under review

மலேசிய பாரதி தமிழ் மன்றம்

From Tamil Wiki
லோகோ.png

மலேசிய பாரதி தமிழ் மன்றம் மலேசியாவில் இயங்கும் ஓர் அமைப்பு. பல்வேறு துறைகளில் தங்களின் பங்களிப்பைச் செய்தவர்களை அடையாளம் கண்டு சிறப்பிப்பதோடு அவர்களின் வரலாற்றையும் ஆவணப்படுத்தும் நோக்கில் இவ்வமைப்பு இயங்குகிறது.

தோற்றம்

இந்திய சமுதாயத்திற்கு கல்வித்துறை, இலக்கியம், இசைத்துறை, ஊடகத் துறை, நீதித்துறை, அரசியல், வாணிபம் எனப் பலதுறைகளில் பங்களிப்பினை வழங்கிய ஆளுமைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே சிறப்பித்து, அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பதிவுசெய்திட இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. பாரதி தமிழ் மன்றம் என்ற பெயரில் 2015-ல் பதிவு பெற்ற அரசு சாரா இயக்கமாகத் தொடங்கியது.

டத்தோ சகாதேவன் மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் புரவலராகவும் டத்தோ ஆ. சோதிநாதன் மன்றத்தின் மதியுரைஞராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2018-லிருந்து டத்தோ ரெனா. துரைசிங்கம் புரவலராக இருந்துவருகின்றார்.

மலேசிய பாரதி தமிழ் மன்றத் தலைவர்

தியாக.png

மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் முதல் தலைவர் ஆர். தியாகராஜன். இவர் பல ஆண்டுகள் ஆசிரியராகவும் பின்னர் ஜொகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராகவும் பணியாற்றி பணிஓய்வு பெற்றவர்.

செயல்பாடுகளும் திட்டங்களும்

  • மலேசியாவில் சிறந்த பங்காற்றிய முத்தமிழ்ச் சான்றோர்களை அடையாளம் கண்டு அவர்களைச் சிறப்பித்து அங்கீகாரம் வழங்குதல். அவர்களின் உரையினைக் காணொளியாகப் பதிவு செய்தல்.
  • பதிவு செய்யப்பட்ட ஆளுமைகளின் உரையை நூலாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியை மேற்கொள்ளுதல்.
  • நூல்களை நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், பல்கலைக் கழகங்களுக்கு வழங்குதல். இதன்வழி நமது சான்றோர்களை அறியவும் அவர்களின் வரலாற்றினைத் தெரிந்து கொள்ளவும் இளைய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல்.
  • நூல்களை மொழியாக்கம் செய்து மலேசிய பழஞ்சுவடிக் காப்பகத்தில்வைத்தல்.

நடவடிக்கைகள்

முத்தமிழ்ச் சான்றோருக்கு வணக்கம் செய்வோம்
நூ;.png

மலேசிய பாரதி தமிழ் மன்றம் மே 17, 2015 தொடங்கி செப்டம்பர் 17, 2018 வரை முப்பத்தேழு ஆளுமைகளைச் சிறப்பித்திருக்கின்றது. மலேசியாவின் மூத்த பத்திரிக்கையாளர் எம். துரைராஜ் முதல் சான்றோராகவும் சுப.நாராயணசாமி இரண்டாவதாகவும் சிறப்பிக்கப்பட்டனர். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சுணக்கமடைந்திருந்த இந்நடவடிக்கை மீண்டும் 2022-ல் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. முப்பது மூன்று ஆளுமைகளின் வரலாறுகள் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக 'மலேசிய முத்தமிழ்ச் சான்றோர்கள்' எனும் தலைப்பில் வெளியீடு கண்டுள்ளது.

இதர நடவடிக்கைகள்

மலேசிய பாரதி தமிழ் மன்றம் தங்களின் பணியை கோலாலம்பூரிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பாரதி நினைவு நாளையொட்டி பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசளித்தது. மலேசிய பாரதி தமிழ் மன்றம் தொடங்கியதிலிருந்து ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதத்தில் கோலாலம்பூரிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் பாரதி நினைவுநாள் பல்வேறு அங்கங்களுடன் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

உசாத்துணை

  • மலேசிய முத்தமிழ்ச் சான்றோர்கள் (2 தொகுதிகள்), 2019 , உமா பதிப்பகம், கோலாலம்பூர்


✅Finalised Page