்குளத்தில் கிறிஸ்தவராக மதம் மாறிய முதல் பெண். பொ.யு. 1685-ல் புனிதர் ஜான் டி பிரிட்டோ வடக்கன்குளம் வந்த போது சாந்தாயியை சேர்ந்த நான்கு கிறிஸ்தவ குடும்பங்கள் இருப்பதைக் கண்டு அங்கே ஓலையால் ஆன சிறிய ஆலயம் ஒன்றை நிறுவினார்.
ஜான் டி பிரிட்டோ
புனிதர் ஜான் டி பிரிட்டோ தூத்துக்குடி மறைமாவட்டம் கம்மநாயக்கன்பட்டியின் திருப்பங்கு தந்தையாக விளங்கியவர். தமிழில் அருளநாதர் என்றழைக்கப்படுபவர். இவர் தன் குதிரையில் வடக்கன்குளம் வந்த போது அங்கே நான்கு கிறிஸ்தவ குடும்பங்கள் இருப்பதைக் கண்டு அவர்களுக்காக ஓலையால் ஆன ஆலயம் ஒன்றை பொ.யு. 1685-ல் நிறுவினார். பின் பொ.யு. 1686-ல் வடக்கன்குளம் வந்து இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினார். ராமநாதபுரம் அரசியலில் பங்கு கொண்டதால் அவர் நாடு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர் கட்டிய கோவில் தற்போது சிறிய கற்கோவிலாக உள்ளது.
பார்க்க: ஜான் டி பிரிட்டோ
விழாக்கள்
தேவசகாயம் பிள்ளை திருவிழா
ஆண்டு தோறும் ஜனவரி 1அன்று தேவசகாயம் பிள்ளை திருப்பயணத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13 அன்று திருவிழிப்பு பிரார்த்தனையும் நிகழும்
ஜான் டி பிரிட்டோ திருவிழா
பிப்ரவரி 14 அன்று வடக்கன்குளம் தேவாலயத்தில் திருப்பலி, ஊர்வலம், கூட்டு ஜெபங்களுடன் கொண்டாடப்படுகிறது. புனிதர் ஜான் டி பிரிட்டோ நிறுவிய ஆலயத்தை தரிசிக்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
தேவசகாயம் ஞானஸ்தான நாள்
மே 14 அன்று தேவசகாயம் பிள்ளை ஞானஸ்தானம் பெற்ற நாள் அவர் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திருமுழுக்கு தொட்டியை வணங்குவதற்காக வரும் திருப்பயணிகளுக்கு இது முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.
சிறப்பு
- பொ.யு. 1926-ம் ஆண்டு பிரான்சிஸ் டிபுர்தியஸ் ரோசே[5] வடக்கன்குளம் ஆலயத்தின் சிறப்பைக் கண்டு அதனை 'சின்ன ரோம்' என அழைத்து சிறப்பித்தார்.
- தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முதல் விகார் ஜெனரலாகப் பணியாற்றிய மொன்சிஞோர் சூசை மரியனாதர் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர்.
- மரியனாதரின் சகோதரர் யாகப்பர் பிள்ளை அறுபது ஆண்டுகள் வடக்கன்குளத்தில் உபதேசியார் பணி செய்தார். அவருக்கு பொ.யு. 1935 ஆம் ஆண்டு பதினொன்றாம் போப் லூயிஸ் 'பென்னே மெரிண்டி'[6] பட்டம் சூட்டிக் கௌரவித்தார்.
பங்குதந்தையர்கள்
| அருட்தந்தை பெயர் | காலம் | |
|---|---|---|
| 1 | அருட். பெர்னார்ட் டி'சூசா | 1698 - 99 |
| 2 | அருட். மரியா போர்ஜீஸ் | 1700 - 04 |
| 3 | அருட். பீட்டர் மார்ட்டின் | 1705 - 07 |
| 4 | அருட். சைமன் கார்வெல்லோ | 1708 |
| 5 | அருட். போர்ஜீஸ் | 1709 - 10 |
| 6 | அருட். லூயிஸ் நோவேல் | 1711 - 12 |
| 7 | அருட். இக்னேஷியஸ் கார்டோசா | 1712 |
| 8 | அருட். பர்சஸ் | 1713 |
| 9 | அருட். பெர்னார்டிஷா | 1714 |
| 10 | அருட். ஆண்டனி பிராண்டோலின் | 1715 |
| 11 | அருட். அலெக்சாண்டர் | 1716 |
| 12 | அருட். டொமினிக் மடேயரா | 1717 - 27 |
| 13 | அருட். கிலியா | 1728 |
| 14 | அருட். தாமஸ் குயிலானி | 1729 - 33 |
| 15 | அருட். ஜோசப் சில்வேரியா | 1734 - 40 |
| 16 | அருட். ஜான் பாப்டிஸ்ட் புத்தாரி | 1741 - 50 |
| 17 | அருட். பிரான்சிஸ் தாம்சினி | 1751 - 75 |
| 18 | அருட். தேவ வரதனார் | 1776 - 91 |
| 19 | அருட். இக்னேஷியஸ் | 1792 - 1802 |
| 20 | அருட். ஜான் லூயிஸ் கார்டோஷா | 1803 |
| 21 | அருட். பிரான்சிஸ் டி' மிரண்டா | 1804 - 08 |
| 22 | அருட். சேவியர் கெஸ்டாண்ட் | 1809 - 26 |
| 23 | அருட். ஜேக்கப் புதம் பெரே | 1827 - 31 |
| 24 | அருட். மைக்கேல் ப்ராஸ் | 1832 - 35 |
| 25 | அருட். தைரியநாதர் | 1836 - 37 |
| 26 | அருட். அலெக்சாண்டர் மார்ட்டின் | 1838 |
| 27 | அருட். லூயிஸ் துரங்குவே | 1839 - 40 |
| 28 | அருட். ஆண்டோனின் சால்ஸ் | 1841 |
| 29 | அருட். கான்ஸ்டண்டைன் | 1842 - 43 |
| 30 | அருட். ஜோசப் கிரிகோரி | 1844 |
| 31 | அருட். லூயிஸ் வெர்டியர் | 1847 - 50 |
| 32 | அருட். ஜெரோமி மெஸ் | 1851 - 52 |
| 33 | அருட். ஜோசப் கிரிகோரி | 1853 - 61 |
| 34 | அருட். கான்ஸ்டென்டைன் | 1862 - 65 |
| 35 | அருட். ஜோசப் கிரிகோரி | 1866 -70 |
| 36 | அருட். பௌகாட் | 1870 - 73 |
| 37 | அருட். வில்லியம் பேஜெட் | 1873 - 74 |
| 38 | அருட். பிரிட்டிரிக்கா போஸ் | 1875 |
| 39 | அருட். விக்டர் டெல்பீச் | 1876 |
| 40 | அருட். ஜோசப் பெசரெல் | 1877 - 82 |
| 41 | அருட். வில்லியம் புக்கே | 1882 - 93 |
| 42 | அருட். ஜோசாப் சங் பாஸ்கல் | 1894 - 95 |
| 43 | அருட். அடைக்கலம் | 1895 - 96 |
| 44 | அருட். பீட்டர் பிரண்ட் இன்டோரியம் | 1896 - 97 |
| 45 | அருட். காப்ரியேல் பெர்டியூ | 1897 - 98 |
| 46 | அருட். சின்னப்பர் | 1899 |
| 47 | அருட். தைரியநாதர் | 1899 - 1910 |
| 48 | அருட். அதாரியன் கௌசானல் | 1910 - 19 |
| 49 | அருட். பொனோர் | 1919 - 23 |
| 50 | அருட். இக்னேஷியஸ் | 1931 - 36 |
| 51 | அருட். மரியதாஸ் | 1936 - 43 |
| 52 | அருட். ஜோக்கிம் | 1943 - 50 |
| 53 | அருட். பெனடிக்ட் | 1950 - 54 |
| 54 | அருட். நவமணி | 1954 - 60 |
| 55 | அருட். மரியா கானம் | 1960 - 74 |
| 56 | அருட். எம்.எஸ். ஆண்டனி | 1974 - 82 |
| 57 | அருட். பீட்டர் ராஜா | 1982 - 85 |
| 58 | அருட். குரூஸ் மரியான் | 1985 - 88 |
| 59 | அருட். ஜோப் டி ரோஸ் | 1988 - 90 |
| 60 | அருட். இருதயராஜ் | 1990 - 95 |
| 61 | அருட். மரியதாஸ் | 1995 - 97 |
| 62 | அருட். ஜோப் டி ரோஸ் | 1997 - 98 |
| 63 | அருட். தியோபிலஸ் | 1998 - 2003 |
| 64 | அருட். பன்னீர்செல்வம் | 2003 - 08 |
| 65 | அருட். நெல்சன் பால்ராஜ் | 2008 - 13 |
| 66 | அருட். ததியோஸ் ராஜன் | 2013 - 18 |
| 67 | அருட். ஜான் பிரிட்டோ | 2018 - 23 |
| 68 | அருட். மார்ட்டின் மானுவேல் | 2023 - 25 |
| 69 | அருட். ஏ. ஜோசப் கிறிஸ்டியன் | 2025 - |
பிற ஆலயங்கள்
புனித அந்தோணியர் ஆலயம்
- புனித ஜார்ஜ் ஆலயம்
- புனித செபஸ்டீன் ஆலயம்
- புனித மைக்கேல் அதிதூதர் ஆலயம்
- வேளாங்கன்னி ஆலயம்
- காணிக்கை மாதா ஆலயம்
- திருக்காட்சி அன்னை
திருப்பங்கு குருசடி
- லூர்து அன்னை குருசடி
- புனித ஜான் டி பிரிட்டோ குருசடி
- புனித தேவசகாயம் பிள்ளை குருசடி
துணை ஆலயங்கள்
- புனித ஜார்ஜ் துணை ஆலயம் - புத்தியம்புதூர்
- புனித பிரான்சிஸ் சவேரியார் துணை ஆலயம் - அவரைக்குளம்
வழிபாடு & பிற விவரங்கள்
| கத்தோலிக்க குடும்பங்கள் | 1600 | |
| கத்தோலிக்க மக்கள் தொகை | 7350 | |
| ஞாயிறு திருப்பள்ளி நேரங்கள் | காலை: 5, 7, 9:30 | |
| நற்கருணை ஆலய நேரம் | காலை 9 மணி முதல் இரவு 8 மணி |
பள்ளிகள் & மருத்துவமனைகள்
வடக்கன்குளம் பங்கு தந்தைக்கு கீழுள்ள பள்ளிகள் பற்றிய விவரம்,
வடக்கன்குளம்
பள்ளி
- புனித தெரசா மேல்நிலைப்பள்ளி
- திருக்குடும்ப நடுநிலைப்பள்ளி
- புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
- புனித தெரசாள் தொடக்கப்பள்ளி
- ஆர்.சி. லேஸ் தொழிற்பயிற்சி பள்ளி
- ஓசானம் தையல் பயிற்சி நிறுவனம்
மருத்துவமனை
- வின்சென்ட் டி பால் மருத்துவமனை
அவரைக்குளம்
- புனித சவேரியார் தொடக்கப்பள்ளி
மலர்
பங்கு தந்தை தலைமையில் திருப்பங்கிலிருந்து வடவை மாதா மலர் மாதந்தோறும் வெளியிடப்படுகறது.
துறவற சபைகள்
- ரோசேரியன் தந்தையர்
- துயர அன்னை மரியாவின் பணியாளர் சபை
- பெத்தானியா மலர்மகள் சகோதரிகள்
நிறுவனங்கள்
துறவற சபைக்குக் கீழ் இயங்கும் நிறுவனங்கள்,
- புனித தாமஸ் மருத்துவமனை
- திருக்குடும்ப பெண்கள் அநாதை இல்லம்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
- ↑ தூத்துக்குடி மறைமாவட்டம் - Roman Catholic Diocese of Thoothukudi (Thoothukudi Diocese)
- ↑ Parish
- ↑ Shrine
- ↑ பைபிள் புதிய ஏற்பாடு (மார்க் 12:41-44/லூகா 21:1-4) பகுதியில் வரும் கதை. ஏழை பெண் தனது கடைசி இரண்டு செப்புக் காசுகளை ஆலயத்திற்காக அருளும் பகுதி.
- ↑ பிரான்சிஸ் டிபுர்தியஸ் ரோசே - தூத்துக்குடி ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதல் ஆயராக (பிஷப்) இருந்தவர்
- ↑ Bene Merenti - சிறப்பு திருச்சபை சேவையர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2026, 21:38:06 IST
