under review

கா. ஆறுமுகம்

From Tamil Wiki
கா. ஆறுமுகம்

கா. ஆறுமுகம் (அக்டோபர் 1, 1958) மலேசியத் தமிழ் சமூகப் போராளி. சமுதாய நலனுக்காகப் பல திட்டங்களை முன்னெடுத்தார். இவர் எழுதித் தொகுத்த மார்ச் 8 மற்றும் நவம்பர் 25 ஆகிய நூல்கள் மலேசியத் தமிழர்களின் இக்கட்டான போராட்ட வரலாற்றை பதிவு செய்துள்ளன.

பிறப்பு, கல்வி

கா. ஆறுமுகம் அக்டோபர் 1, 1958 அன்று காப்பாரில் உள்ள ஜாலான் ஆகோப் எனும் இடத்தில் பிறந்தார். அப்பா காளிமுத்து. அம்மா பெருமாயி. ஏழு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஆறுமுகம் ஆறாவது பிள்ளை. அப்பா தோட்டக்காரர். அம்மா ரப்பர் மரம் சீவும் தொழிலாளி.

கா. ஆறுமுகம் தனது ஆரம்பக் கல்வியை 1965-ல் காப்பாரில் உள்ள ஜாலான் ஆக்கோப் தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். 1974-ல் படிவம் மூன்று வரை காப்பார் இடைநிலைப்பள்ளியில் பயின்று பின்னர்( 1975 - 76) கத்தோலிக் மேல்நிலைப்பள்ளியில் படிவம் ஐந்துவரை தொடர்ந்தார்.படிவம் ஆறை கோலாலம்பூரில் உள்ள சென் ஜான் கல்விக்கூடத்தில் ( 1978 - 79 ) கற்றார்.

தொடர்ந்து மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் 1983-ல் பொறியியல் படிப்பை முடித்தார், 1987-ல் நிபுணத்துவ பொறியிளாலராக தேர்வு பெற்றார். தொடர்ந்து 1995-ல், கா. ஆறுமுகம் 'University of Strathclyde' பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றார். சட்டத்துறையில் கொண்ட ஆர்வத்தால் கா. ஆறுமுகம் 2002-ம் ஆண்டு முதல் மலாயா பல்கலைக்கழகத்தில்சட்டம் பயின்று. 2006-ல் வழக்கறிஞரானார்.

தொழில், குடும்பம்

ஆறுஃப்ஃப்.jpg

1983-ம் ஆண்டு ஒரு கட்டடவியல் பொறியியலாராகப் பணியில் சேர்ந்தவர் 2007-ம் ஆண்டு வரை நிபுணத்துவ சிவில் என்ஜினியராக பணியாற்றினார். 2007-ம் ஆண்டு முதல் ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

1988-ல் நவமணி கிருஷ்ணன் என்பவரை மணந்த இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்,

பொது வாழ்க்கை

இடைநிலைப்பள்ளியில்

இடைநிலைப்பள்ளியில் பயின்றபோதே கா. ஆறுமுகம் போராட்ட உணர்வு கொண்டிருந்தார். இந்திய மாணவர்களை 'பறையன்' என வசை மொழியில் அழைக்கும் பள்ளி முதல்வருக்கு மறுப்பு சொல்லும் வகையில் வகுப்பில் நுழையாமல் இருத்தல், சீன மொழியில் நடந்த சபைக்கூடலை பிறமொழி மாணவர்கள் நலன் கருதி மாற்றியமைக்கச் செய்தல், இடைநிலைப்பள்ளி நூலகத்தில் தமிழ் நூலகமும் தமிழ் மொழிக்கழகமும் அமைய குரல் எழுப்புதல் எனத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டார்.

பல்கலைகழகத்தில்

மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேரவையின் கீழ் 'மாணவர் சமூக நலன்' எனும் திட்டம் இருந்தது. அதன் மூலம் 1982 ல் பகாங் கராக் அருகில் உள்ள சபாய் தோட்டத்தில் சக நண்பர்களோடு கா. ஆறுமுகம் தங்கினார். அங்கு உள்ள மக்களின் சமகால சிக்கலை ஆராய அவர்களோடு காலையில் வேலைக்குச் சென்று அவர்களது வாழ்வை வாழத்தொடங்கினார். அவரது செய்கை குழுவினருக்குப் பிடிக்காததால் கா. ஆறுமுகம் வெளியேற்றப்பட்டார். பின்னர் தனியாக லஞ்சாங் டிவிஷன் 2 தோட்டதிற்கு சென்று அங்கு தனது சமூக ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

தன்னார்வ தொண்டூழியக் கல்விக்குழு

1982-ம் ஆண்டில், சக இளங்கலைப் பட்டதாரிகள் மற்றும் நண்பர்களின் இணைவில் தன்னார்வ கல்விக் குழு (Voluntary Tuition Coordination Group) ஒன்றை உருவாக்கி இடைநிலை பள்ளியில் பயிலும் தோட்டப்புற மற்றும் புறநகர் இந்திய மாணவர்களுக்கு உதவினார். 1983-ல், கா. ஆறுமுகம் கல்வி நலன் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (EWRF) நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனால் மேற்கு மலேசியா முழுவதும் அமைந்துள்ள 35 சமூக அடிப்படையிலான தன்னார்வ தொண்டூழியக் கல்விக்குழு மையங்களுக்கு பொறுப்பேற்றார்.

சைல்ட்

1984-ம் ஆண்டில், குழந்தைத் தகவல் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் (CHILD MALAYSIA) நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகப் பொறுப்பேற்றார். இதன்வழி தோட்டங்கள் மற்றும் குடியேற்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வியை வழங்குவதில் ஈடுபட்டார். கா. ஆறுமுகம், 1988-1995 வரை மேற்கு மலேசியாவில், ஐந்து இயக்கங்களின் வழி 122 பாலர் பள்ளிகளை ஒருங்கிணைத்தார்.

தோட்டத் தொழிலாளர் வாழ்வாதாரம்
Arumugam.jpg

1994, 1995-ம் ஆண்டுகளில், சக நண்பர்களுடன் 'தோட்டத் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஊதியம் மற்றும் நலத்திட்டங்கள்' என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கா. ஆறுமுகம். காலனித்துவ காலத்திலிருந்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு தினசரி கூலி எனும் முறையின் ஊதியம் வழங்கப்பட்டது. இது தோட்டத் தொழிலாளர்களை வறுமையின் பிடியில் சிக்க வைத்ததுடன் கடன் சுமையும் உண்டனது. மேலும் தோட்டங்கள் தனியாரிடம் இருந்ததால், கிராம அபிவிருத்தி அமைச்சின் நலத்திட்டங்கள் எதுவும் தோட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை. தோட்ட மக்களிடையே விழிப்புணர்ச்சி உருவாக்க 'வேரைத்தேடி' என்ற வரலாற்று கதையை (மைக்கல் ஸ்டென்சன் நூலை அடிப்படையாக கொண்டது) slide show வழி தோட்டப்புறங்களிலும் மாணவர்களிடமும் பகிர்ந்தார். 1993-ல் சக நணபர்களுடன் இணைந்து 'ஒதுக்கப்படும் சமுதாயம் – நமது அர்ப்பணிப்புக்கு எப்போதுதான் அங்கீகாரம்' என்ற கார்டூன் புத்தகத்தை வெளியிட்டார். 1994-ம் ஆண்டில், தோட்டத் தொழிலாளர் வாழ்வாதாரப் பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரி, பத்துமலை முதல் மரத்தாண்டவர் ஆலயம் வரை 240 கிலோமீட்டர் தூர நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தார் கா. ஆறுமுகம். அந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களை வழி நெடுக சந்தித்து ஒன்று திரட்டினார். மாதாந்திர ஊதிய முறையைக் கோரிய இந்தப் பிரச்சாரம், காஜாங்கில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட சமூக மேம்பாட்டு மையத்துடன் இணைந்து நாடு தழுவிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர்

கா. ஆறுமுகம் குழந்தைத் தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து, மலாயா பல்கலைகழகத்தில் பிப்ரவரி 13, 1993 -ல் நடந்த மலேசியாவில் குழந்தைத் தொழிலாளர் பற்றிய முதல் தேசிய கருத்தரங்கின் தலைவராகத் திகழ்ந்தார். அதன் அடிப்படையில், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குழந்தை தொழிலாளர்களுக்கான தேசிய பணிக்குழுவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். பணிக்குழுவின் முக்கிய முடிவு ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான அரசாங்கத்தின் கொள்கை சீர்திருத்தமாக இருந்தது. 2003-ல் அரசாங்கம் ஆரம்ப கல்வியைக் கட்டாயமாக்கியது.

இன ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்பாடுகள்

தமிழ்ப்பள்ளிகள் மேல் உள்ள புறக்கணிப்பும் தாமான் மேடான் கலவரத்தில் நடந்த இனவாதமும் 1996 முதல் 2000 வரை கா. ஆறுமுகத்தின் செல்திசைகளைத் தீர்மானித்தன. இக்காலக்கட்டத்தில் சிறுபான்மை இனமாக இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியர்களின் ஒருங்கிணைக்கும் அரசு சாரா மன்றத்தை உருவாக்கினார். இனவெறி தொடர்பான உரையாடல்களில் பங்கேற்றதுடன் இனவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். ஈரானின் தெஹ்ரானில் இனவெறி, இனப் பாகுபாடு, இனவெறி மற்றும் தொடர்புடைய சகிப்புத்தன்மைக்கு எதிரான ஆசிய தயாரிப்புக் கூட்டத்தில் பிரதிநிதியாக கலந்துகொண்டார். கொள்கை மாற்றங்களுக்காக வாதிடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியர்களுக்கான லாபி குழுவான அக்கறையுள்ள குடிமக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பங்கெடுத்தார். இக்குழுவின் வழி இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைக் கேட்க ஒரு தேசிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். 1999-ல் ‘சிறந்த எதிர்காலத்திற்கான இந்திய மலேசியர்களின் கோரிக்கைகள்’ என்ற ஆவணத்தை இக்குழுவில் இணைந்து வெளியிட்டார்.

2006-ல் இந்திய மலேசியர்களைப் பாதிக்கும் கொள்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசு சாரா குழுக்களுடன் இணைந்து உரையாடலைத் தொடங்கினார். ஹிண்ட்ராப் போராட்டத்திற்குப் பிறகு 122 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அடங்கிய கூட்டணி அரசாங்கத்துடன் உரையாடுவதற்கான ஒரு மன்றமாக உருவானது. ஆறுமுகம். அதில் இணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு உரிமைகள் சார்ந்த செயல்பாடுகளை ஒழுங்கமைத்து தேர்தல் செயல்பாட்டிலும் ஈடுபட்டார்.

2008-ம் ஆண்டின் தேர்தலுக்குப் பிறகு, வழிபாட்டுத் தலங்கள், தமிழ்ப் பள்ளிகள், வேலை வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள் மற்றும் குடியுரிமை ஆகியவற்றுக்கான தரவுகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகளுடன் குழு உரையாடல்களை ஏற்பாடு செய்தார் கா. ஆறுமுகம். சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவுவதற்காக அரசின் நிதியுதவி திட்டத்தில் 3 பெரிய அரசு சாரா நிறுவனங்களின் குழுவை ஒருங்கிணைத்தார்.

முனைப்புகள்

2000-ல் தோட்ட மற்றும் நகர்ப்புற பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பயிற்சி மற்றும் சேவைகளை வழங்குவதற்காக 'குழந்தைகள் வளர்சிக்கான முனைப்பு’ என்ற அமைப்பை கா. ஆறுமுகம் உருவாக்கினார். இதன் வழி தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளுக்கான குழந்தை உரிமைகள் மாநாடு குறித்த பயிற்சி அமர்வுகளைக் கா. ஆறுமுகம் தொடங்கினார். அதே காலக்கட்டத்தில் 'இளந்தளிர்' என்ற மாத சிறார் இதழ் உருவாகவும் வெளியீடு காணவும் பங்காற்றினார்.

மாநாடுகள்
  • டிசம்பர் 4-7, 2002 தேதிகளில் தாய்லாந்தில் நடந்த 'சிறுபான்மையினர் உரிமைகள்: தென்கிழக்கு ஆசியாவில் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் மேம்பாடு' குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
  • மே 5 - 16, 2003 தேதிகளில் ஜெனீவாவில் நடைபெற்ற சிறுபான்மை உரிமைகள் பயிற்சித் திட்டத்தில் (சிறுபான்மை உரிமைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது) பங்கேற்றார்.
  • மே 12, 2003-ல் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாட்டு சபபையின் ‘சிறுபான்மையினரின் பாதுகாப்பும் மேம்பாடும்’ என்ற அமர்வில் பங்கெடுத்தார். அதில் மலேசிய அரசாங்கம் ஆரம்ப பள்ளிகளில் நடைமுறைப்படுத்த இருக்கும் இருமொழி பாடத்திட்டம், அனைத்துலக தரவுகள் அடிப்படையில் விமர்சனதிற்குறியது என்றும் அது சிறுபான்மையினரின் தாய்மொழியை அழிக்க அரசு மேற்கொள்ளும் வழிமுறை என்றும் வாதிட்டார்.
  • செப்டம்பர் 12-15,2002 தேதிகளில் ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் ‘மனித உரிமைகள், சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி, அரசு சாரா அமைப்புகளுக்கான முன்னோக்குகளை இலக்கு வைப்பது’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்றார். அதில் மலேசிய அரசமைப்பு முறை இனவாத அடிப்படையில் உள்ளதால் மக்களின் ஒற்றுமையை மையப்படுத்த ஆக்கபூர்வமான விமர்சனம் அவசியம் என்றும், இனவாத கொள்கைகளுக்கு பதிலாக தேவைகளின் அடிப்படையில் பொருளாதார கொள்கைகள் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

பேரணிகள்

Essay1a.jpg
  • தமிழ்ப் பள்ளிகளில் (இந்திய மலேசியர்களிடையே உள்ள ஏழைக் குழந்தைகளுக்குப் பயன்படும்) அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குக் கற்பிப்பதால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களை எடுத்துக்காட்டும் வகையில் அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்தார்.
  • 2011 முதல் 2013 வரை தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அரசு சாரா அமைப்புகளின் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெர்சே 2.0 இன் வழிநடத்தல் குழு உறுப்பினராக இருந்தார். பெர்சே பேரணியில் பங்கெடுத்து கைது செய்யப்பட்டார்.

இதழாசிரியர்

  • செம்பருத்தி ஆசிரியர் குழு (1998-2011)
  • இளந்தளிர் ஆசிரியர் (2000-2013)
  • மலேசியா கினி (தமிழ்) – (2011)

அரசு சாரா அமைப்புகள்

  • மலேசிய மக்களின் குரல் (SUARAM) எனும் மனித உரிமை நடவடிக்கை குழுவில் ஈடுபட்டு 2008-2013 வரை செயலகத்தின் தலைவராக இருந்தார் கா. ஆறுமுகம். தற்போது அதன் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.
  • 2009 - 2013 வரை பாங்காக்கை தளமாகக் கொண்ட ஃபோரம் ஆசியா (Forum Asia) என்ற பிராந்திய மனித உரிமை அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முறை நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
  • மலேசிய தமிழ் கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் உறுப்பினராகவும் செயலாளராகவும் செயற்குழு உறுப்பினராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
  • தற்போது பல்லின மலேசிய செயல்பாட்டுக் கூட்டணியின் (Gabungan Bertindak Malaysia) துணைத் தலைவர்.
  • 2011 முதல் 2020 வரை லாடாங் ஜாலான் ஆகோப் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டு வாரியத் தலைவராகப் பணியாற்றினார்.
  • 2020 முதல் மலேசிய தமிழர் போரம் தலைவர்
  • 2020-ல் NationalEducation Reform Initiative - கல்வி சீரமைப்புக்கான தேசிய அமைப்பு - பல்லின மற்றும் பன்மொழி சார்ந்த 18 நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர்.
  • GPPAC நெதர்லாந்தை தளமாகக் கொண்ட ஆயுத மோதலைத் தடுப்பதற்கான உலகளாவிய கூட்டாண்மை என்ற சர்வதேச அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய வழிநடத்தல் குழுவின் நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்.

அரசாங்க பொறுப்புகள்

2008 முதல் 2013 வரை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் சுபாங் ஜெயா நகர உள்ளூர் கவுன்சிலராக நியமிக்கப்பட்டார்.

நூலுக்குத் தடை

மார்ச் 8 என இவர் தாமான் மேடான் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நூல் மலேசிய அரசால் தடைசெய்யப்பட்டது.

நூல்கள்

  • ஶ்ரீலங்கவின் கொலைக்களம் (கட்டுரை: சேனல் 4 செய்தியின் அடிப்படையிலானது) - 2012
  • மார்ச் 8 (கட்டுரை) – 2006
  • நவம்பர் 25 (கட்டுரை) – 2011
  • Sri Lankaès Killing Fields – Genocide of Tamils - 2012
  • Violence Against An Ethnic Minority in Malaysia – Kampung Medan 2001 - Co-author
  • ஒதுக்கப்படும் சமுதாயம் – 1993 – துணை ஆசிரியர்
  • The Cry – Implications of Teaching Science and Maths in English in Tamil schools -2003

இணைய இணைப்பு

கா. ஆறுமுகம் நேர்காணல் - வல்லினம்


✅Finalised Page