under review

மா.ரா. அரசு

From Tamil Wiki
மா.ரா. அரசு

மா.ரா. அரசு (மா. ராசமாணிக்கனார் அரசு) (அக்டோபர் 31, 1950 - செப்டம்பர் 06, 2020) எழுத்தாளர், இதழியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மா. ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மைய நிறுவனர். மா.ரா. அரசுவின் நூல்கள், தமிழக அரசால், 2024-ல் நாட்டுடைமை செய்யப்பட்டன.

முனைவர் மா.ரா. அரசு

பிறப்பு, கல்வி

மா.ரா. அரசு, அக்டோபர் 31, 1950 அன்று, சென்னையில், மா. இராசமாணிக்கனார் - கண்ணம்மாள் இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஏழுபேர். பேராசிரியரும், இதழியல் ஆய்வாளருமானா மா.ரா. இளங்கோவன் மற்றும் கல்வெட்டு ஆய்வாளரும் வரலாற்றாய்வாளருமான இரா. கலைக்கோவன், அரசுவின் மூத்த சகோதரர்களாவர். மா.ரா. அரசு, 1975-ல் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து வ.உ. சிதம்பரம் பிள்ளையின் படைப்புகள், பணிகள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மா.ரா. அரசு, காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் திருத்துநராகப் (Tutor) பணியில் சேர்ந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையில் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூரில் உள்ள கரந்தை உமா மகேசுவரனார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மணமானவர். மனைவி, திரிபுரசுந்தரி. இவர்களுக்கு ஒரு மகன்; ஒரு மகள்.

மா.ரா. அரசு நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

மா.ரா. அரசு, தமிழறிஞரும், ஆய்வாளருமான தனது தந்தை மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். தனது மூத்த சகோதரர் மா.ரா. இளங்கோவன் மூலம் இதழியலில் ஆர்வம் பெற்றார். அத்துறை சார்ந்து பல நூல்களை எழுதினார். இதழியல், தமிழியல் என்று பரந்து பட்ட துறைகளில் பல்வேறு விதங்களில் பங்களித்தார்.

மா.ரா.அரசு, 'வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். சாகித்ய அகாதமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வ.உ.சி. பற்றிய நூலை எழுதினார். மா.ரா. அரசுவின் முனைவர் பட்ட ஆய்வேடான 'வ.உ.சி வளர்த்த தமிழ்' நூலாக வெளியாகி கவனம் பெற்றது.

வ.உ.சி. யின் படைப்புகள் பற்றி மிக விரிவாக ஆராய்ந்தார். திலகர் பற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய இலங்கை வீரகேசரி இதழ் கட்டுரைகளைத் தேடிப் பதிப்பித்து நூலாக வெளியிட்டார்.

குடும்பத்தினருடன் மா.ரா. அரசு

அமைப்புச் செயல்பாடுகள்

மா.ரா. அரசு, 1983-ல், 'மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம்' என்ற அமைப்பை நிறுவினார். சென்னைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள் எனப் பல்வேறு இதழியல் கருத்தரங்குகளை நடத்தினார். கருத்தரங்குக் கட்டுரைகளை நூல்களாக வெளியிட்டார். மாணவர்கள் பலரை ஊக்குவித்து அவர்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார்.

இதழியல்

மா.ரா. அரசு, 'இளமையின் குரல்', 'கொறிப்பு' என்னும் இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

விருது

  • இதழியல் இமயம் பட்டம்

மறைவு

மா.ரா. அரசு, செப்டம்பர் 06, 2020 அன்று காலமானார்.

நினைவு

பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசுவின் நினைவாக, 2021-ல், 'பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு அறக்கட்டளை' என்ற அமைப்பு, டாக்டர் இரா.கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் மூலம் இளம் ஆய்வாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு இலக்கியப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டுடைமை

மா. ரா. அரசுவின் நூல்களைத் தமிழக அரசு, 2024-ல் நாட்டுடைமை செய்தது. மரபுரிமையர்க்கு ரூபாய் பத்துலட்சம் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

மதிப்பீடு

மா. ரா. அரசு, தமிழ்ப் பேராசிரியர். மாணவர்கள் பலர் முனைவர் பட்டம் பெறவும், பேராசிரியர்களாக, எழுத்தாளர்களாக ஆகவும் வழிகாட்டியவர். இதழியலில் தேர்ந்த அறிஞர். விடுதலைக்கு முந்தைய இதழ்களின் தொகுப்பை வெளியிட்டார். எழுத்தாளர், கல்வியாளர், ஆய்வாளர், இதழியலாளர், சொற்பொழிவாளர், பதிப்பாசிரியர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • வ.உ.சி.
  • வ.உ. சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள்
  • வ.உ.சி. வளர்த்த தமிழ்
  • இராஜாஜியின் விமோசனம் இதழ்கள் தொகுப்பு
தொகுப்பு நூல்கள் (முனைவர் இ. சுந்தரமூர்த்தியுடன் இணைந்து தொகுத்தது)
  • இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள்
  • திராவிட இயக்க இதழ்கள்
  • தமிழ் ஆய்வு இதழ்கள்
  • பொதுவுடைமை இயக்க இதழ்கள்
  • மகளிர் இதழ்கள்
  • இலக்கிய இதழ்கள்
பதிப்பாசிரியர்
  • பயணம் தொடர்கிறது

உசாத்துணை


‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2026, 12:08:10 IST