முரசு நெடுமாறன்
- முரசு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முரசு (பெயர் பட்டியல்)
- நெடுமாறன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நெடுமாறன் (பெயர் பட்டியல்)
முரசு நெடுமாறன் (1937) மலேசியாவின் மூத்தக் கவிஞர். குழந்தைகளுக்கான கவிதைகள் படைப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர். பாப்பாவின் பாவலர் என்று அறியப்படுபவர். மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தைத் தொகுத்தவர். இவர் ஒரு கல்வியாளரும் ஆவார்.
பிறப்பு, கல்வி
முரசு நெடுமாறன் ஜனவரி 14, 1937-ல் சிலாங்கூரின் கேரீத்தீவில் பிறந்தார். பெற்றோர் ராசகிள்ளி சுப்புராயன் - முனியம்மை மாரிமுத்து. இவரின் இயற்பெயர் கணேசன். இவருக்கு இரு தம்பிகள் உள்ளனர்.
இவர் தொடக்கக் கல்வியை கேரீத்தீவின் ஆரம்ப பள்ளியில் பயின்றார். தமிழ் ஏழாம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் சுயமாகவே மூன்றாம் படிவம் வரை கற்றார். 1973 முதல் 1976 வரை விடுமுறைக்கால ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார்.
அஞ்சல்வழிக் கல்வியின் மூலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இளங்கலைப் பட்டம் (1988) , முதுகலைப் பட்டம் பெற்றார் (1990 - 1992).தன் முனைவர் பட்டத்தை (1994 - 2002) புதுவை பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
தனி வாழ்க்கை
முரசு நெடுமாறன் 1963-ல் ஆசிரியர் பணியைத் தொடங்கி 1992 வரை சேவையாற்றினார். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பணிஓய்வு பெற்றார். 1993லிருந்து 1996 வரை ஒப்பந்த ஆசிரியராகவும் பணியாற்றினார். 2000 - 2001 வரை தமிழ் நாட்டு அரசின் பொறுப்பில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இவர் 2002 – 2005 வரை மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினார். முரசு நெடுமாறன் இசைகேட்பதில் தீவிர ஆர்வம் கொண்டவர்.
முரசு நெடுமாறனின் மனைவி சானகி. இவர்களுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். முரசு நிறுவன உரிமையாளர் முத்து நெடுமாறன் இவரது மூத்த மகன்.
இலக்கிய வாழ்க்கை
இளவயதிலேயே பெரியாரின் கொள்கைகளிலும் பாரதிதாசன் கவிதைகளிலும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரும்பாலான கவிதைகளை மனனம் செய்து சொல்வதிலும் திறமை கொண்டிருந்தார். இவரின் முதல் கவிதை 1958-ல் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து கவிதை, கட்டுரை, கதை, நாடகங்கள் எழுதினார்.
தொடக்கத்தில் ஓசை அடிப்படையிலேயே வெண்பா எழுதினார். யாப்பிலக்கணம் கற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதுதான் விசாகப் பெருமாள்ஐயரின் நூலை வாசித்தார். அதன்பின்னர் புலவர் குழந்தையின் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் செய்யுளியல், யாப்பருங்கலக்காரிகைகளைக் கற்றறிந்தார். முரசு
இலக்கிய செயல்பாடுகள்
கல்வி ஒலிபரப்பு
மே 2, 1966-ல் அப்போதைய கல்வி அமைச்சர் முகமட் கிர் ஜொகாரியால் பள்ளிகளுக்கான வானொலி ஒலிபரப்பு தொடங்கியது. இதில் தமிழ் மொழிப்பிரிவில் முரசு நெடுமாறனின் பங்கு அளப்பரியது. கதை, இசைப்பாடல், நாடகம், திருக்குறள் விளக்கம் என்று இவரின் படைப்புகள் தொடர்ந்து ஒலியேறின. ஏறத்தாழ 28 ஆண்டுகள், கல்வி ஒலிபரப்பு நிறுத்தப்படும்வரை இவரின் பங்களிப்பு தொடர்ந்தது.
குறுந்தொகை நாடகங்கள்
சங்க இலக்கிய விருந்து எனும் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 குறுந்தொகைக்காட்சிகளை நாடக வடிவில் எழுதி மலேசிய வானொலியின் தயாரிப்பில் நடித்துமுள்ளார். எளிய மொழியில் அனைத்து மக்களையும் சங்கப்பாடல்கள் சென்றடைய இது வழிவகுத்தது.
தமிழ் நெறி மன்றம்
1980-ல் தமிழ் நெறி மன்றம் எனும் இயக்கத்தினை நிறுவியவரும் இவரே. இதன்வழி அரசுத் தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தகுந்த ஆசிரியர்களைக்கொண்டு இலவச வகுப்புகள் நடத்தப்பட்டன. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன.
1978 முதல் மாணவர் பண்பாட்டு விழாவை கிள்ளானின் லட்சுமணா மண்டபத்தில் நடத்திவந்தார். இதில் கிள்ளான் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த தொடக்க, இடைநிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து மாணவர்களின் மொழித்திறனும் கலைத்திறனும் கூடிய முத்தமிழ் விழாவாக இந்நிகழ்வினை 18 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துவதில் வெற்றி கண்டார்.
பாடத்திட்டம்
தமிழ் மொழிக்கான புதிய பாடத்திட்ட ஆய்விலும் உருவாக்கங்களிலும் முரசு நெடுமாறனின் பங்குண்டு. 1980-ல் மலேசிய கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் தமிழ் பாடத்திற்கான திட்டவரைவிலும் இவரின் கல்வி நடவடிக்கைகள், அணுகுமுறைகள் இடம்பெற்றன. ஆசிரியர்களுக்குக் கற்றல் கற்பித்தலில் கவிதையின் பங்கு குறித்து பயிலரங்குகள், கவிதைப்பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார்.உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கல்விக் கருத்தரங்கங்கள்,மாநாடுகளில் கட்டுரைகள் படைத்துள்ளார்.
மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
கவிதைகளின்பால் உள்ள ஈடுபாட்டால் தன் 15-ம் வயதிலிருந்தே, பல்வேறு மூலங்களிலிருந்தும் மலேசியா, சிங்கப்பூர் கவிதைகளைத் தேடித் தொகுத்து வந்தார். இதனையறிந்த தமிழ் நேசன் நாளேட்டின் முன்னாள் தலைமை ஆசிரியர் முருகு சுப்ரமணியன் மலேசிய கவிதைகள் குறித்து ஒரு தொடர்க்கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து முரசு நெடுமாறன் 1967-ல் தொடர்ச்சியாக 11 கட்டுரைகள் எழுதினார்.
பல்லாண்டுகள் இவர் தேடித் திரட்டிய கவிதைகள் அடங்கிய கோப்புகள் கைவிட்டுப் போயின. அச்சமயம் பெரும் மனஉளைச்சலுக்காளானார். 1950 தொடங்கி 1970 வரை கவிதை உலகின் பொற்காலம் என்று குறிப்பிடும் முரசு நெடுமாறன், அவற்றைத் தேடும் பணியைத் தொடர்ந்தார். பலரின் ஆதரவோடு பெரும்பாலான கவிதைகளை மீட்டெடுத்தார்.
நாற்பதாண்டுகளுக்கும் மேலாகச் சேகரித்த கவிதைகளை பல்வேறு இன்னல்களுக்குப்பின்னர் முறைப்படி தொகுத்து வெளியிட்டார். மலேசியத் தமிழர், தமிழிலக்கிய வரலாற்றுத் தகவல்களும் நிறைந்த இந்நூல் மலேசிய, சிங்கப்பூர் பாவலர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய முதல் நூலாகும். இந்நூலுக்கு 1998-ல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப்பரிசு வழங்கப்பட்டது. தமிழக அரசு முரசு நெடுமாறனுக்கு 1998-ல் பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தது. இவ்விருதைப் பெற்ற முதல் அயலகக் கவிஞர் முரசு நெடுமாறன்தான்.
உலகத் தமிழ்க் களஞ்சியம்
1997-ல் உலகத் தமிழ்க் களஞ்சியம் மூன்று தொகுதிகளாக வெளிவந்தது.இப்பெருங்களஞ்சியத்தில் மலேசிய, சிங்கை தொடர்பான நூற்றுக்கணக்கான தகவல்களை முரசு நெடுமாறன் தொகுத்தளித்துள்ளார்.
குழந்தை இலக்கிய மாநாடு
மலேசிய தமிழ் பண்பாட்டியக்கம் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் ஜூன் 8லிருந்து 10 வரை 2018லில் முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டை நடத்தியது. இம்மாநாடு முரசு நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கிய முக்கியமான முன்னெடுப்பாக இம்மாநாடு அமைந்தது. முரசு நெடுமாறன் இன்றளவும் தமிழ்ப் பண்பாட்டியகத்தின் துணைத்தலைவராகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
பாடிப்பழகுவோம் எனும் தலைப்பில் (2 பகுதிகள்) வெளிவந்த முரசு நெடுமாறனின் குறுவட்டுகள், குழந்தை இலக்கிய பல்லூடகப் படைப்புக்களுக்கு ஒரு முன்னோடி எனலாம்.
இலக்கிய இடம்
குழந்தைகளுக்கான கவிதைகளை மலேசியாவில் அறிமுகப்படுத்தியதில் இவரின் பங்கு சிறப்பானது. இன்றளவும் இளையோருக்கான கவிதை, கதைப்பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறார். 1969 சென்னை வானொலிச் சிறுவர் சங்கத் தலைவர் கவிஞர் தணிகை உலகநாதன் இவரைப் பாப்பாவின் பாவலர் என்று சிறப்பித்தார். மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் முரசு நெடுமாறனின் சிறந்த பங்களிப்பாகத் திகழ்கின்றது.
பரிசுகளும் விருதுகளும்
- மலேசிய அரசின் பிபின் (PPN) விருது, 1978
- டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப்பரிசு, 1998 (மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலுக்குக் கிடைத்தது)
- சி.வி.குப்புசாமி இலக்கிய விருது, 1986 (மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்)
- பாவேந்தர் பாரதிதாசன் விருது, 1997 (தமிழக அரசு)
- தமிழவேள் கோ.சாரங்கபாணி விருது, 2001 (சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம்)
- முத்தமிழ் அரசு, 2002 (உலகத் தமிழாசிரியர் மன்றம், மலேசிய செயலவை)
- வாழ்நாள் சாதனையாளர் விருது, 2004 (அறவாணன் அறக்கட்டளை தமிழ்நாடு)
- கவிதைக் களஞ்சியக் கோன் விருது, 2011 (11-ம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, பிரான்ஸ்)
- வாழ்நாள் சாதனையாளர் விருது, 2018 (மலேசிய கல்வியியல் பல்கலைக்கழகம் (UPSI))
- டத்தோ ஆதிநாகப்பன் இலக்கிய விருது
நூல்கள்
சிறுவர் நாடகத் தொகுதிகள் (1987)
- உயிரா மானமா
- சிரவணன்
- பாரதியார் வந்தார்
- சோளக்கொல்லை பொம்மை
- வீடு நிறையும் பொருள்
- நான்கு விஞ்ஞானிகள்
- விந்தையான விருந்து
- ஹங்துவா நாடகம்
- பாட்டு பிறந்த கதை (கட்டுரை)
- சிறுவர் பாடல்கள்
- இளந்தளிர், பொன்னி பதிப்பகம், கோலாலம்பூர் 1969
- அழகுப் பாட்டு (1 & 2), மலேசிய புத்தகாலயம் கோலாலம்பூர் 1976
- அன்புப் பாட்டு (1 & 2 ), 1976, 1986
- இன்பப் பாட்டு 1986
- எங்கள் பாட்டு 1986
- நன்னெறிப் பாட்டு 1987
- எழுத்துப் பாட்டு (1 - 3 ), உமா பதிப்பகம் கோலாலம்பூர் 1987
- பாடிப்பழகுவோம் (1 & 2), அருள்மதியம் கிள்ளான் 2005
- சிறுவர் பாட்டமுதம் அருள்மதியம் கிள்ளான் 2021
களஞ்சியம்
- மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (அருள்மதியம் பதிப்பகம், கிள்ளான் 1997)
- உலகத் தமிழ்க் களஞ்சியம் (அருள்மதியம் பதிப்பகம், கிள்ளான் 2018)
ஆய்வு நூல்
- மலேசியத் தமிழரும் தமிழும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2007)
உசாத்துணை
- மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம், அருள்மதியம் பதிப்பகம், கிள்ளான் 1997
- பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன், முனைவர் ஏ. எழில்வசந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, 2016
வெளி இணைப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:51 IST