under review

முத்து நெடுமாறன்

From Tamil Wiki
முத்து நெடுமாறன்

முத்து நெடுமாறன் (ஜூன் 18, 1961) மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் இயற்பெயர் முத்தெழிலன் முரசு நெடுமாறன்.  முரசு குழுமத்தின் தலைவரான இவர், 1985-ல் முரசு நிறுவனத்தின் வழி 'முரசு அஞ்சல்' என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே தமிழ் வழி மின்னஞ்சல் தொடர்பாடலை இலகுவாக்கினார். திறன் பேசிகளில் தமிழ்  புழங்க வழிவகுத்தவர்.

பிறப்பு, கல்வி

முத்து நெடுமாறன் ஜூன் 18, 1961-ல் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் முரசு நெடுமாறன். தாயாரின் பெயர் சானகி. ஒரு தம்பி இரு தங்கைகள் உள்ள குடும்பத்தில் மூத்த மகனாக கிள்ளான் நகரில் பிறந்தார். இவர் 1968 - 1973 வரை தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் எனும் ஆங்கிலப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். 1974 - 1979 வரை டத்தோ ஹம்சா ஆங்கில இடைநிலைப்பள்ளியில் பயின்றார். 1980 - 1985 வரை மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலை முடித்தவர் 2017 - 2018 ஆகிய ஆண்டுகளில் லண்டனில் அமைந்துள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தில் எழுத்துருவியல் துறையில் முதுகலை படிப்பை முடித்தார்.

பங்களிப்பு

முரசு அஞ்சல்
முரசு அஞ்சல்

1985-ல், தனிப்பட்டப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த கணினிகளில் (Personal Computer) ஆங்கிலமே மூல மொழியாக இருந்து வந்தது. அதில் தமிழ் எழுத்துகளை புழங்குவதற்கான வழிகளை ஆராய்ந்து 'முரசு’ எனும் செயலித் தொகுப்புனை உருவாக்கினார் முத்து நெடுமாறன். இந்தத் தொகுப்பே 'முரசு’ செயலியில் முதல் பதிப்பாக அமைந்தது. இதில் உள்ள விசைப்பலகை அமைப்பு அந்தக் காலக் கணினிக்கென்றே வடிவமைக்கப்பட்டது. இதனைக் கொண்டு தமிழில் தட்டச்சிட எளிதில் பழகிக் கொள்ளலாம்.

இத்தொகுப்பில் அடங்கியிருந்த மூன்று முக்கியக்கூறுகள்.

அ. கணினியின் திரையில் தமிழ் எழுத்துகள் தோன்றுவதற்காகவே மாற்றுவடிவமைக்கப்பட்ட சில்லுக்கள் அடங்கிய ஒரு கணினி அட்டை (modified video display board),

ஆ. கணினியில் இயல்பான ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழில் உள்ளிடுவதற்கான இயந்திர மொழியில் (Machine language) எழுதப்பட்ட ஒரு செயலி.

இ. உள்ளிடப்பட்ட தமிழ் வரிகளை அச்சிடுவதற்காக டாட் மெட்டிரிக் அச்சு இயந்திரங்களை இயக்கும் மற்றுமோர் இயந்திர மொழிச் செயலி.

கணினியில் தமிழ் புகுந்த முன் வரலாறு

முனைவர் பாலா சுவாமிநாதன்

1983 - 1894-ல் தனி மேசைக்கணினிகள் உருவான பிறகு தமிழை அதில் புகுத்தும் முயற்சிகள் தொடங்கின. கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் 1984-ல் உருவாக்கப்பட்ட ஆதமி (Adami) எனும் மென்பொருளால் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடிந்தது. இதை தொடர்ந்து 'ஆதவின்', 'பாரதி' எனும் அடுத்தடுத்த மென்பொருள்கள் உருவாகின.

கணினியில் இருக்கும் விசைப் பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப் பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. எனவே தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்கள் கணினியில் விரைவாக இயங்க முடியாமல் இருந்தது. அதே சமயம் கணினி வல்லுனர்கள், பத்திரிகைகள், இதழ்கள் அல்லது சஞ்சிகைகள் போன்றவற்றை நடத்தும் பலரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். இப்படி உருவாக்கியவர்கள் எந்த ஒரு தகுதரத்தையும் (standards) கடைப்பிடிக்கவிலை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் ஒத்தியங்குவதில் சிக்கலை எதிர்நோக்கியது.

தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற் கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தன்னிடமிருக்கும் தமிழ் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும்போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிக்கவும் சிக்கலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 

முனைவர் பாலா சுவாமிநாதன் 90-களின் முற்பகுதியில் உருவாக்கிய மதுரை மென்பொருள் இச்சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சித்தது.  தமிழ் சொல்லை ஆங்கில எழுத்துப்படி (எழுத்துப் பெயர்ப்பில்) எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு மதுரை கட்டளையை அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். எழுத்துக்கள் பெரிதும் சிறிதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம் பெறவில்லை.

'தமிழ் மூலம் மின்னஞ்சல்' பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986-ஆம் ஆண்டில் முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் 'முரசு அஞ்சல்' என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இலகுவாக்கப்பட்டது.

லேசர் அச்சு முறையில் தமிழ்

முத்து நெடுமாறன்

முரசு அஞ்சல் செயலி உருவாக்கத்தைப் பற்றி 1986-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முத்து நெடுமாறன் ஒரு கட்டுரையைப் படைத்தார். மாநாட்டிற்குப் பிறகு லேசர் (laser) அச்சு இயந்திரங்களில் தமிழ் எழுத்துகளை அச்சிடுவதற்கான ஆய்வினை முடித்து அவற்றிற்கான எழுத்துருக்களை உருவாக்கத் தொடங்கினார். பல வகையான எழுத்துக்களைக் கொண்டு லேசர் அச்சு இயந்திரங்களில் தமிழ் நாளிதழ்களும் வார இதழ்களும் வெளிவரத் தொடங்கின. 'மயில்’ வார இதழ், 'தமிழ் ஓசை’ நாளிதழ் மற்றும் இதர மாத வார இதழ்கள் உலோக அச்சுகளைக் கொண்டு அச்சிடுவதில் இருந்து முத்து நெடுமாறன் உருவாக்கிய லேசர் அச்சு முறைக்கு மாறின. இந்த உருவாக்கம், மலேசியா மட்டும் அல்லாமல் சிங்கப்பூரையும் சென்று அடைந்தது. சிங்கப்பூரில் வெளிவந்து கொண்டிருந்த 'தமிழ் முரசு’ நாளிதழும் உலோக அச்சு இயந்திரங்களைக் கைவிட்டு முத்து நெடுமாறன் உருவாக்கிய 'முரசு’ மென்பொருளை பயன்படுத்தத் தொடங்கியது. இதழ்கள் மட்டுமின்றி மற்ற பதிப்பகங்களும் அச்சகங்களும் சில ஆண்டுகளிலேயே உலோக அச்சு முறையைக் கைவிட்டு கணினியைக் கொண்டு லேசர் அச்சு இயந்திரங்களில் அச்சிடத் தொடங்கின. தமிழில் தட்டெழுதி (type செய்து) பக்க அமைப்புகளை வடிவமைத்துத் தரும் பணியை, பலர் ஒரு தொழிலாகவேத் தொடங்கினர்.

இணையப் பக்கங்கள், மின்னஞ்சலில் தமிழ்

முரசு

1993- ல் இணையம் முதன்முதலில் பொதுப் பயனீட்டுக்காக அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கும் காலம். இணையப் பக்கங்கள், மின்னஞ்சல் போன்று புதிய மின்னியல் சேவைகள் அறிமுகம் கண்டு வந்தன. தொடக்கத்தில் கணினி இயக்கம் இருந்தது போலவே, இங்கேயும் ஆங்கிலமே முதன்மை மொழியாக இருந்தது. மற்ற மொழிகளுக்கு வாய்ப்பில்லை. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த முத்து நெடுமாறன், இணையப் பக்கங்களிலும், மின்னஞ்சல்களிலும் தமிழ் எழுத்துகள் புழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு முரசு மென்பொருளில் வேறொரு குறுகிய வடிவமாக 'முரசு அஞ்சல் 1.0’ என்ற செயலியைத் தொகுத்து, இணையப் பயன்பாட்டிற்கான சில வசதிகளைச் சேர்த்து ஒரு பதிப்பாக வெளியிட்டார். இது பரவலான பயன்பாட்டை அடைய வேண்டும் என்ற நோக்கில் இலவசமாகவே இதனை இணையம் வழியாகவே வெளியிட்டார். 1994-ஆம் ஆண்டு, தமிழகத்தில் வெளிவரும் 'ஆனந்த விகடன்’ இதழின் வெளியீட்டாளர்களின் விருப்பத்திற்கிணங்க 'முரசு அஞ்சல்’ செயலியை விகடன் இணையப் பக்கத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படியான வசதிகளையும் ஏற்படுத்தினார். விகடன் இணையப்பக்கமும் முரசு அஞ்சல் எழுத்துருக்களைக் கொண்டு அப்போது வடிவமைக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுவதிலும் இருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கினர்.

விசைமுக அமைப்பு

இந்த 'முரசு அஞ்சல்’ தொகுப்பில்தான் 'அஞ்சல்’ எனும் விசைமுக அமைப்பை முத்து நெடுமாறன் முதன் முதலில் பொதுப் பயனீட்டிற்கு அறிமுகம் செய்தார். 1993-ஆம் ஆண்டு இறுதியில் உருவாக்கப்பட்ட விசைமுக அமைப்பு இது. ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழ் எழுதுவதுபோலவே தட்டெழுதினால், திரையில் தமிழ் எழுத்துகளில் தோன்றும் நுட்பம் இது. இதற்கு முன், முதலில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதன்பின் பிற செயலிகளைக் கொண்டு தமிழ் எழுத்துகளுக்கு மாற்ற சில செயலிகள் இருந்தன. ஆனால் தட்டெழுதும் போதே (டைப் செய்யும் போதே) ஆங்கில எழுத்துகளைத் தமிழாகவோ மற்ற இந்திய மொழி எழுத்துகளாகவோ மாறித்தருவதை அதுவரையில் வேறு எந்தச் செயலியும் செய்து தரவில்லை. இந்த ஃபோனதிக் வசதி, தமிழில் தட்டெழுதத் தெரியாத ஆயிரக்கணக்கானோரை தமிழில் எழுத வைத்தது.

பரிணாமம்

1999-ஆம் ஆண்டு வரை அச்சுக்கு 'முரசு’, இணையத்திற்கு 'முரசு அஞ்சல்’ என இருவேறு செயலிகளாகப் பதிப்பித்து வந்த முத்து நெடுமாறன், இரண்டையும் ஒன்றினைத்து ஒரே பதிப்பாக யூனிகோடு எழுத்துரு வசதிகளுடன் ஒரே செயலியாக 'முரசு அஞ்சல்’ எனும் பெயரைக் கொண்டே வெளியிட்டார். இந்தப் பதிப்பைக்கொண்டே இன்றுவரை இச்செயலி அவரால் வெளியிடப்பட்டு வருகிறது. இணையப் பயன்பாட்டிற்கான இலவசப் பதிப்பை 'முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிப்பு’ என்னும் பெயரில் இன்றும் வெளியிட்டு வருகிறார்.

மெக்கிண்டாஷும் மற்ற ஆப்பிள் கருவிகளும்

2001-ஆம் ஆண்டு அனைத்துலக வணிக நிறுவனங்களில் பணியாற்றுவதை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்த முத்து நெடுமாறன், பல நிறுவனங்களின் மாநாட்டு நிகழ்ச்சிகளில் அந்நிறுவனங்களின் அழைப்பின் பேரில் தொழில்நுட்பப் படைப்புகளை நடத்தி வந்தார். அப்போது அவருக்கு சிங்கப்பூரில் இயங்கிவரும் ஆப்பிள் நிருவனம் அறிமுகமானது. இந்தி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளை சேர்த்து வந்த ஆப்பிள் கணினிகளில் தமிழ் இல்லை. 2002-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் தமிழ் நூல்களின் பெயர்களைத் தமிழிலேயே தேடுவதற்கான வசதிகளைக் கொண்ட கணினிகளை வாங்க தேசிய நூலக வாரியம் முடிவெடுத்தது. அந்தத் திட்டத்திற்கு ஆப்பிள் கணினிகள் பொருந்தா என அறிந்த ஆப்பிள் நிறுவனம், முத்து நெடுமாறனை நாடியது. குறுகிய காலத்தில் தமிழ் எழுத்துருவையும் உள்ளீடு முறையையும் ஆப்பிள் கணினிகளில் சேர்த்தார். ஆங் மோ கியோ நூலகத்தில் முதன் முதலாக, தமிழ் மொழிப் பயன்பாட்டிற்காகவே, ஆப்பிள் கணினிகள் வாங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட முத்து நெடுமாறனின் இணைமதி எனும் மெக்கிண்டாஷ் எழுத்துருவும், தமிழ் உள்ளிடுமுறைகளும் 2004-ஆம் ஆண்டு முதல் அனைத்து ஆப்பிள் கருவிகளிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ஆப்பிள் இயங்குதளத்தையும் (macOS) ஆண்டுதோறும் சேர்க்கப்பட்டுவரும் புதுப்புது நுட்பங்களையும் ஆழமாகக் கற்றுவந்தார் முத்து நெடுமாறன். 2010-ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி, குஜராத்தி, வங்கம், ஒடியா, பஞ்சாபி, லாவோ, கம்போடியா, மியான்மார், சிங்களம் ஆகிய மொழிகளுக்கு எழுத்துருக்களை உருவாக்கினார். ஒவ்வொரு மொழிக்கும் நான்கு எழுத்துருக்கள். இவை அனைத்தையும் மெக்கிண்டாஷ் கணினிகளில் மட்டுமல்லாமல் ஐபோன் ஐப்பேட் கருவிகளிலும், தொடர்ந்து வந்த ஆப்பிள் கடிகாரத்திலும், ஆப்பிள் நிறுவனம் சேர்த்தது.

ஆப்பிள் கருவிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்க முத்து நெடுமாறன் தாம் சொந்தமாகவே துணை மென்பொருள் கருவிகளை (font proofing and debugging tools) உருவாக்கி வந்தார். இவை அனைத்தையும் முறையாகத் தொகுத்து, எளிமையான பயன்பாட்டு வழிமுறைகளைச் சேர்த்து 'ஐபிஸ்கஸ்’ எனும் பெயரில் தமது 60-ஆம் பிறந்தநாள் அன்று உலகப் பயன்பாட்டிற்காக இலவசமாகவும், திறவூட்டு மென்பொருளாகவும் முத்து நெடுமாறன் வெளியிட்டார். இந்தத் துணை மென்பொருள் கருவிகளைக் கொண்டு தெற்காசிய, தென்கிழக்காசிய மொழிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்குவதை மிகவும் எளிமைப்படுத்தலாம், அவை சரியாக இயங்குகின்றனவா என்று அந்தந்த மொழியை அறியாதோரும் சரிபார்க்கலாம். எழுத்துருவாக்க உலகில் 'ஐபிஸ்கஸ்’  செயலி சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. (http://hibizcus.com)

செல்லினம்

90-களின் இறுதியில் செல்பேசிகளின் பயன்பாடு அழைப்புகளோடு நின்றுவிடாமல் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் விரிவாக்கம் கண்டது. இது திறன்பேசிகளுக்கு முந்தைய காலகட்டம். நோக்கியா, சோனி எரிக்சன் போன்ற கையடக்கக் கருவிகளில் தமிழிலும் குறுஞ்செய்திகளை அனுப்பவேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற 2003-ஆம் ஆண்டு மலேசிய மெக்சிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உருவாக்கத்திட்டத்தில் ஓர் உருப்பினராகச் சேர்ந்தார். இவருரைய சொந்த முயற்சியிலேயே தமிழில் செய்திகளைத் தட்டெழுதும் வசதியை இந்தக் கருவிகளில் சேர்த்தார். இதனை மேலும் மேம்படுத்தி, ஒரு முழுமையான குறுஞ்செய்திச் சேவையாக சிங்கப்பூரின் ஒலி 96.8 தமிழ் வானொலி நிலையத்தாரின் ஆதரவில் 'செல்லினம்’ எனும் பெயரில் 2005-ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிட்டார். அதுவரை நிலையத்திற்கு ஆங்கில எழுத்துகளைக் கொண்டே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன. செல்லினம் வந்த பிறகு அதுவரை செய்திகளை அனுப்பாத பல நேயர்கள் தமிழில் தங்கள் எண்ணங்களை அனுப்பத் தொடங்கினர்.

 • ஒலி 96.8-இன் வெளியீட்டிற்குப் பிறகு செல்லினத்தை பல நிறுவனங்கள் முத்து நெடுமாறனோடு இணைந்து பெரிய அளவில் வெளியிட்டனர். அவை:
 • மலேசியா: செல்காம் (தமிழ், ஜாவி), மெக்சிஸ், டி.எச்.ஆர். ராகா, ஆஸ்திரோ வானவில்
 • யு. எ. இ: ஏதிசாலாத் செல்பேசி நிறுவனம் (தமிழ், மலையாளம், இந்தி, சிங்களம்)
 • இந்தியா: ஏர்டெல், ஏர்செல் (தமிழ், மலையாளம்)
 • மாலைதீவு: வாத்தானியா (திவேகி மொழியில்)

பல வகையான கைப்பேசிகளிலும் பயணம் செய்த செல்லினம், 2009-ஆம் ஆண்டு முதல் ஐ-ஃபோனிலும், 2011-ஆம் ஆண்டு முதல் எச் டி சி ஆண்டிராய்டு கருவிகளிலும் 2012-ஆம் ஆண்டு முதல் கூகுள் பிளே வழி எல்லா ஆண்டிராய்டு கருவிகளிலும் இயங்கி வருகிறது. 2005-ஆம் ஆண்டு "Most Innovative Mobile Application" என்ற பிரிவில், மலேசிய அரசின் ஆதரவில் வழங்கப்படும் "Malaysian ICT Excellence Award" என்ற விருதை வென்றது செல்லினம் வென்றது.

ஆண்டிராய்டு

ஆப்பிள் நிறுவனத்தைப் போலவே ஆண்டிராய்டு திறன்பேசிகளைத் தயாரிக்கும் தைவான் நாட்டின் எச்.டி.சி நிறுவனம், எல்லா இந்திய மொழிகளைத் தங்கள் கருவிகளில் சேர்க்க முடிவு செய்தது. இதற்காக முத்து நெடுமாறனை பலமுறை அழைத்து ஆலோசனைக் கேட்டது. இறுதியாக, எல்லா இந்திய மொழிகளுக்கும், தாய்லாந்து, வியட்நாம், மியான்மார் நாட்டு மொழிகளுக்கும் முத்து நெடுமாறனின் எழுத்துருக்களையும் உள்ளிடுமுறைகளையும் 2011-ஆம் ஆண்டு முதல் சேர்த்து வந்தது.

மற்ற செயலிகள்

செல்லியல்
 • டிசம்பர் 12, 2012-ல் 'செல்லியல்' எனும் செயலியை முத்து நெடுமாறன் தொடங்கினார்.  இது ஒரு இணைய செய்தி ஊடகமாகும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ள முத்தரசன் இதற்கு நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றார்.
 • 2017-ல்  சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் தமிழ் விளையாட்டு ஒன்றை, முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்தக் கையடக்கத் தமிழ் விளையாட்டு  பல உலக நாடுகளை சென்றடைந்தது.
 • 2018-ல் கனியும் மணியும் எனும் மின்னூலை ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் அவர்களுடன் இணைந்து சிங்கப்பூரில் வெளியிட்டார் முத்து நெடுமாறன். தமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள், அசையும் படங்கள், கலந்துரையாடல் என பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும்  மின்னூல் இது.
 • 2021-ல் சொல்வன் வரிவடிவத்தை ஒலிவடிவமாக்கிக் கொடுக்கும் ஒரு புதிய சிறப்புக்கூறு கொண்ட மென்பொருளை உருவாக்கினார் முத்து நெடுமாறன். இந்த செயலியால் தமிழ் வரிவடிவங்களை வாசிப்பது மட்டுமல்லாமல், எண்களையும் நாட்டின் சூழலுக்கேற்பச் சொல்வனால் வாசித்துக் காட்ட முடியும். எண்கள் மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பயன்படுத்தப்படும் பணச் சின்னங்களையும் சொல்வனால் வாசிக்க முடியும்.

உத்தமம்

உத்தமம்

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் தோற்றுநர்களில் முத்து நெடுமாறனும் ஒருவர். 2000-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பின் துணைத்தலைவராகத் தொடங்கி, 2003-ஆம் ஆண்டு அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2001-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்குத் தலைமையேற்று நடத்தினார்.

நூல்கள்

 • அஞ்சல் வழி இணையம் - 2001 (கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின்போது வெளியிடப்பட்டது)

மென்பொருள்கள்

தமிழ்
 • முரசு (1985)
 • முரசு அஞ்சல் (1993)
 • ஆப்பிள் கணினிக்கான தமிழ் எழுத்துருவும் விசைப்பலகையும் (2004)
 • செல்லினம் திறன்பேசிகளுக்கு முன் (2003)
 • சிங்கப்பூர் கல்வி அமைசுக்கான சிறப்பு முரசு அஞ்சல் பதிகை (2009)
 • செல்லினம், திறன்பேசிகளுக்கு - (2010)
 • செல்லியல் - (2012)
 • சொல்வளம் - (2017)
 • கனியும் மணியும் - (ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் அவர்களுடன் இணைந்து) - சிங்கப்பூர் வெளியீடு (2018), அனைத்துலக வெளியீடு (2022)
 • சொல்வன் - (2021)
பிற மொழிகள்
 • Mobile-Jawi, மலாய் மொழிக்கான ஜாவி உள்ளிடு முறை (2007)
 • வாணி, தெலுங்கு எழுத்துரு, மைக்குரோசாபிட்டு விண்டோசுக்காக (2008)
 • அனைத்து இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துருக்கள் - ஆப்பிள் கணினிகளில் (2008)
 • அனைத்து இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துருக்களும் உள்ளிடு முறையும் - எச் டி சி ஆண்டிராய்டு கணினிகளில் (2011)
 • Sangam Keyboards for iOS  (2014)
 • தமிழ், மலையாள எழுத்துருக்கள், அமேசான் கிண்டல் கருவிகளில் (2016)
 • ஆசுஸ் ஆண்டிராய்டு கடுவிகளுக்கான மியான்மார் மொழி உள்ளிடு முறை (2016)
 • Hibizcus - இந்திய இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துருவாக்கத்திற்கான மென்பொருள் (2021)

உசாத்துணை