under review

மு. வெங்கடேசபாரதி

From Tamil Wiki
மு. வெங்கடேசபாரதி (படம் நன்றி: முகம் இதழ், செப்டம்பர் 2022)

மு. வெங்கடேசபாரதி (பிறப்பு: மே 26, 1936) தமிழ்ப்புலவர், உரையாசிரியர். எழுத்தாளர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், திரைப்பாடலாசிரியர், வில்லுப்பாட்டுக் கலைஞர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். ’நாடகச் செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மு. வெங்கடேசபாரதி, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகில் உள்ள மருதங்குடியில், மே 26, 1936 அன்று, பெ. முத்தையா – தங்காயாள் இணையருக்குப் பிறந்தார். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். சீர்காழி திருமுல்லைவாயில் அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். அண்ணாமலை பல்கலையில் முதுகலை தமிழ் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மு. வெங்கடேசபாரதி மணமானவர். மனைவி அமுதம். இவர்களுக்கு அங்கயற்கண்ணி, தேன்மொழி, இசைவாணி, செந்தமிழ்ப்பாவை, வளர்மதி என ஐந்து மகள்கள்.

கல்விப் பணிகள்

மு. வெங்கடேசபாரதி, ஒரத்தநாட்டில் உள்ள உறந்தைராயன் குடிகாடு எனும் ஊரில் உள்ள இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து சீர்காழியில் உள்ள சிவானந்தா நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தான் பயின்ற சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகm 25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மு. வெங்கடேசபாரதி, தன் தந்தை மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழுதினார். 1952-ல், எம்.எல்.சி. பள்ளி நிர்வாகத்தைப் புகழ்ந்து மாணவனான வெங்கடேச பாரதி எழுதிய வெண்பா, சட்டமிடப்பட்டு தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதினார். ’தினமணி – தமிழ் மணி’, ‘முகம்’ போன்ற இதழ்களில் சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். 18-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

நாடகம்

மு. வெங்கடேசபாரதி, நாடகங்கள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் நாரதர் வேடத்திலும், ‘பவளக்கொடி’ நாடகத்தில் ‘கிருஷ்ணன்’ வேடத்திலும் நடித்தார். 25-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இசையமைத்து, அரங்கேற்றினார்.

இசை

மு. வெங்கடேசபாரதி, இசையில் தேர்ந்தவர். மதுரை சோமசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிந்தம்பரம் உள்ளிட்ட தமிழிசைவாணர்கள் பலருக்குப் பாடல்களை எழுதினார்.

இராயப்பன் பட்டி பனிமயமாதா ஆலயத்துக்காகப் பாடல்கள் எழுதி, இசையமைத்து ‘இதயப்புனல்’, ‘பனிவிழும் மலர்வனம்’ என்னும் இசை நாடகங்களைத் தயாரித்தளித்தார். திருக்குறளை இசை வடிவில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்

வில்லுப்பாட்டு

மு. வெங்கடேசபாரதி, ‘காமராசர் கதை’ என்ற தலைப்பில் வில்லுப்பாட்டைத் தயாரித்துப் பல இடங்களிலும் அரங்கேற்றிப் பாராட்டைப் பெற்றார்.

திரைத்துறை

மு. வெங்கடேசபாரதி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சில பாடல்களை எழுதினார். ‘என்னவெல்லாம் சொன்னாய் தோழி’ என்ற திரைப்படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதினார்.

விருதுகள்

  • இசைக்கவிக்கோ
  • கவித்தென்றல்
  • காழிக்கம்பன்
  • முத்தமிழ் வித்தகர்
  • நாடகச் செம்மல்
  • கவிதை உறவு
  • தமிழ்க்கலை மாமணி
  • முத்தமிழ்வாணர்
  • கண்ணியச் செம்மல்
  • இசைத்தமிழ் வேந்தர்
  • இலக்கியச்செம்மல்
  • தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது

வாழ்க்கை வரலாறு

மு. வெங்கடேசபாரதியின் வாழ்க்கை வரலாற்றை சௌ. சசிகுமார் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடனும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடனும் இணைந்து 2018-ல் வெளியிட்டது.

மதிப்பீடு

கவிதை, இசை, நாடகம், வில்லுப்பாட்டு, சிறார் இலக்கியம், மருத்துவம் என்ற வகையில் இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கும் பங்களித்த தமிழறிஞர்களுள் ஒருவராக மு. வெங்கடேசபாரதி மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • கலைஞர் ஒரு காவியம் (பரிசு பெற்ற கவிதைகள்)
  • தமிழ்நிலா (காப்பியம்)
  • ஞமிலி (பரிசுபெற்ற காப்பியம்)
  • வெங்கடேசபாரதி கவிதைகள் (பரிசு பெற்ற கவிதைகள்)
  • நலக்குறள் (மருத்துவம்)
  • நலவெண்பா (மருத்துவம்)
  • அவ்வை (கவிதை நாடகம்)
  • காழித் தமிழிசைவாணர்கள் (வாழ்க்கை வரலாறு)
  • மலரும் மணமும் குழந்தைப் பாடல்கள் (பரிசு பெற்றது)
  • பிஞ்சுநிலா (சிறுவர் இலக்கியம்)
  • அறிவுமலர்ச் சோலை (சிறுவர் இலக்கியம்)

உசாத்துணை

  • தமிழ்ச்செம்மல் மு. வெங்கடேசபாரதி, கட்டுரையாளர்: முனைவர் இளமாறன், முகம் செப்டம்பர் 2022 இதழ்.
  • மு. வெங்கடேசபாரதி, வாழ்க்கை வரலாறு, எழுத்தாக்கம்: சௌ. சசிகுமார், கலைஞன் பதிப்பக வெளியீடு. முதல் பதிப்பு: 2018.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:14:48 IST