ம.ரா.போ.குருசாமி
- குருசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குருசாமி (பெயர் பட்டியல்)
ம.ரா.போ.குருசாமி ( 1922-2012 )தமிழறிஞர். சங்க இலக்கியங்களுக்கு ரசனையுரைகளும் ஆய்வுரைகளும் எழுதியவர். இலக்கியச் சொற்பொழிவாளர். கல்வியாளர். இதழாளர்.
பிறப்பு, கல்வி
மம்சாபுரம் ராக்கப்பிள்ளை போத்திலிங்கம் குருசாமி என்னும் ம.ரா.போ.குருசாமி இராம. இராக்கப்பருக்கும் அன்னம்மைக்கும் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஜூன் 15, 1922-ல் பிறந்தார். பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் தஞ்சாவூரில் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் படிப்பு முடித்தபின் தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இலக்கியம் (பி.ஓ.எல்) பயின்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை இலக்கியம் (எம்.லிட்.) பட்டமும், முதுகலை (எம்.ஏ) பட்டமும் பெற்றபின் ’தமிழ் நூல்களில் குறிப்புப்பொருள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ம.ரா.போ.குருசாமி அ.மு.பரமசிவானந்தம், மு. வரதராசன், மொ.அ.துரையரங்கனார், அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோரின் மாணவர்.
ஆசிரியர் பணி
ம.ரா.போ.குருசாமி பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரி , கோவை, அரசினர் கலைக்கல்லூரி , பாலக்காடு, அரசினர் விக்டோரியா கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் தமிழ் விரிவுரையாளராகவும் , கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் முதுநிலைப்பேராசிரியராகவும் பணியாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னையில் பேராசிரியராகவும், சாந்தலிங்க அடிகளார் கல்லூரி, கோவையில் துணை முதல்வராகவும் பணியாற்றினார்.
இதழியல்
- சக்தி வை. கோவிந்தன் நடத்திய சக்தி காரியாலயத்தில் நூற்பதிப்பாசிரியர். (1945). பதவி வகித்தார்.
- ம. பொ.சி. நடத்திய செங்கோல் இதழில் துணையாசிரியர் பணியாற்றினார்.
- கலைக்கதிர் இதழை முதல் 12 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக அமர்ந்து நடத்தினார்.
- சர்வோதயம் இதழை 10 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக நடத்தினார்
அமைப்புப் பணிகள்
ம.ரா.போ.குருசாமி பல்வேறு கல்வி ,இலக்கிய அமைப்புகளின் உறுப்பினராகவும், தலைவராகவும் பணியாற்றினார்
- கோவை கம்பன் கழகத்தின் உறுப்பினராகவும் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
- கோவை நன்னெறிக் கழகத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்.
- கோவை வடக்கு சர்வோதய சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.
- சென்னை பல்கலையின் ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்தார்.
- திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் கல்விக்குழும உறுப்பினராக இருந்தார்.
- திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் பாட நூற் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தார்.
- சென்னை பல்கலைக்கழக பாடநூல் குழு உறுப்பினர் பணியாற்றினார்.
- காந்திய முதியோர் இலக்கியப் பண்ணை மதுரை அமைப்பின் இயக்குநராக இருந்தார்.
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இலக்கியத் துறை உறுப்பினர் பணியில் இருந்தார்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அகாதமி கௌன்சில் உறுப்பினர் பணியாற்றினார்.
இலக்கியப் பணிகள்
ம.ரா.போ.குருசாமி முதன்மையாக கல்வியாளர். திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் , ம.பொ. சிவஞானம், தெ,பொ. மீனாட்சிசுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தவர். மு. வரதராசன், மொ.அ.துரையரங்கனார், அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோரின் மாணவர் .ம.ரா.போ.குருசாமி இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றியும் ஆய்வுக்கட்டுரைகள் ஆற்றியும் நூல்கள் பதிப்பித்தும் இலக்கியப் பணியாற்றினார். மரபிலக்கிய ரசனையையும் ஆய்வையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசென்றது அவருடைய பணியாக இருந்தது.
மறைவு
அக்டோபர் 6, 2012-ல் ம.ரா.போ.குருசாமி கோவையில் மறைந்தார்.
இலக்கிய இடம்
ம.ரா.போ.குருசாமி மரபிலக்கிய ஆய்வு, மரபிலக்கிய நூல்களை பதிப்பித்தல், மரபிலக்கியம் சார்ந்து சொற்பொழிவுகள் ஆற்றுதல் ஆகிய களங்களில் பணியாற்றியவர். கோவை கம்பன் கழகத்தின் கம்பராமாயணப் பதிப்பில் பங்களிப்பாற்றினார்.
விருதுகள்
- தமிழக அரசின் திரு.வி.க விருது 2003
- நூலறி புலவர் (குன்றக்குடி ஆதீனம்)
- கம்பன் கலைமணி (கம்பன் கழகம் கோவை)
- தமிழண்ணல் (அவினாசிலிங்கம் நினைவு அறக்கட்டளை)
- தமிழ்ச்செம்மல் (மதுரை காமராசர் பல்கலை)
- சேக்கிழார் விருது (சேக்கிழார் மையம், சென்னை)
- பேரா இராதாகிருஷ்ணன் விருது (கம்பன் கழகம் சென்னை)
- குலபதி முன்ஷி விருது (பாரதிய வித்யா பவன் கோவை)
- பாரதி விருது (ஸ்ரீராம் குழுமம்)
- பாவலர் வரதராசன் விருது.
- கலைஞர் விருது.
நூல்கள்
இலக்கிய ஆய்வுகள்
- வாழ்வும் வழியும்
- வித்தகர் வாழ்க்கை
- எதிரொலி
- உள்ளம் நிறைந்த இறைவன்
- சிலப்பதிகாரச் செய்தி
- சிலம்புவழிச் சிந்தனை
- முதற்காப்பிய சிந்தனை
- இராமாயணச் சிந்தனை
- கம்பர் முப்பால்
- கம்பர் கலைப்பெட்டகம்
- பாரதியார் ஒரு பாலம்
- மு.வ முப்பால்
- அகலமும் ஆழமும்
- சங்ககாலம்
- சங்ககாலத்துக்கு முன்
- தமிழ் நூல்களில் குறிப்புப்பொருள்
- திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி
- அகப்பொருள் தெளிவு (தி. லீலாவதியுடன்)
- பழந்தமிழகம்
- காணிக்கைக் கட்டுரைகள்
- குலோத்துங்கன் கவிதைகள் ஒரு திறனாய்வுப் பார்வை,
அரசியல்
- அரசியலில் புது நெறி (காந்திய அறிமுகம்)
ஆன்மிகம்
- ஒரு தெய்வத் திருப்பணி
வாழ்க்கை வரலாறு
- திரு.வி.க வாழ்க்கை வரலாறு (சாகித்ய அக்காதமிக்காக)
- வாழையடி வாழை (ஜி.கே.சுந்தரம் வாழ்க்கை வரலாறு)
- குருமுகம்
- மா. இராசமாணிக்கனார், இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி, சென்னை.
- மூவா நினைவுகள், மு.வரதராசனார் நினைவுகள்.
சிறுகதைகள்
- இடமதிப்பு
மொழியாக்கம்
- பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை - மு.வரதராசன்
- அசாமிய இலக்கிய வரலாறு
- தூயர் பிரானிஸ்டி காந்தியடிகள் ஓர் ஒப்பாய்வு
- மண்ணிலும் விண்ணிலும் அறிவியல் நூல்
- ஜவகர்லால் நேருவின் கருத்தும் எழுத்தும் (தமிழக அரசு வெளியீடு)
பதிப்பித்த நூல்கள்
- மனோன்மணியம்
- பாரதியார் பாடல்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
- கபிலம்
உசாத்துணை
- அகலமும் ஆழமும் ம.ரா.போ.குருசாமி. இணையநூலகம்
- ம.ரா.போ.குருசாமி. மரபின் மைந்தன் முத்தையா அஞ்சலி
- ம.ரா.போ.குருசாமி, ஜெயமோகன் அஞ்சலி
[[]]
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:33 IST