under review

மருதூர் அரங்கராசன்

From Tamil Wiki
ரங்கராஜன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரங்கராஜன் (பெயர் பட்டியல்)
மருதூர் அரங்கராசன் (நன்றி:https://muelangovan.wordpress.com/)

மருதூர் அரங்கராசன் (பிறப்பு: டிசம்பர் 12, 1952) தமிழறிஞர், ஆய்வாளர். முனைவர் பொற்கோவின் மாணவர்.மரபிலக்கணத்தையும் மொழியியலையும் இணைத்து ஆய்வுகளை நடத்தி, இலக்கண நூல்களை எழுதினார். அரங்கராசன் எழுதிய யாப்பறிந்து பாப்புனைய தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 -ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.

பிறப்பு,கல்வி

மருதூர் அரங்கராசன் அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952 அன்று கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை இணையருக்கு பிறந்தார். உயர்நிலைக் கல்வி வரை மருதூரிலும், புகுமுக வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், இளம் அறிவியல் வகுப்பினைச் சென்னைத் தியாகராயர் கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியப்படிப்பைத் தஞ்சாவூர், பூண்டியில் அமைந்துள்ள திருபுட்பம் கல்லூரியிலும் பயின்றார். இளம் முனைவர் பட்டத்திற்குப் பொருள்கோள் என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்காக முனைவர்.பொற்கோவை நெறியாளராகக் கொண்டு வேற்றுமை மயக்கம் என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்தார். சமஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்தார். கல்வியியலிலும், முதுகலை கல்வியியலிலும் பட்டயம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கல்விப்பணி
  • முதுநிலைத் தமிழாசிரியர்-சர் மு. சித. மு. மேனிலைப் பள்ளி (1979- 87).
  • துணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், முதல்வர்(1993-2011). நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரி
  • இணைப்பதிப்பாசிரியர்-சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகராதியின் செம்பதிப்பு
  • வருகைதரு பேராசிரியர், இலக்கணப் பாடநூல் எழுதுநர், பாடப்பொருள் மதிப்பீட்டாளர் -சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம்

இலக்கியப் பணி

அரங்கராசன் மரபிலக்கணத்தையும் மொழியியலையும் இணைத்து, தமிழ்மொழியை ஆய்கிறார். வேற்றுமைபற்றி மரபு இலக்கண முறையிலும் மொழியியல் பார்வையிலும் குறிப்பாக கவனம் செலுத்துகிறார்

இவரது 'தமிழில் வேற்றுமைகள்' மற்றும் தமிழில் வேற்றுமை மயக்கம் இரு நூல்களும் தமிழ் வேற்றுமைகளைப்பற்றி ஒரு முழுமையான ஆய்வாக அமைந்துள்ளன. தொல்காப்பியரில் தொடங்கி, இன்றைய மொழியியலில் வேற்றுமை இலக்கணத்தைத் தெளிவுபடுத்திய சார்லஸ் ஃபில்மோர் வரை இவர் ஆய்வு விரிந்தமைந்துள்ளது.

யாப்பறிந்து பாப்புனைய யாப்பு அறிந்து மரபுக்கவிதை இயற்ற விரும்புவர்க்கும், யாப்பு அறிந்தபின் புதுக்கவிதை புனைய விரும்புவர்க்கும் உதவும் நூல். இந்நூலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு 2005-ல் வழங்கப்பட்டது.

1978 – 80களில் சென்னை உ.வே. சா. நூலகத்தில் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், பேரா. சா.வே.சுப்பிரமணியன், திரு. இராமன் போன்றோருடன் இணைந்து ஓலைச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் இலக்கணங்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியையும் மேற்கொண்டவர்.

படைப்புகள்

  • பொருள்கோள் (1979)
  • இலக்கண வரலாறு: பாட்டியல் நூல்கள் ( 1983)
  • தமிழில் மரபுத் தொடர்கள் ( 1998)
  • தமிழில் வேற்றுமைகள் (2000)
  • தமிழில் வேற்றுமை மயக்கம் ( 2000)
  • தவறின்றித் தமிழ் எழுத (2005)
  • யாப்பறிந்து பாப்புனைய (2005 தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)
  • ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது -புதுக்கவிதைத் தொகுப்பு (1984)
  • பண்டைய ரோமானியர்களின்
  • பெயர்சூட்டு விழாவும் பெயரீட்டு முறையும்
  • நாளும் நல்ல தமிழ் எழுத
  • தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் ( 2007)
  • திருக்குறள் உணர்த்தும் வாழ்வியற் கோட்பாடுகள் ( 2008)
  • ஆய்வு நோக்கில் சங்க இலக்கியம் (2009)
  • செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புறக் கலைகளின் தாக்கம் (2014)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jan-2023, 11:07:08 IST