யெஸ்.பாலபாரதி
- பாலபாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலபாரதி (பெயர் பட்டியல்)
யெஸ்.பாலபாரதி (பிறப்பு: ஜனவரி 24, 1974) தமிழில் குழந்தை இலக்கியம் எழுதிவரும் எழுத்தாளர். ஊடகவியலாளர். கட்டுரைகள், கதைகள் எழுதுகிறார். ஆட்டிச நிலைக் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்விற்காக களப்பணியாற்றுபவர்.
பிறப்பு, கல்வி
இயற்பெயர் எஸ்.பாலகிருஷ்ணன். இராமேஸ்வரத்தில் ஜனவரி 24, 1974 அன்று முந்தைய தலைமுறையிலேயே குடியேறிவிட்ட மலையாளிக்குடும்பம் ஒன்றில் ஸ்ரீதரன் - புஷ்பா தேவி இணையருக்கு பிறந்தார். இராமேஸ்வரம் அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வி. இளங்கலை (சமூகவியல்) பட்டப்படிப்பை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
தனிவாழ்க்கை
யெஸ்.பாலபாரதி எழுத்தாளர் ஆர். லக்ஷ்மி பாலகிருஷ்ணனை 2008-ல் மணம்புரிந்துகொண்டார். பா.ல.கனிவமுதன் என்னும் மகன். மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் பல்வேறு பணிகளை செய்து வந்தார். பின் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கேயும் தையல் பணி, வெல்டிங் பணி, ரப்பர் கம்பெனி, கண் மை தயாரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தவர் பின்னர் பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தார். ஊடகவியலாளராகப் பணிபுரிகிறார். தன் மைந்தன் உளவியல் மாற்றுத்திறன் கொண்டவன் என உணர்ந்தபின் அத்தகைய குழந்தைகளை சமூகம் புரிந்துகொண்டு, அவர்களை முறைப்படி நடத்தவேண்டும் என்பதை பிரச்சாரம் செய்யும்பொருட்டு தன் உழைப்பில் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்.
இதழியல் வாழ்க்கை
பாலபாரதி மும்பையில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த பல தமிழ் பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளார். குமுதம் குழுமத்தின் மும்பை செய்தியாளராக இருந்துள்ளார். கட்ச் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வை ஒட்டி நடந்த கலவரம் ஆகிய சமயங்களில் நேரடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்று செய்தி சேகரித்தார். சில காலம் டில்லியிலும் குமுதம் குழுமத்திற்காக பணியாற்றினார். அதன்பின் மும்பையிலேயே சில காலம் விகடன் குழும இதழ்களிலும் பணியாற்றினார். 2005-ம் ஆண்டு மத்தியில் சென்னைக்கு வந்து கிழக்கு பதிப்பகத்தின் வித்லோகா புத்தக விற்பனை நிலையத்தில் பணியில் சேர்ந்தார். பின் சன் குழுமத்தின் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவில் பணியாற்றினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
யெஸ்.பாலபாரதியின் முதல் படைப்பு: 1994-ல் எழுதி பிரசுரம் ஆன கவிதை. 2000-ம் ஆண்டு, முதல் புத்தகமான, ஹைக்கூ கவிதை நூல் வெளியானது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்: பாரதி, கு. அழகிரிசாமி, கி.ரா, ஜெயந்தன், ஜி.நாகராஜன், தி. ஜானகிராமன் கந்தர்வன். குழந்தையிலக்கியத்தில்: வாண்டுமாமா, தம்பி சீனிவாசன், முல்லைத்தங்கராசு, கல்வி கோபாலகிருஷ்ணன். 2008-ம் ஆண்டு திருநங்கைகளில் வாழ்க்கையை பேசுபொருளாகக் கொண்ட அவன் – அது= அவள் என்ற நாவலை எழுதினார். இராமேஸ்வரத்தில் இருந்த போது நண்பர்களுடன் சேர்ந்து பிரகடனம் என்ற சிறுபத்திரிக்கையையும், மும்பையில் வாழ்ந்தபோது கவிஞர் மதியழகன் சுப்பையாவுடன் சேர்ந்து குயில்தோப்பு என்ற சிறுபத்திரிக்கையையும் நடத்தினார்.
விருதுகள்
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் - நூலுக்கு விகடன் விருது, வாசகசாலை விருது,
- புதையல் டைரி- சிறார் நாவலுக்கு தமிழ்நூல் வெளியிட்டார் & விற்பனையாளர் வழங்கிய விருது.
- சிறார் இலக்கிய செயற்பாட்டிற்கு குழந்தைகள் தேசிய புத்தகக்கண்காட்சியில் விருது.
- 2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது . மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற சிறுவர்களுக்கான படைப்புக்கு.
இலக்கிய இடம்
யெஸ்.பாலபாரதி தமிழில் சிறார் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியவர். ஆளுமைக்குறைபாடுள்ள, மாற்றுத்திறனாளி குழந்தைகளை சமூகம் புரிந்துகொள்வதற்காக கருத்தியல் தளத்தில் செயல்படுபவர்.
நூல்பட்டியல்
கவிதை
- இதயத்தில் இன்னும்
நாவல்
- அவன் -அது =அவள்
குறுநாவல்
துலக்கம்
- சந்துருவுக்கு என்ன ஆச்சு?
சிறுகதை
- சாமியாட்டம்
கட்டுரைகள்
- ஆட்டிசம் சில புரிதல்கள்
- அன்பான பெற்றோரே!
- பிள்ளைத்தமிழ்
சிறார் நூல்கள்
- ஆமை காட்டிய அற்புத உலகம்
- சுண்டைக்காய் இளவரன்
- புதையல் டைரி
- மரப்பாச்சி சொன்ன ரகசியம்
- சிங்கம் பல்தேய்க்குமா?
- சேர்ந்து விளையாடலாம்!
- யானை ஏன் முட்டை இடுவதில்லை?
- உட்கார்ந்தே ஊர் சுற்ற...
- தலைகீழ் புஸ்வாணம்
- பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
- மந்திரச் சந்திப்பு
மொழிபெயர்ப்பு
- நான்காவது நண்பன்
- என்னதான் நடந்தது
- எல்லைகள்
- ஆறு
- மொட்டைமாடி உள்ள வீடு
- குட்டிப்பாட்டி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:10 IST