under review

மார்ச் 8 (கள ஆய்வு நூல்)

From Tamil Wiki
மார்ச் 3.jpg

மார்ச் 8 (2006), மலேசியாவில் நடந்த ஓர் கலவரத்தைப் பற்றிய கட்டுரை நூல். மார்ச் 8, 2001 முதல் மார்ச் 23, 2001 வரை தாமான் மேடான் வட்டாரத்தில் மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் நடந்த கலவரம் தொடர்பான ஆவணங்களையும் கள ஆய்வுத்தகவல்களையும் திரட்டி முனைவர் சு. நாகராஜன் எழுதிய ஆங்கில ஆய்வேட்டுப் பக்கங்களையும் பிற ஆதாரங்களையும் கொண்டு கா. ஆறுமுகம் தொகுத்திருக்கும் நூல் இது.

பதிப்பு

மார்ச் 8 , செம்பருத்தி பதிப்பகத்தால் 2006-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. 98 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 11 அத்தியாயங்களைக் கொண்டது.

உரைகள்

மார் 8 நூலுக்கு பசுபதி சிதம்பரம் அறிமுக உரை வழங்கியுள்ளார். கா. ஆறுமுகம் ஆசிரியர் உரை எழுதியுள்ளார்.

நூல் ஆசிரியர்கள்

முனைவர் சு. நாகராஜன்
Kampung medan.jpg

முனைவர் சு. நாகராஜன் ஒரு சமூகவியல் ஆய்வாளர். இவர் தனது முனைவர் பட்டப் படிப்புக்காகச் சமர்ப்பித்த ஆய்வு நூலின் ஐந்தாவது அத்தியாயம் கம்போங் மேடான் வன்முறை பற்றியது. அதிலுள்ள பெரும்பான்மையான தரவுகள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கா. ஆறுமுகத்தால் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

கா. ஆறுமுகம்
கா. ஆறுமுகம்

கா. ஆறுமுகம் இச்சம்பவம் நடந்த வட்டாரமான கம்போங் காந்தியில் பத்து வருடங்களாக வாழ்ந்தவர். பொறியியல் நிபுணரான இவர், சட்டத்துறையிலும் பட்டம் பெற்றுள்ளார். ஆய்வுக்கட்டுரைகளோடு புனைவு எழுத்துகளில் ஆர்வம் கொண்டுள்ள கா. ஆறுமுகம் ஒரு சமூக செயல்பாட்டாளர்.

கலவரப் பின்னணி

மார்ச் 4, 2001 அன்று அதிகாலை மணி மூன்றுக்கு கம்போங் வங்காளியில் மாரடைப்பால் இறந்த 51 வயது மூதாட்டி ஒருவரின் நல்லடக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சுமார் 150 மீட்டர் தொலைவில் ஓர் இஸ்லாமியர் குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. பிரதான சாலையை மறைத்து கூடாரம் அமைத்திருந்த இஸ்லாமியர் குடும்பத்துடன் ஓர் இந்திய இளைஞன் தகராறு செய்துவிட்டு தப்புகிறான். இது இரு இன மக்களுக்கும் இடையிலான சிறிய தகராறுகளை உருவாக்குகிறது.

மார்ச் 8, 2001-ல் இரு இந்தியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒரு மலாய்க்காரர் தலையிட்டு தீர்க்க முயல அது பிற மலாய் இளைஞர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மலாய்க்காரர் தாக்கப்படுகிறார் என அவர்கள் புரிந்துகொண்டு பின்னர் தெளிவடைகின்றனர். ஆனால் மார்ச் 8, 2001 அன்று இரவு தாமான் டேசாரியா, தாமான் மேடான், கம்போங் காந்தி, தாமான் லிண்டோங்கான், தாமான் டத்தோ ஹருண் ஆகிய பகுதிகளில் பிரதான சாலைகளில் சென்ற இந்தியர்கள் மலாய்க்காரர்களால் தாக்கப்படுகின்றனர். போலிஸ்காரர்கள் ஊரடங்கை அறிவிக்காததால் மார்ச் 23, 2001 வரை வெவ்வேறு தினங்கள் இத்தாக்குதல்கள் தொடந்தன.

நூல் உள்ளடக்கம்

1. பாதிப்படைந்த சிலரின் நேர்காணல் தொகுப்பு

பாதிப்படைந்த பத்து பேருடைய அனுபவங்கள் இப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்துப்பேரும் சம்பவத்தின் நேரடி சாட்சிகளாக தங்கள் அனுபவத்தைக் கூறியுள்ளனர்.

2. வன்முறைக்கு முன்னால் நடந்தவை

மார்ச் 4, 2001 முதல் மார்ச் 8, 2001 தாக்குதல் நடக்கும்வரை தாமான் மேடான் பகுதியில் நடந்த சம்பவங்களில் தகவல்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

3. மார்ச் 8, 2001

மார்ச் 8, 2001-ல் எவ்வாறு தாக்குதல் தொடங்கியது அது எவ்வாறு மார்ச் 23, 2001 வரை தொடர்ந்தது என விவரிக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களின் விபரமும் இதில் இடம்பெற்றுள்ளது.

4. கம்போங் மேடான் வரலாறு

இப்பகுதியில் ஈயம் இருப்பது கண்டறியப்பட்டபிறகு இரண்டு நிறுவனங்கள் சிலாங்கூர் அரசிடமிருந்து 1940-ல் குத்தகை எடுத்ததில் இருந்து கம்போங் மேடான் வரலாறு தொடங்குகிறது. ஈயம் தீர்ந்த பகுதிகளில் எவ்வாறு இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் குடியேறினார்கள் என ஆண்டுவாரியாக விளக்குகிறது. மே 13 கலவரத்துக்குப் பிறகு அந்தக் குடியிருப்பில் நடந்த மாற்றங்களையும் இப்பகுதியில் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.

5. எழுந்த எதிரொலிகள்

இந்தக் கலவரத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் இது குறித்து சமுதாய தலைவர்கள், அரசு சாரா அமைப்புகள், எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.

6. பாதிக்கப்பட்ட மக்களின் நிலையும் நிவாரணமும்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம், கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை வழங்கிய உதவிகள் குறித்தும் அம்மக்களின் நிலை குறித்து இப்பகுதி விளக்குகிறது.

7. வன்முறை பற்றிய ஓர் ஆய்வு

இந்நிலைக்கு பின்னால் உள்ள அரசியல், பொருளாதார, சமூகவியல் காரணங்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன.

8. வேலியே பயிரை மேய்ந்ததா

போலிஸ்காரர்கள் இந்தியர்களைக் கைது செய்தும் ஆயுதத்துடன் இருந்த மலாய்க்காரர்களை கண்டுக்கொள்ளாமலும் இருந்த பாராபட்ச சூழல் இப்பகுதியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கலவரத்தை நிறுத்த போலிஸ் தீவிரமாக செயல்படாதது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

9. பாதிப்புக்குள்ளான சிறுபான்மை இனம்

பாதிப்புக்கு முன்னரும் பிறகும் இப்பகுதியில் வாழும் சிறுபான்மை இந்தியர்கள் எதிர்க்கொள்ளும் வாழ்வியல் சவால்கள் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது.

10. இனவாத பயம்

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நடந்த இனங்களுக்கிடையிலான தாக்குதல்களை இப்பகுதி விவரிக்கிறது.

11. படிப்பினைகள்

இந்த வன்முறையை மனதில் கொண்டு மலேசிய இந்தியர்கள் மனதில் கொள்ள வேண்டிய படிப்பினைகள் குறித்து இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை

மார்ச் 8 நூலுக்கு டிசம்பர் 28, 2006-ல் மலேசிய அரசால் தடைவிதிக்கப்பட்டது.

நூலின் முக்கியத்துவம்

மார்ச் 8, இன துவேஷத்தை உருவாக்காமல் இரு இனங்களுக்கிடையில் உருவாகும் பதற்றமான மனநிலைக்குக் காரணமாக உள்ள அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அதை பயன்படுத்தும் கட்சி அரசியல் சுழலையும் விவரிக்கிறது. சூழலை சமநிலையுடன் அணுகி இன ஒற்றுமைக்கு தேவையான அக - புற சூழலை இந்நூல் பேச முயல்கிறது. அரசாங்கம் தன் லாபத்துக்கு நிகழ்த்தும் மாற்றங்கள் நாளடையில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய்கிறது.

உசாத்துணை


✅Finalised Page