under review

முப்பத்திரண்டு உத்திகள்

From Tamil Wiki
தொல்காப்பியம் கூறும் 32 உத்திகள்
நன்னூல் கூறும் 32 உத்திகள்
தொல்காப்பியம் உரை வளம்
நன்னூல்

ஒரு நூலில் முப்பத்திரண்டு உத்திகள் இருத்தல் வேண்டும் எனத் தொல்காப்பியம் உத்திகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உத்திகளை நூலுக்கு இன்றியமையாதவையாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் கூறும் உத்திகள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் காணப்படுகின்றன. அது போல நன்னூலும் முப்பத்திரண்டு உத்திகளைப் பற்றிக் கூறியுள்ளது.

தொல்காப்பியம் கூறும் முப்பத்திரண்டு உத்திகள்

"ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்
நுதலியது அறிதல் அதிகார முறையே
தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல்
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்
மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்
வாராததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்
முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே
ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல்
தன் கோள் கூறல் முறை பிறழாமை
பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்
இறந்தது காத்தல் எதிரது போற்றல்
மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்
தான் குறியிடுதல் ஒருதலை அன்மை
முடிந்தது காட்டல் ஆணை கூறல்
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்
மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்
பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல்
பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல்
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்
தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிற அவண் வரினும்
சொல்லிய வகையான் சுருங்க நாடி
மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே.”

விளக்கம்

  1. சொன்னதைத் தெளிவாக அறிதல்
  2. அதிகாரங்களை முறையாக அமைத்தல்
  3. இறுதியில் தொகுத்துக் கூறல்
  4. கூறுபடுத்தி உண்மையை நிலைநாட்டல்
  5. சொன்ன பொருளோடு சொல்லாத பொருளை இடர்ப்பாடின்றி முடித்தல்
  6. வராதனவற்றைக் கூறுவதால் ஏனைய வரும் என முடித்தல்
  7. வந்ததைக் கொண்டு வராதனவற்றை உணர்த்தல்
  8. முன்பு கூறியதைப் பிnபு சிறிதுபிறழக் கூறுதல்
  9. பொருந்தும் வண்ணம் கூறல்
  10. ஒரு பக்கத்தே சொல்லுதல்
  11. தன் கொள்கையைக் கூறுதல்
  12. நூலில் வைத்துள்ள முறை பிறழாதிருத்தல்
  13. பிறர் உடன்பட்டதைத் தானும் ஏற்றுக் கொள்ளுதல்
  14. முற்கூறியவற்றைக் காத்தல்
  15. பின்னர் வரும் நெறியைப் போற்றுதல்
  16. தெளிவுபடுத்திக் கூறுவோம் எனல்
  17. கூறியுள்ளோம் எனல்
  18. தான் புதிதாகக் குறிப்பிடுதல்
  19. ஒரு சார்பு இன்மை
  20. முன்னோர் முடிவைக் காட்டி நிறுவுதல்
  21. அமைத்துக் கொள்க என்று கூறல்
  22. பல பொருள்கள் இருந்தாலும் சரியான பொருளைக் கொள்ளுதல்
  23. தொகுத்த மொழியான் வகுத்துக் கூறல்
  24. எதிர்ப்போர் கருத்தை மறுத்துத் தன்கருத்தைக் கூறல்
  25. பிறர் கொள்கைகளையும் சான்றாகக் கூறல்
  26. பெரியோர் கருத்தை ஏற்றுக் கொண்டு தானும் அதையே வழிமொழிதல்
  27. கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் இடையிடையே கூறுதல்
  28. முரணான பொருள்களையும் உணர்த்தல்
  29. சொல்லின் குறையை நிறைவு செய்து கூறுதல்
  30. தேவைக்குத் தக்கத் தன் கருத்தைந் தந்து இணைத்து உரைத்தல்
  31. நினைவு படுத்திக் கூறுதல்
  32. கருத்தை உய்த்து உணரும்படி கூறல்

நன்னூல் குறிப்பிடும் முப்பத்திரண்டு உத்திகள்

நுதலிப் புகுதல் ஓத்து முறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவு இடம் கூறல்
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொல் பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒரு தலை துணிதல் எடுத்துக்காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்
தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப் பொருள் முடித்தல்
ஒன்று இனம் முடித்தல் தன் இனம் முடித்தல்
உய்த்துணர வைப்பு என உத்தி எண் நான்கே

விளக்கம்

  1. சொல்லித் தொடங்குதல் வேண்டும்.
  2. காரண காரிய முறைப்படி இயல்களை வைக்க வேண்டும்.
  3. நூலில் கூறக்கருதும் பொருள்களை தொகுத்துக் கூற வேண்டும்.
  4. பின்னர் அவற்றைவகுத்துக் காட்ட வேண்டும்.
  5. கூறவந்த கருத்தை மேலோர் கூறியுள்ளவாறு முடித்துக்காட்ட வேண்டும்.
  6. தான் கூறும் கருத்துக்கு இலக்கியத்தில் சான்றாக உள்ள இடங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.
  7. முன்னோர் கூறிய கருத்துகளை தேவையான, பொருத்தமான இடங்களில் எடுத்தாள வேண்டும்.
  8. பிறருடைய கோட்பாடுகளையும் எடுத்துக் கூற வேண்டும்.
  9. சொற்களின் பொருள் விளக்க உருபுகளை விரித்துக் கூறுதல் வேண்டும்.
  10. ஒன்றோடொன்று தொடர்புடைய சொற்களை இணைத்துக் கூற வேண்டும்.
  11. இருபொருள்படக் கூறுதல் வேண்டும்.
  12. காரணம் விளங்காமல் கூறப்பட்டதை காரணம் கூறி முடிக்க வேண்டும்.
  13. ஒரு பொருளுக்குரிய இலக்கணத்தை ஒப்புமைப்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.
  14. உறுதிப்படுத்திய இலக்கணத்தை பிறவிடங்களிலும் பயன்படுத்துமாறு தொடர்புப்படுத்த வேண்டும்.
  15. வழக்கொழிந்தவற்றை, தேவையில்லாத சொற்களை விலக்க வேண்டும்.
  16. தற்காலத்தில் வழக்குக்கு வந்தப் புதுமைகளை ஏற்புடையது எனில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  17. பின்னால் இவை தேவைப்படும் என்றுணர்ந்து அவற்றை முன்கூட்டியே சொல்ல வேண்டும்.
  18. ஒரு பொருளுக்கு கருவியாய் அமையவேண்டியதை பின்னால் நிறுத்திக் காட்டுதல் வேண்டும்.
  19. வெவ்வெறு வேறுபட்ட கருத்துகளையும் எடுத்துக் காட்டல் வேண்டும்.
  20. அவ்வாறு வேறுபடும் கருத்துகளை தொகுத்துக் கூற வேண்டும்.
  21. இறுதியில் சொல்லப் போவதை முற்பகுதியில் சொல்ல நேர்ந்தால் அது பின்னர் விளக்கப்படும் என்று கூறப்பட வேண்டும்.
  22. முற்பகுதியில் கூறப்பட்டதை பிற்பகுதியில் மீண்டும் சொல்ல நேர்ந்தால் முன்னரே கூறப்பட்டது என்று கூற வேண்டும்.
  23. மாறுபட்ட இரண்டு கருத்துகள் இருந்தால் அவற்றில் ஏதாவதொன்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  24. மேற்கோள்களை எடுத்துக்காட்ட வேண்டும்.
  25. தான் சொல்ல வந்ததை மேற்கோளுடன் பொருத்தி விளக்கிக் காட்ட வேண்டும்.
  26. ஐயத்திற்கு இடமின்றி சொல்லவந்த கருத்தை உரைக்க வேண்டும்.
  27. சொல்லாமல் விட்டவைகளுக்கு அதற்கான காரணங்களை விளக்கிக் கூற வேண்டும்.
  28. பிறநூல்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  29. தன்னுடைய புதிய கருத்துகளை நூலில் பல இடங்களில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
  30. சொற்பொருள் விளக்கத்தையும் அது வந்திருக்கும் இடத்திலேயே கொடுக்க வேண்டும்.
  31. ஒத்த கருத்துக்கள் உடையவற்றை ஒரே இடத்தில் தொகுத்து வகைப்படுத்திக் காட்ட வேண்டும்.
  32. மேற்கொண்டு ஆராய்வதற்கான எல்லைகளைப் பற்றி விளக்கிக் கூற வேண்டும்.

நன்னூல் மற்றும் தொல்காப்பியம் குறிப்பிடும் இவ்வகை உத்திகள், இன்றைய நூல்களுக்கும் ஆய்வு முறைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளன.

உசாத்துணை


✅Finalised Page