under review

முகவைக் கண்ண முருகனார்

From Tamil Wiki
முகவைக் கண்ண முருகனார்

முகவைக் கண்ண முருகனார் (இயற்பெயர்: சுப்பிரமண்யன்) (ஆகஸ்ட் 1890 - ஆகஸ்ட் 28, 1973) தமிழ்க்கவிஞர், தமிழாசிரியர், ஆன்மிகவாதி, வேதாந்தி. ரமண மகரிஷியின் மாணவர்களில் முதன்மையானவர். தேசபக்திக் கவிதைகளைப் பாடினார். பாரதியாருக்கு இணையாக அவர் காலகட்டத்தில் பேசப்பட்டவர். ரமணரின் ஆன்மிக, தத்துவம் சார்ந்த சிந்தனைகளை நூலாக ஆக்குவதில் பெரும் பங்கு வகித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முகவைக் கண்ண முருகனார் இராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தணர் குடும்பத்தில் ஆகஸ்ட் 1890-ல் கிருஷ்ணய்யர், சுப்புலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். குடும்பத்தினர் சாம்பமூர்த்தி என்று அழைத்தனர். மூத்த சகோதரிகள் காமாட்சி, ருக்மணி. ஐந்து வயது வரை வாய் பேசமுடியாதவராக இருந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். பெரியப்பா சங்கரய்யரும், பெரியம்மா லட்சுமியும் அவரை வளர்த்தனர். ராமநாதபுரத்தில் ஜயபாலஸ்வாமி பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். ஸ்காட் மிஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார். கல்லூரி நாட்களில் தனது பெயரை 'முருகனார்' என தூய தமிழ்ப் பெயராக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை (ராமநாதபுரம்), தந்தையின் பெயரான 'கண்ண' என்பதையும் சேர்த்துக் கொண்டு 'முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.

தனி வாழ்க்கை

கண்ண முருகனார் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் ராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க பணி நியமனம் பெற்றார். இக்காலகட்டத்தில் மீனாட்சியைத் திருமணம் செய்து கொண்டார். மீனாட்சியின் தந்தை தண்டபாணி ஐயர் ரமண மகரிஷியின் சீடர். கண்ண முருகனார் தனது மனைவி, தாயுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். நார்விச் பெண்கள் உயர் நிலைப்பள்ளியிலும், இந்து தியாலஜிகல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார்.

ரமண மகரிஷியுடன் முகவைக் கண்ண முருகனார் மற்றும் சீடர்கள்

ஆன்மிகம்

கண்ண முருகனார் தன் மாமனார் தண்டபாணி ஐயரின் பரிந்துரையின் பேரில் ரமண மகரிஷியின் வழியாக ’அருணாசல ஸ்துதிப் பஞ்சகம்’ என்ற தோத்திரத் தொகுப்பையும், அத்வைத உபதேசமான ’நான் யார்?’ என்ற நூலையும் 1923-ல் படித்தார். அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியைச் சந்தித்தார். அவரைச் சந்திக்கச் செல்லும்போதே 'தேசிகப் பதிகம்' என்ற பாமாலையைப் புனைந்து அதை ரமண மகரிஷிக்கு அர்ப்பணித்தார். 1926-ல் தாயின் மறைவிற்குப் பின் ஆசிரியப்பணியையும், குடும்பத்தையும் துறந்து ரமண மகரிஷியிடம் துறவறம் பெற்றார். ரமணரின் அடியார்கள் அவரின் உபதேசமாகிய விசாரமார்க்கத்தை அனுசரிப்பதற்கு அடுத்தபடியாக மேற்கொள்வது கிரிவலம்தான் என்பதையறிந்து முருகனாரும் தொடர்ந்து ஒரு மண்டலம்(48 நாட்கள்) கிரிவலம் செய்தார். ரமணரிடம் நேரடியாக வேதாந்தத்தைக் கற்றவர்களில் ஒருவர் முருகனார். இன்னொருவர் புதுக்கோட்டை கி. லட்சுமண சர்மா.

இலக்கிய வாழ்க்கை

கண்ண முருகனார் ஆசிரியப்பணி செய்து கொண்டிருந்த போது தேசியப் பாடல்கள் பல இயற்றினார். அவரது 'ஸ்வதந்திர கீதங்கள்' என்ற பாடல் தொகுப்பு 1918-ல் நூல் வடிவம் பெற்றது. காந்தியின் தலைமைச் சிறப்பையும், அறநெறிகளையும் பற்றி இவர் பாடிய பாடல்கள் 'தமிழ்நாடு' போன்ற இதழ்களில் வெளியாகின. இவரின் 'காந்திக் கவிதைகள்' 1922 முதல் வெளிவந்தன. இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு 1943-ல் 'சுதந்திரகீதங்கள்' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. ராவ்சாஹிப், மு. ராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக் (Lexicon) குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

கண்ண முருகனார் ரமண மகரிஷியைச் சந்தித்தபின் அவர் ரமணர் பற்றிய தோத்திரங்களையும், அவர் கூறிய கருத்துகளையும் உபதேசங்களையும், அவரால் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பற்றியும் மட்டுமே பாடல்கள் எழுதினார். முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பாக்களை இந்த காலகட்டத்தில் எழுதினார். ஆன்மிக விளக்கங்களுக்காகவும், தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் ரமணரிடம் வரும் பக்தர்களுக்கு ரமணர் தந்த விளக்கங்கள், அறிவுரைகள், தத்துவங்களைக் கேட்டு அதை எழுதித் தொகுத்தார். அவ்வாறு 1,282 நாலடி வெண்பாக்களால் கோர்க்கப்பட்ட நூல்தான் ‘குருவாசக் கோவை’. இப்பாடல்கள் அனைத்தையும் பேராசிரியர் கே. சுவாமிநாதன் (1896-1994) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்நூலுக்கு சாது ஓம் சுவாமிகள் என்ற ரமண பக்தர் விரிவுரை எழுதினார். இவ்விரிவுரை மூலநூலுடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

கண்ண முருகனார் ரமணர் அவ்வப்போது பாடிய பாடல்களை நாற்பதாகத் தொகுத்து ‘உள்ளது நாற்பது’ என்ற ஞான நூலாக வெளியிடத் திட்டமிட்டு அவரை எழுதச் செய்து தொகுத்து 1928-ல் வெளியிட்டார். முருகனாரின் வேண்டுதலால் ரமணர் இயற்றிய இன்னொரு நூல் “உபதேச உந்தியார்'. அவர் இயற்றிய மற்ற நூல்கள் 'குருவாசகக் கோவை', 'உள்ளது நாற்பது', 'உபதேச உந்தியார்' ஆகிய மூன்றும் 'ஸ்ரீ ரமண பிரஸ்தான த்ரயம்' என்று ரமண அடியார்களால் அழைக்கப்பட்டன. முருகனார் பின்னால் இயற்றிய ’ரமண சந்நிதி முறை’ என்ற நூலில் 'ரமண புராணம்' என்ற பகுதியில் பெருமளவும் ரமணர் இயற்றிய வரிகளே உள்ளன. ரமணர் இயற்றிய பல்வேறு நூல்களும் அடங்கிய 'ரமண நூற்றிரட்டு' என்ற தொகுப்பில் முருகனார் இயற்றிய சில பாடல்களை ரமணர் சேர்த்துள்ளார். இவ்வாறு பாகுபாடு இல்லாமல் குரு ரமணரும் முருகனாரும் இயைந்து கவிகள் புனைந்தனர்.

கண்ண முருகனார் 'ஸ்ரீரமண சந்நிதி முறை', 'ஸ்ரீரமண தேவமாலை', 'ஸ்ரீரமண சரணப்பல்லாண்டு' முதலிய தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். ஆன்மீக அனுபவ நூல்களாக 'ஸ்ரீரமண அனுபூதி' (15௦௦ பாடல்கள்), 'ஸ்ரீரமண ஞானபோதம்' (14,000 பாடல்கள்) ஆகியவற்றையும் படைத்தார். 'ரமண ஞான போதம்' ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டது. ரமண மகரிஷி 1950-ல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகாலம் முருகனார் வாழ்ந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாக்களை இயற்றினார். கடைசி ஆண்டுகளில் ரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து பக்தர்களுக்கு விளக்கங்கள் அளித்தார். அவரளித்த விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ரமண பக்தரான டி.ஆர். கனகம்மாள் ரமண நூற்றிரட்டுக்கு உரை இயற்றினார். அந்த அடிப்படையிலேயே “ஒழிவில் ஒடுக்கம்” என்ற வேதாந்த நூலுக்கு விளக்கவுரை வெளியிடப்பட்டது.

கையெழுத்துப் படியாக இருந்த முருகனாரின் பாடல்களை ரமணபாதானந்தாவும், கே. சுவாமிநாதனும் நூலாக்கும் முயற்சியை மேற்கொண்டனர். முருகனாரின் நூல்கள் 'சாது ஓம் தோத்திரம்', 'சாத்திரம்', 'சுவானுபவம்' என மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.

ஆன்மிக/பண்பாட்டு இடம்

“ஸ்ரீ ரமண சித்தாந்தத்தை அதன் இயல்வடிவிலேயே விரிவாக விளக்கப்போந்த நூல்” என்று ரமண மகரிஷி 'குருக்கோவை' நூல் பற்றி குறிப்பிட்டார். “உலகம் அறிய வேண்டிய சகலவித ஆன்ம போதனாவிரகசியங்களின் விளக்கங்களும் ரமணோபதேசம் நூலொன்றும் வேண்டுமாயின் அது குருவாசகக்கோவையே” என சாது ஓம் மதிப்பிட்டுள்ளார். மு. இராகவய்யங்கார், உ.வே. சாமிநாதய்யர், வ.சு. செங்கல்வராயபிள்ளை, சுத்தானந்த பாரதியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சச்சிதானந்தம்பிள்ளை ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றார்.

மறைவு

முகவைக் கண்ண முருகனார் ஆகஸ்டு 28, 1973-ல் காலமானார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் உள்ளது.

நினைவு

ராமநாதபுரத்தில் பிறந்த முகவைக் கண்ண முருகனாரின் இல்லம் 'ஸ்ரீமுருகனார் மந்திரம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு ரமண பக்தர்கள் வணங்கும் புனிதத் தலமாக மாற்றப்பட்டது.

நூல்கள் பட்டியல்

  • ஸ்வதந்திர கீதங்கள் (1918)
  • ஸ்ரீரமண சந்நிதி முறை
  • ஸ்ரீரமண தேவமாலை
  • ஸ்ரீரமணாபூதி
  • ஸ்ரீரமணா ஞான போதம்
  • குருவாசக கோவை
  • சரண பல்லாண்டு

உசாத்துணை


✅Finalised Page