under review

ம.மு. உவைஸ்

From Tamil Wiki
ம.மு. உவைஸ் (நன்றி: ashroffshihabdeen)

ம.மு. உவைஸ் (ஜனவரி 15, 1922 - மார்ச் 25, 1996) ஈழத்து முஸ்லிம் ஆளுமை, தமிழறிஞர், ஆய்வாளர், பதிப்பாசிரியர். தமிழ்-அரபுச் சொல் அகராதியை வெளியிட்டார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இவரின் பங்கு முக்கியமானது.

பிறப்பு, கல்வி

ம.மு. உவைஸ் இலங்கை பாணந்துறை கொறக்கானை எனும் சிற்றூரில் மகுமூது லெப்பை, சைனம்பு நாச்சியார் இணையருக்கு ஜனவரி 15, 1922-ல் பிறந்தார். உவைஸின் தந்தை முகம்மது லெப்பை ஆரம்பித்த தமிழ்ப் பாடசாலையில் தமிழ்க்கல்வி பயின்றார். அதன்பின் ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்கமுல்லையிலிருந்த தக்சலா வித்தியாலயத்தில் பயின்றார். அங்கு சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். பாணந்துறை அர்ச். யோவான் கல்லூரியில் சேர்ந்து உயர்தரப் படிப்பை முடித்தார். 1946-1948 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். சுவாமி விபுலாநந்தரின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழைச் சிறப்புப் பாடமாகவும் சிங்களத்தை உபபாடமாகவும் கற்றார். விபுலானந்தரின் மறைவைத் தொடர்ந்து க. கணபதிப்பிள்ளையின் உதவியுடன் 1951-ல் 'தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் முதுமானிப் பட்டம் பெற்றார். 1976-ல் 'தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள்' என்னும் தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ம.மு. உவைஸ் பேருவலையைச் சேர்ந்த சித்தி பாத்துமாவை மணந்து கொண்டார். பிள்ளைகள் நான்கு மகன்கள், ஒரு மகள்.

ஆசிரியப்பணி

ம.மு. உவைஸ் 1979-ல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். வித்தியோதய பல்கலைக்கழகத்தில (இன்றைய ஜயவர்தனபுர பல்கலைகழகம்) நவீன கீழைத்தேச மொழிகள் துறையின் தற்காலிகத் தலைவராகப் பணிபுரிந்தார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் பணியாற்றினார். பரீட்சை திணைக்கள மொழிபெயர்பாளர், இலங்கை வானொலி இஸ்லாமிய நிகழ்ச்சி தயாரிப்பாளர், இலங்கை அரச கரும மொழி திணைக்கள மொழிபெயர்ப்பாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

  • கொழும்பில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தினார்.
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக உமறுப்புலவர் இருக்கை உருவாக்கப்பட்டது. அவ்விருக்கைக்கு இணைப் பேராசிரியராக பேராசிரியர் உவைஸ் நியமிக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

ம.மு. உவைஸ் இலக்கியம், சமயம், வரலாறு, பிரயாணம் தொடர்பான ஐம்பதுக்கும் மேற்படட் நூல்களை எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆறு ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு’ தொகுதிகளை வெளியிட்டார். தமிழ்-அரபுச் சொல் அகராதியை தொகுத்து வெளியிட்டார். ‘இஸ்லாம் வளர்த்த தமிழ்’ என்ற நூலை உலகத்தமிழாய்வு நிறுவனம் 1984-ல் வெளியிட்டது. தற்காலக் கவிதை நூல்கள் என ஆறு தொகுதிகளாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை முனைவர் பீ.மு. அஜ்மல்கானுடன் இணைந்து எழுதினார்.

1968-ல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 'தமிழ் இலக்கியத்தில் உள்ள முஸ்லிம் இலக்கிய வடிவங்கள்' எனும் ஆங்கிலக் கட்டுரையை வாசித்தார். இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்’ என்ற கட்டுரை நூலை 1974-ல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிட்டார். இம்மாநாட்டில் 'முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படும் செந்தமிழ்ச் சொற்கள்' என்ற கட்டுரையையும் சமர்ப்பித்தார். நான்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டார். இதில் அறிஞர்களின் ஆக்கங்கள் அடங்கிய ’பிறைக் கொழுந்து’ என்ற நூலையும் வெளியிட்டார்.

மொழியாக்கங்கள்

ம.மு. உவைஸ் தமிழ், ஆங்கிலம், சிங்களம், அரபு மொழிகள் அறிந்தவர். தமிழ் மொழியிலுள்ள ‘தித்திக்கும் திருமறை’; ’நபிகள் நாயகம்’ நூல்களை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தார். சிங்கள நாவலாசிரியர் மார்டின் விக்ரமசிங்க எழுதிய 'கம்பெரலிய' நாவலை ‘கிராமப் பிறழ்வு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். டி.என். தேவராஜனின் 'வணிக எண்கணிதம்' எனும் தமிழ் நூலை 'வணிக அங்க கணிதய' என சிங்களத்தில் மொழிபெயர்த்தார்.

பதிப்பியல்

ம.மு. உவைஸ் குலாம் காதிறு நாவலரின் 'புலவராற்றுப்படை' நூலை மீள்பதிப்பு செய்தார். 'புதுகுஷ்ஷாம்' வசன காவியத்தை மூன்று பாகங்களாக பதிப்பித்து வெளியிட்டார். 'ஆசாரக்கோவை', 'திருமக்காக்கோவை', 'புகழ்ப்பாவணி' நூல்கள் மீள்பதிப்பு செய்யப்பட்டன.

விருதுகள்

  • திருச்சியில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
  • அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த அல்ஹாஜ். ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அல்லாமா பட்டம் கொடுப்பதற்கான அரச அங்கீகாரம் பெற்று அவருக்கு வழங்கப்பட்டது.

மறைவு

ம.மு. உவைஸ் மார்ச் 25, 1996-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • இஸ்லாமும் இன்பத்தமிழும்
  • இஸ்லாமியத் தென்றல்
  • நம்பிக்கை
  • ஞானசெல்வர் குணங்குடியார்
  • நீதியும் நியாயமும்
  • நெஞ்சில் நிறைந்த சுற்றுலா (பயணக் கட்டுரை)
  • இஸ்லாம் வளர்த்த தமிழ்
  • தமிழ் இலக்கியம்
  • அரபுச் சொல் அகராதி
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு
  • இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் வரலாறு
  • இஸ்லாமியத் தமிழ் சிற்றிலக்கியங்களின் வரலாறு
  • சூபி மெய்ஞ்ஞானிகளின் வரலாறு
  • அரபுத் தமிழ் இலக்கிய பற்றிய வரலாறு
  • இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய வசன நூல்கள்
  • தற்கால கவிதை நூல்கள் (ஆறு தொகுதிகள்)
மொழிபெயர்ப்புகள்
  • வணிக அங்க கணிதய
  • நபிநாயக சரிதய
  • அல்குர்ஆன் அமாபிந்து
  • கிராமப் பிறழ்வு

உசாத்துணை


✅Finalised Page