under review

யானை மரணச் சிந்து

From Tamil Wiki
யானை மரணச் சிந்து

யானை மரணச் சிந்து (1943), சிந்து இலக்கிய நூல்களுள் ஒன்று. விருதுநகரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோவிலில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலயத் திருப்பணி செய்த யானையின் மறைவைக் குறித்து இயற்றப்பட்ட நூல். இதனை இயற்றியவர், முத்துலிங்கபுரம், மு. புகழ்கருப்பையா நாடார்.

பிரசுரம், வெளியீடு

யானை மரணச் சிந்து நூலை, குளத்தூர் சு.ரா. சின்னசாமிக் கவிராயரின் பிரதம சீடரான வ. முத்துலிங்கபுரம் மு. புகழ் கருப்பையா நாடார் இயற்றினார். 1943-ல், விருதுநகர் பிரிண்டிங் பிரஸில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.

நூலின் அமைப்பு

யானை மரணச் சிந்து விநாயகர் மீதான காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது. யானையின் விருதுநகர் வருகை, நீண்ட காலம் ஆலயத் திருப்பணிகள் செய்தது, மக்கள் அனைவரின் மீதும் அன்புடனும், பிரியமுடனும் இருந்தது, காலில் ஏற்பட்ட காயத்தால் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் குணமாகாமல் இறுதியில் மரணமுற்ற செய்திகள் சிந்துப் பாடல்களாக, பல்வேறு மெட்டுக்களில் இடம்பெற்றுள்ளன. யானை குறித்து மக்கள் பேசிக் கொள்வதான வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

  • விருதுநகரில் உள்ள வெயிலுகந்த அம்மன் ஆலயத் திருப்பணிக்காக மைசூரிலிருந்து, பொ.யு. 1892-ல் (புரட்டாசி 17 அன்று) யானை வரவழைக்கப்பட்டது.
  • அப்போது யானையின் வயது ஐந்து.
  • யானை அம்பாளுக்கான ஆலயத் திருப்பணிகளை அனுதினமும் செய்து வந்தது.
  • ஒரு நாள் யானை உலாச் செல்கையில் கால் இடறிக் காயம் ஏற்பட்டது.
  • அதற்கு மருந்துகளிட்டும் குணமாகவில்லை. ஆங்கில மருத்துவம், ஊசியும் பலனளிக்கவில்லை.
  • யானைப் பாகர்கள் யானையின் கஷ்டம் அறியாமல் அதனை ஸ்ரீரெங்கநாதர் விழாவுக்காக அழைத்துச் சென்றனர்.
  • அதனால் யானை மேலும் சோர்வுற்றது. நோய் அதிகமானது. நாளடைவில் யானை படுத்த படுக்கையானது.
  • 50 வருடங்களுக்கும் மேலாக யானையைக் கண்டு அன்பு பூண்டிருந்த விருதுநகர் மக்கள் அதனை வந்து பார்த்து அழுதனர். இறைவனிடம் வேண்டினர்.
  • யானை கொல்லம் ஆண்டு ஆவணி 30, 1119-ல் (பொ.யு. 1943) அன்று காலமானது.
  • யானை காலமான செய்தி அறிந்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. மக்கள் அனைவரும் திரளாக வந்து யானையை வணங்கிச் சென்றனர்.
  • பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன், பாண்டு வாத்தியங்களுடனும், மேள் தாளங்களுடனும், போர்வை, மலர் மாலை, முகபடாம் உள்ளிட்ட பல்வேறு கொடைகளுடனும் யானையில் உடல் உலாவாக எடுத்துவரப்பட்டது.
  • யானையின் மரண ஊர்வலம், பெரிய கடை வீதி, வெயிலுகந்த அம்மன் கோயிலைச் சுற்றி வந்து, சாத்தூர் சாலையில், மண் பாலத்தின் தெற்கில், குழியில், நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாடல்கள்

யானைக்கு வந்த நோய்

அநியாயம் பாரீர் ஆளை மடிந்திட்ட
விதி மோசம் கேளீர்
வினையகற்றிடவந்த வெயிலுகந்தாள் வாழும்
விருதுநகர்தன்னில் வேண்டியே வெகுகாலம்
அனைதிருப்பணி பூண்ட ஆனைக்கத்தியகாலம்
ஆனதோ ஆண்டவன் சோதனையோ போலும்
அந்தோ ஓர்மாயம் கால்கொஞ்சமிடறியே
வந்ததே காயம்

யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்

சிந்தைமகிழ்ந்துமே தேவாயைத்தார்கள்

திரண்டு கைப்பக்குவ மருந்தையும் கொடுத்தார்கள்
வந்தபுண் வலுத்தது வைத்யரை அழைத்தார்கள்
வகைவகை மருந்துகள் மறுக்காமல்கொடுத்தார்கள்
மதிமிகுந்தவர் தான் ஆனாலுமே ஊழின்
விதிவெல்ல எவர்தான்
இதுஎன்ன சோதனை யென்றெண்ணிப்பார்த்தார்கள்
இங்கிலீஷ் டாக்டர்களிடம் சென்றுகேட்டார்கள்
அதிநய குணஊசி அதையுமே போட்டார்கள்
ஆரூடம் சோதிடம் ஆயுளும் பார்த்தார்கள்
அப்புறமுணர்ந்தார் தாய்செயலிதுவென்று
அனைவரும் தெளிந்தார்

யானை பட்ட வேதனை

அறுபத்தொரு வருடம் அமர்ந்து வளர்ந்த யானை
அழும்பிள்ளை முதலாக தொடுங்குணமுள்ள யானை
இருபத்தாறுஜில்லாவில் இதைப்போலில்லா யானை
இணையில்லாத பெண்யானை அழகுமிகுந்தயானை
கடகரி இதற்குமே கால்வலி மிகுத்தது
காளிகாளி என்று கதறித்துடித்தது
கடல்முத்துப் போலவே கண்ணீரை வடித்தது
காலுடன் துதிக்கையை மடக்கியேபடுத்தது
கவலைக்குள்ளாச்சு அடிக்கடி சோர்வாக
காட்டுது மூச்சு.

யானைப்பாகர்களின் செயல்கள்

இந்தவிததமாக ஆனையது எண்ணில்லாக் கஷ்டமடைந்துவர
அந்தவகையை மதிக்காமல் ஆனையின் பாகர்களேது செய்தார்
ஸ்ரீரெங்கநாதர்க்கு தோத்தரிக்கும் திருவிழா வந்தது என்று சொல்லி
அருமையுடனே வழக்கம்போலே அழைத்துச்சென்றார்கள் ஆனையிதை
கால்வலிமெத்தச் சகிக்காமல் கடமையைச் சற்றும் மறக்காமல்
ஊழ்வினையாமென்று நொண்டிநொண்டி
ஊர்சுற்றி வந்து படுத்ததையா

யானையின் மரணம்

வந்தபிணியது ஒங்கியது மத்தகம்மெத்தத் தியங்கியது
விந்தையென்றெண்ணும்படியாக மேல்மூச்சுவந்து இழுத்ததையா
ஆயிரத்துநூற்றுப்பத்தொன்பது ஆண்டு சுபானுவருஷத்திலே
நேயமாய் ஆவணிமாதத்திலே நீண்டதோர் முப்பதாந்தே தியிலே
இரவுமணி பதினொன்றதிலே எல்லாச்சனங்களும் பார்த்திருக்க
இரவுநிறங்கொண்ட யானையது ஈசன் திருவடியெய்தியதே!

மதிப்பீடு

அக்கால மக்களைப் பாதித்த கொலை, கொள்ளை, வெள்ளம், புதிய நிகழ்வுகள், ஆன்மிகப் பயணங்கள் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் சிந்து இலக்கியங்களின் பாடுபொருளாக அமைந்தன. அந்த வகையில் யானைக்கு ஏற்பட்ட மரணத்தை விரிவாக ஆவணப்படுத்தி இயற்றப்பட்டுள்ள சிந்து நூல் யானை மரணச் சிந்து. சிந்து இலக்கிய நூல்களுள் இது ஓர் அரிய ஆவணப் பதிவு நூலாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page