under review

முத்தாநந்த அடிகள்

From Tamil Wiki

முத்தாநந்த அடிகள் (ஏப்ரல் 23, 1891 - அக்டோபர் 24, 1958) தமிழ்ப்புலவர், சைவசமயத் துறவி, மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், சொற்பொழிவாளர். இராவண கிருதசிவதாண்டவ தோத்திரம் முக்கியமான மொழிபெயர்ப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

முத்தாநந்த அடிகள் மதுரையில் ஏப்ரல் 23, 1891-ல் திருமலைப்பிள்ளைக்கும், அம்மணியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் முத்தையா. திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் புலம்பெயர்ந்த கார்கார்த்த வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய அண்ணன் சுப்பையா பிள்ளை. தம்பியர் மூவர், தங்கையர் இருவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கொழும்பில் அரிசி மண்டியில் வணிகம் புரிந்தார்.

தனிவாழ்க்கை

முத்தாநந்த அடிகள் திருத்தில்லை கூத்தபிரானை வழிபட்டார். அங்கு வந்த துறவியின் மூலம் மெளன தேசிகர் ஆதீனத்தில் சேர்ந்தார். இவருக்கு செல்லப்ப தேசிகர் ஞானாசிரியராக இருந்தார். 'சோணசைல மாலை', 'சிதம்பர மும்மணிக்கோவை', 'நால்வர் நான்மணிமாலை', 'மறைசையந்தாதி' முதலிய சிறு நூல்களையும் பிரபுலிங்கலீலை, காளத்திபுராணம், காஞ்சிப்புராணம், திருவிளையாடற்புராணம், பெரிய புராணம் முதலிய பெரு நூல்களையும், இலக்கணச்சுருக்கம், நன்னூல் முதலிய நூல்களையும் கற்றார். கோநகர் கரந்தைக் கவியரசு வேங்கடாச்சலம் பிள்ளையிடம் நான்காண்டுகள் கல்வி பயின்றார். திருத்தில்லை ஆதீன அலுவல்களைப் பார்த்துக் கொண்டார். தன் ஞான ஆசிரியர் இறந்ததும் சென்னை சென்று முருகேச முதலியாரிடம் (வித்யானந்த அடிகள்) இலக்கண இலக்கியங்களைக் கற்றார். விசாரசாகரன், விருத்திப்பிராபகரம், தத்துவாது சந்தனம் முதலிய வேதாந்த நூல்களை நான்காண்டுகள் பயின்றார். 1928-ல் வியாசர்பாடி கோதண்டராம் முதலியாருடன் காசி, ரிஷிகேஷ், திருக்கேதாரம், பத்ரிநாராயணம் முதலிய ஊர்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தார். 1928-ல் சென்னையில் கரபாத்திர சிவப்பிரகாச அடிகளார் தோட்டத்தில் தங்கினார். சென்னை த.ப. ராமசாமிப்பிள்ளை எனும் கொடைவள்ளலிடம் நட்பு கொண்டார். 1947-ல் வியாசர்பாடி சிவப்பிரகாச அடிகளாரின் மடத்திற்கு ஆசிரியரானார்.

இலக்கிய வாழ்க்கை

முத்தாநந்த அடிகள் சிவப்பிரகாச அடிகளும் ராமசாமிப்பிள்ளையும் இணைந்து ஏற்படுத்திய வடமொழிக்கல்லூரிக்கு தலைவராகப் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நடத்தினார். இந்த காலகட்டத்தில் காசி சிவாநந்தயதீந்தரின் மூலம் சாம வேதத்தையும், யஜூர் வேதத்தையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். வேப்பேரியில் வேதாந்த நூல்களையும், இலக்கண இலக்கியங்களையும் கற்பித்தார். சங்கம் ஒன்றை ஏற்படுத்தி சொற்பொழிவுகள் செய்தார். 'இராவண கிருத சிவதாண்டவ தோத்திரம்' நூலை வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். தனிப்பாடல்கள் பல பாடினார். புலவர்களின் பாடல்களுக்கு சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார்.

இலக்கிய நண்பர்கள்
  • பொன்னம்பல சிவம்
  • திருநீலகண்ட அடிகள்
  • பண்டித சித நாராயண அடிகள்
  • சிதம்பரம் பரஞ்சோதியடிகள்

பாடல் நடை

கொல்லாமை

நன் றுமிக நன் றுயிர்கட் கின்னோக் கந்தான்
நாடுநலம் பெற்றுய்ய நாட்டங் கொண்ட
வெண் றிமனத் தென்னேருக்கு மணிதே விக்கு
விளை ந்தவரு ளெலாவுலகும் மேலிப் போற்றும்
குன்றலிலா அறமெவைக்கும் பெரிதாம் இந்தக்
கொல்லாமை
 அறமென் றகுறள்வாய்த் தேவர்
தின் றல்பொருட் டுலகனை த்துங் கொல்லா தாயில்
தேடவிலைக் கூன்தருவார் இலையென் றாரே

மறைவு

முத்தாநந்த அடிகள் அக்டோபர் 24, 1958-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • இராவண கிருதசிவதாண்டவ தோத்திரம்

உசாத்துணை


✅Finalised Page