under review

மழைச்சாரல் இலக்கியக்குழு

From Tamil Wiki
0011.jpg

மழைச்சாரல் இலக்கியக் குழு எழுத்தாளர் வாணிஜெயம் (மீராவாணி) முன்னெடுப்பில் 2015-ல் உருவானது. இது நவீன இலக்கிய கலந்துரையாடல், மற்றும் இலக்கிய செயல்பாடுகளை நிகழ்த்த அமைக்கப்பட்ட புலனக்குழுமம்.

பின்னணி

வாசிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்களை தொடர் வாசிப்பின் வழியும் உரையாடல்கள் வழியும் நவீன இலக்கிய புரிதல்கள் நோக்கி நகர்த்துவதோடு அவர்களை எழுத ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு ஜூலை 25, 2015 அன்று இக்குழு பத்து உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் 40 பேர் உறுப்பினராக இணைந்துகொண்டனர். ஆதி. இராஜகுமாரன், அக்கினி சுகுமார், மன்னர் மன்னன், டாக்டர் ஜி. ஜான்சன், கோ. புண்ணியவான் போன்ற மூத்த இலக்கிய ஆளுமைகள் இக்குழுவுக்கு வழிகாட்டிகளாக அமைந்தனர்.

இலக்கிய முன்னெடுப்புகள்

0012.jpg

தொடக்கத்தில் புலனம் வழி மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளும் சிறந்த பிற படைப்புகளும் குழுவில் பகிரப்பட்டு கலந்துரையாடப்பட்டன. பின்னர் இலக்கியச் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

  • டிசம்பர் 27, 2015 ‘மலேசியத் தமிழ் இலக்கிய ஆளுமைகளுடன் ஒரு கலந்துரையாடல்' எனும் நிகழ்ச்சி சோமா அரங்கில் நடத்தப்பட்டது. கவிதை, நாவல், சிறுகதை, ஊடத்துறை ஆளுமைகளுடன் கலந்துரையாடலும் உரைகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அக்கினி சுகுமார், ஆதி. இராஜகுமாரன், கோ. முனியாண்டி ஆகியோரின் கவிதைகள் விவாதிக்கப்பட்டன. எம். கருணாரன், எம். சேகர், எம். துரைராஜ் ஆகியோர் நிகழ்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். ஆதி. இராஜகுமாரன் பற்றிய ‘இலக்கியத்தில் ஒரு ஞானரதம்’ தொகுப்பு நூல் இலவசமாகப் பகிரப்பட்டது.
  • ஜூலை 24, 2016 - இப்புலனக் குழுமத்தின் ஓராண்டு நிறைவையொட்டி மழைச்சாரல் குழு படைப்பாளிகளின் கவிதைகள் மூன்று மொழிகளில் தொகுப்பாகக் கொண்டு வரப்பட்டது. ‘மனத்தோடு மழைச்சாரல்’ என்ற கவிதைத் தொகுப்பில் 41 படைப்பாளர்களின் கவிதைகள் மலாயிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டன. ‘மனத்தோடு மழைச்சாரல்’ கவிதைத் தொகுப்புத் தமிழக எழுத்தாளர், கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது. அதே நிகழ்ச்சியில், ‘படைப்பிலக்கியங்களில் எழுத்து இலக்கணம்’ என்ற தலைப்பில் மன்னன் மன்னர், ‘ஹைக்கூ கவிதைகள்’ குறித்து கவிஞர் பச்சைபாலன், ‘மலேசிய இலக்கியத்தில் பெண்ணிய எழுத்து’ என்ற தலைப்பில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, ‘நவீன தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம்’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் ரங்கராஜன் ஆகியோர் உரையாற்றினார்கள். மழைச்சாரல் பெயரில் இலக்கிய விருது வருடந்தோரும் வழங்க முடிவெடுக்கப்பட்டு. அதற்கான பொறுப்பை எம்.சேகர் அவர்கள் எற்றுக்கொண்டார். ‘மழைச்சாரல் இலக்கிய விருது ஆதி. இராஜகுமாரன் அவர்களின் பெயரில் வழங்கப்பட முடிவானது. 2016-ம் ஆண்டுக்கான விருதை எம். கருணாகரன் பெற்றார்.
  • பிப்ரவரி 25, 2017 - தமிழக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுடனான கலந்துரையாடலும் சந்திப்பு நிகழ்ச்சியும் தலைநகரில் தமிழ் எழுத்தாளர் சங்க கட்டத்தில் நடத்தப்பட்டது.
  • செப்டம்பர் 18, 2017 - எழுத்தாளர் கோணங்கி அவர்களுடன் இலக்கியச் சந்திப்பு தைப்பிங் நகரத்தில் நடத்தது.
  • ஜூலை 29, 2017 மழைச்சாரலின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் ‘பத்து நூல்களின் மகத்தான வெளியீடு’ நடைபெற்றது. ஜி. ஜான்சன், வே. ராஜேஸ்வரி, துரை முனியாண்டி, சுதந்திரன், சுந்தரம்பாள் இளஞ்செல்வன், முனியாண்டி ராஜ், சரஸ்வதி வீரபுத்திரன், கி. உதயகுமாரி, மகேஸ்வரி பெரியசாமி, ஆகியோரின் கவிதை, சிறுகதைகள், குறுநாவல், பத்திகள், சுயசரிதை என பல்வேறு பட்ட படைப்புகளுடன் முப்பத்தியோரு கவிஞர்களுடன் வாணிஜெயம் நிகழ்த்திய நவீன கவிதை குறித்த நேர்காணல்கள் தொகுப்பும் 'ஈரம்' என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. சோமா அரங்கில் நூல்கள் வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
  • மே 12, 2018 - கவிஞர் சுகிர்தராணி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘மழைச்சாரலில் மயில்தோகைகள்’ என்ற அந்நிகழ்வில் 100 பெண்களை ஒன்று திரட்டி இலக்கியம் - சமூகம் சார்ந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தேறியது. அந்நிகழ்வில் மலேசிய ஊடகத் துறை, கல்வித் துறை, இலக்கியத் துறைகளில் வெற்றிப் பெற்ற பத்து பேருக்கு சாதனை பெண்கள் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • செப்டம்பர் 15, 2019-ல் தேசிய அளவில் சிறுகதை போட்டி நடத்தப்பட்டதுடன் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைகளையும் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டது. அதே நிகழ்ச்சியில் ஆதி. இராஜகுமாரனின் சிறுகதைகள் தொகுத்து புதிப்பிக்கப்பட்டன. இவாண்டு ஆதி. ராஜகுமாரன் விருது எழுத்தாளர் கே. பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.
  • பிப்ரவரி 28, 2020-ல் பா.அ.சிவத்தின் கவிதைகள் குறித்து இயங்கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வளரி பன்னாட்டு கவிஞர்கள் என்ற அமைப்புடன் இணைந்து ‘மலேசியக் கவிஞர்களைக் கொண்டாடுவோம்’ என்ற இயங்கலை நிகழ்வும் நடமாட்ட முடக்க காலத்தில் நடத்தப்பட்டன.

பங்களிப்பு

0013.jpg

வெகுஜன எழுத்தில் புழங்கும் வாசகர்களை ஒன்றுதிரட்டி வாசிப்பின் அகலத்தை விரிவுபடுத்துவதன் வழியும் தொடர் உரையாடல்கள் நிகழ்த்துவதன் வழியும் தீவிர இலக்கியம் நோக்கி நகர்த்துவதில் மழைச்சாரல் குழு தொடர்ந்து பங்காற்றி வருகின்றது. எழுத்து துறையில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பும் வழிகாட்டுதலும் வழங்குவதோடு கவிதைகள் குறித்த விவாதங்களை நிகழ்த்துவதிலும் பங்களித்து வருகின்றது.

சவால்கள்

படம்2.jpg

பல தரப்பட்ட வாசகர்களையும் ஒரே குழுவாக இயக்குவதில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்தன. தீவிர இலக்கிய முன்னெடுப்புகள், குழு உறுப்பினர்களின் புரிதல் இன்மையால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இலக்கிய படைப்புகளில், இலக்கண நேர்த்தியையும் மரபான சமூக விழுமிய ஒழுக்கங்களையும், பரப்பியல் கருத்துகளையும் வழியுறுத்திய பல வாசகர்களும் எழுத்தாளர்களும், முரண்பட்டு விலகிக் கொண்டனர். கருத்து முரண்பாடுகளால் பலர் குழுவில் இருந்து விலகிக் கொண்டாலும் மழைச்சாரல் சிறு குழுவாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.

இணைய இணைப்பு


✅Finalised Page