under review

தேவசகாயம் பிள்ளை

From Tamil Wiki
Devasahayam pillai1.jpg

தேவசகாயம் பிள்ளை (மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அருளாளர்) (இயற்பெயர்: நீலகண்டன் பிள்ளை) (ஏப்ரல் 23, 1712 - ஜனவரி 14, 1752) திருவிதாங்கூர் அரசவையில் ஆலய நிர்வாகியாகப் பணியாற்றியவர். பின்னர் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார். தேவசகாயம் பிள்ளை இந்தியாவின் முதல் மறைசாட்சி[1] பெற்ற சாமன்யராக அறியப்படுகிறார். கத்தோலிக திருச்சபையால் புனிதர் பட்டம் சூட்டப்பட்டவர்.

பிறப்பு, கல்வி

Devasahayam Pillai.jpg

தேவசகாயம் பிள்ளை (நீலகண்டன் பிள்ளை) ஏப்ரல் 23, 1712 அன்று திருவிதாங்கூர் அரசுக்கு உட்பட்ட கன்னியாகுமரியிலுள்ள நட்டாலம் கிராமத்தில் நம்பூதிரி பிராமணக் குடும்பத்தில் வாசுதேவன் நம்பூதிரி, தேவகி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருவிதாங்கூரில் சமூக அந்தஸ்த்தில் முதன்மையான குடும்பத்தில் பிறந்ததால் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் மொழிகளுடன் நீதிமன்ற அதிகாரியின் ஒழுங்குமுறைகளும் கற்றுத் தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

தேவசகாயம் பிள்ளை1.jpg

தேவசகாயம் பிள்ளை பார்கவி அம்மாளை திருமணம் செய்துக் கொண்டார். தேவசகாயம் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டா வர்மா அரசவையில் ஆலய நிர்வாகியாகவும், உதயகிரி கோட்டையின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். மார்த்தாண்ட வர்மாவின் தளபதி ராமைய்யன் தளவாய் கீழ் பணிப்புரிந்தார். டச் தளபதி டி லெனாயின் கீழ் உதயகிரி கோட்டையை புதுப்பிக்க உதவினார்.

பொது வாழ்க்கை

மதமாற்றம்

நீலகண்டன் பிள்ளை தன் முப்பது வயதில் கடுமையான உளவியல் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். அவரது உறவினர்களின் மரணம், பஞ்சத்தால் நாசமான பயிர்கள் என நெருக்கடிகள் சூழ்ந்தது. அத்தருணத்தில் திருவிதாங்கூரின் படைத்தளபதியாக இருந்த டி. லெனாய் (டச் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்) உடன் நட்பு ஏற்பட்டது. டி. லெனாய் கூறிய பைபிள் கதைகளால் ஈர்க்கப்பட்டார் நீலகண்டன். கிறிஸ்தவ நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட நீலகண்டன் திருவிதாங்கூரிலிருந்து இருபது கிலோமீட்டர் நடந்து வடக்கன்குளம் தூய திருக்குடும்ப தேவாலயத்திற்குச் சென்றார். அங்கே ஒன்பது மாதங்கள் தங்கி பாதர் ஜியோவனி பட்டிஸ்டா புத்தேரியிடம் மத போதனைகள் பெற்றார். பின் மே 14, 1745 அன்று அருட்தந்தை. புத்தேரியிடம் நீலகண்டனுக்கு ஞானஸ்நானம் பெற்று தேவசகாயம் பிள்ளை[2] எனப் பெயரும் பெற்றார். அப்போது அவரது மனைவி பார்கவி அம்மாளும் ஞானஸ்நானம் பெற்று ஞானப்பூ தெரேசா என்னும் பெயர் பெற்றார்.

சுவிசேஷப் பணி
Thiruththondar Kappiyam Book.jpg

தேவசகாயம் பிள்ளை மதமாற்றத்திற்கு பின் நான்காண்டுகள் சுவிசேஷப் பணியில் ஈடுபட்டார். அவரது விசுவாச செய்திகள் பொ.யு.18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூரில் நிலவிய கடுமையான சாதியக் கட்டமைப்பிற்கு எதிராக இருந்தது. தேவசகாயம் பிள்ளை ஒடுக்கப்பட்ட சாதியினருடன் பழகி ஒரு சமத்துவத்தை நடைமுறைப்படுத்த எண்ணினார். தேவசகாயத்தின் இச்செயல் அரசவையில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பொ.யு. 1749-ல் மன்னர் மார்த்தாண்ட வர்மா தேவசகாயம் பிள்ளையைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். தேவசகாயம் பிள்ளையின் பூணூல் பறிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக தெருவில் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு கொண்டு செல்லப்படும் போது அவரது உடல் முழுவதும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு எருமையின் மேல் ஏற்றிச் செல்லப்பட்டார்.

சிறைவாசம்

தேவசகாயம் பிள்ளை மூன்றாண்டுகள் சிறையில் சித்திரவதைச் செய்யப்பட்டார். தினமும் எண்பது சவுக்கடிகள் தண்டனை பெற்றார். காயத்தின் மேல் மிளகுப்பொடி தூவப்பட்டது. சிறையில் அவர் நோயாளிகளைக் குணப்படுத்தியதாகவும், இறந்த ஆட்டுக்குட்டியை உயிர்ப்பித்ததாகவும் தொன்மம் நிலவுகிறது.

மரணம்

தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ மதத்தைக் கைவிடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் அதனை மறுத்ததால் ஜனவரி 14, 1752 அன்று சிறைக்காவலர்கள் தேவசகாயம் பிள்ளையை ஆரல்வாய்மொழிக்கு அருகேயுள்ள காற்றாடி மலைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கே அவருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. தேவசகாயம் பிள்ளை இறுதியாக 'இயேசுவே ரட்சிப்பீரே' என மலையாளத்தில் சொல்லி இறந்ததாக நம்பப்படுகிறது.

அடக்கம்

தேவசகாயம் பிள்ளை இறந்து பின் உள்ளூர் குருமார்கள் அவரது உடலின் சில எஞ்சிய பகுதிகளைக் காட்டிலிருந்து கண்டெடுத்தனர். அவரது நாக்கு சிதையாமல் கண்டெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவரது எலும்புகளும், நாக்கும் நாகர்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டு கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

அற்புதங்கள்

  • சிறையிலிருந்த போது அவர் நோயாளிகளைக் குணப்படுத்தியதாகவும், இறந்த ஆட்டுக்குட்டியை உயிர்ப்பித்ததாகவும் தொன்ம கதையுள்ளது.
  • அவர் மரணதண்டனை நிறைவேற்ற அழைத்துச் சென்ற போது கடும் தாகத்திலிருந்ததால் அருகிலிருந்த பாறையை முட்டியால் பெயர்த்தார் என்றும் அப்போது பாறை பிளந்து தண்ணீர் வந்ததாகவும் தொன்மமுள்ளது.
மணியடிச்சான் பாறை

ஆரல்வாய்மொழியிலுள்ள உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளும், யாத்திரீகர்களின் குறிப்புகளும் சொல்வது படி அவர் உயிர் நீத்த இடத்தில் ஒரு பாறை மணி வடிவில் இருந்ததாக நம்பப்படுகிறது. அப்பாறை தனித்துவமான உலோக ஓசையை எழுப்புகிறது. தேவசகாயம் பிள்ளை இறந்த கணத்தில் அப்பாறை ஒலி எழுப்பியதாக நம்பப்படுகிறது.

புனிதர் பட்டம்

கிறிஸ்தவ குருவாகவோ, துறவற சபையின் உறுப்பினராகவோ இல்லாமல் இல்லறவாசியாக புனிதத்துவத்தை அடைந்த முதல் நபர் தேவசகாயம் பிள்ளை. மே 15, 2022-ல் கத்தோலிக்க திருச்சபை இவருக்கு புனிதர் பட்டம் வழங்கியது. 2012-ல் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

யாத்திரை

தேவசகாயம் பிள்ளை பிறந்த நட்டாலம் கிராமத்திலிருந்து, அவர் அடக்கம் செய்யப்பட்ட கோட்டாறு வரை ஆறு முக்கிய புனித யாத்திரை தலங்கள் வழியாக அவரது புனித மரபு போற்றப்படுகிறது.

நூல்கள்

தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பல்வேறு வரலாற்று நூல்களும் இலக்கியங்களும் எழுதப்பட்டுள்ளன:

  • Martyr Devasahayam: A Documented History (2009) - Dr. Rosario J. Narchison (கோட்டாறு மறைமாவட்டத்தால் வெளியிடப்பட்ட முதன்மை வரலாற்று ஆவணம்).
  • Martyrdom of Devasahayam (1756) - Bishop Clement Joseph C. Leita, S.J. (அவர் மறைந்த 4 ஆண்டுகளில் ரோம் வாட்டிகனுக்கு அனுப்பப்பட்ட கொச்சி ஆயரின் அதிகாரப்பூர்வ அறிக்கை).
  • திருத்தொண்டர் காப்பியம் - சூ. இன்னாசி (தேவசகாயம் பிள்ளையைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ்க் கிறிஸ்தவக் காப்பியம்).
  • The Nectar of the Gods: King Marthanda Varma and Devasahayam (2015) - கோபிகிருஷ்ணன் கோட்டூர் (மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் தேவசகாயத்திற்கும் இடையிலான விவாதங்களை மையமாகக் கொண்ட ஆங்கில நாடகம்).
  • தேவசகாயம் பிள்ளை சரித்திரம் - ஏ. மாதவடியான் (மலையாள நூல்).
  • தேவசகாயம் பிள்ளை - இ. மாதவடியார் (சோபியா புக்ஸ், மலையாள நூல்).

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. Lay Matyr
  2. தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ பைபிள் படி லாசரஸின் தமிழ் பெயர். லாசரஸ் புதிய ஏற்பாட்டில் ஜான் எழுதிய பகுதியில் வரும் கதாபாத்திரம். இயேசுவின் நண்பர். இயேசு லாசரஸின் கல்லறையிலிருந்து அவர் உயிர்த்தெழும் படி அற்புதம் நிகழ்த்தினார்.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jun-2026, 19:07:14 IST