under review

மதுவனேஸ்வரர் கோயில்

From Tamil Wiki
மதுவனேஸ்வரர் கோயில்

மதுவனேஸ்வரர் கோயில் நன்னிலத்தில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் பதினாறு கிலோமீட்டர் தொலைவில் நன்னிலம் உள்ளது. நன்னிலம் நகரின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

நீர்வளத்தினால் சோலைகளும் அச்சோலைகளில் உள்ள மலர்களிலுள்ள தேனைச் சேகரிக்கும் வண்டுகள் இக்கோயிலில் கூடுகட்டி வாழ்வதால் இக்கோயிலின் இறைவன் மதுவனேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். மதுவன நாயகி என அம்மை அழைக்கப்பட்டார்.

மதுவனேஸ்வரர் கோயில் மூலவர்

வரலாறு

மதுவனேஸ்வரர் கோயில் பொ.யு. 9-10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழமன்னன் கோச்செங்கணான் காவிரிக்கரையின் இருமருங்கிலும் கட்டிய எழுபது மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. திருக்குறுந்தொகையிலும், திருத்தாண்டகத்திலும் அப்பர் நன்னிலம் கோயிலைப் பற்றிப் பாடினார். சுந்தரர் 'நன்னிலம் பெருங்கோயில் நயந்தவனே' என இக்கோயில் இறைவனை தன் பதிகத்தில் பாடினார். இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டது. கோயிலில் தற்போது உள்ள சிற்பங்கள் யாவும் காலத்தால் பிற்பட்டவை. பல்லவர் காலத்திலிருந்து இக்கோயில் மண்டளியாக இருந்து பின் சோழர் காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். சோழர்களின் பல கொடைகளை இக்கோயில் பெற்றிருக்க வேண்டும்.

கல்வெட்டு

இரண்டு வரி சிதிலமடைந்த துண்டு பொருள் விளங்காத கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் உள்ளது. இக்கோயில் மடப்பள்ளியில் உள்ள கல்லில் உள்ள ஒரு கல்வெட்டில் பொ.யு. 10-ம் நூற்றாண்டில் நாரண்ணன் என்பவர் நன்னிலம் கோயிலுக்கு நந்தா விளக்கெரிக்க பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்த செய்தியும், இதனை மூன்று பேர் பெற்றுக் கொண்டு வட்டிக்கு விளக்கேற்ற ஒப்புக் கொண்ட செய்தியும் உள்ளது. மற்றொரு கல்வெட்டு மூலவர் கருவறையில் உள்ள தூணில் சிதைந்த நிலையில் உள்ளது.

தொன்மம்

இந்திரன் முதலான தேவர்கள் விருத்திராசுரனால் துன்புறுத்தி துரத்தப்பட்டனர். தேவர்கள் பயந்து கொண்டு பூமிக்கு வந்தனர். இவர்கள் நன்னிலத்தில் உள்ள இறைவனை வழிபட்டனர். விருத்திராசுரன் தேவர்களை தேடி வர தூதர்களை அனுப்பினார். தேவர்கள் தேனீக்களின் வடிவங்கொண்டு ஆங்காங்கே கோயிலின் பகுதிகளில் மறைந்து கொண்டு அன்றாடம் மலரும் மலர்களின் தேனால் இறைவனை வழிபட்டு மீண்டும் சக்திபெற்று அசுரனை வென்று தேவலோகத்தை மீண்டும் பெற்றனர். இன்றும் தேன்கூடு இக்கோயிலில் உள்ளது.

மதுவனேஸ்வரர் கோயில்

கோவில் பற்றி

  • மூலவர்: மதுவனேஸ்வரர், பிரகதீஸ்வரர், தேவராணேஸ்வரர், பிரகாசநாதர்
  • அம்பாள்: மதுவனநாயகி, பெரியநாயகி, தேவகாந்தரநாயகி
  • தீர்த்தம்: பிரம்மதீர்த்தம், சூலதீர்த்தம், தேவதீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: வில்வம்
  • பதிகம்: சுந்தரமூர்த்தி வழங்கிய பாடல்

கோவில் அமைப்பு

சுந்தரர் தம் திருப்பதிகத்தில் 'நன்னிலம் பெருங்கோயில்' என்று இதன் பரப்பளவை சுட்டிக்காட்டி பாடினார். இக்கோயில் மாடக்கோயில் வகையைச் சார்ந்தது எனவே சிறு குன்றின் மீது இறைவன் உள்ளார். கோயிலின் உள்நடுவில் அமைந்த உயர்ந்த மாடத்தில் மதுவனேஸ்வரர் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் இறைவன் லிங்க வடிவில் உள்ளார். கருவறை சதுர வடிவமானது. கருவறையைச் சுற்றி ஒரு திருச்சுற்றும், நாற்புறமும் 'திருநீற்றுச்சுவர்' என்று போற்றப்படும் பன்னிரெண்டு அடி உயரமுள்ள மதிற்சுவரும் அமைந்துள்ளன. மதிற்சுவருக்கும், மூலட்டானத்திற்கும் இடையே வெளிச்சுற்று அமைந்துள்ளது. கோயில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்ட பரப்பில் அமைந்துள்ளது. சோலைகள் சுற்றிலும் சூழ்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கிழக்குக் கோபுரம் கயிலைக்காட்சியையும், சுந்தரர் தேவாரம் பாடும் அழகுக் காட்சியையும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மதில் சுவரின் தென்பகுதியில் கூத்தாடும் விநாயகர், அகத்தியர் சிற்பங்கள் உள்ளன. ஐந்து கலசங்கள் கொண்ட கிழக்கு கோபுர வாசல் வழியே உள் நுழைந்தவுடன் முன்னே கணபதி காட்சி தருகிறார். கொடிமரமும், நந்தியும் அமைந்துள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் வலது பக்கத்தில் சோமாஸ்கந்தர் தனிக்கோயிலாக உள்ளது. கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. மதுவனேஸ்வரர் கருவறையை தொடர்ந்து படிகள் இறங்கினால் பிரம்மபுரீசுவரர் தனிக்கோயிலும், அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. வடமேற்கில் கஜலெட்சுமி, வடதிசையில் தெற்குநோக்கி சண்டீசர் ஆகியோருக்கு தனிக்கோயில் உள்ளது. அதனை அடுத்து தென்திசையில் மதுவனநாயகி கோயில் கொண்டுள்ளார். கிழக்கு நோக்கிய இந்த கோவிலின் பிரதான கோபுரம் கட்டப்படவில்லை.

சிற்பங்கள்

கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள கோட்டங்களில் தென்பகுதியில் நர்த்தன விநாயகரும், தென்முகக்கடவுளும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும், துர்க்கையும் அமைந்துள்ளனர். மதுவனேஸ்வரர் கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார். மதுவன நாயகி நின்ற நிலை சிற்பமாக நான்கு திருக்கரங்கள் உள்ளது. சண்டேசர், சனீஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் இடத்தில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் சித்தரிக்கும் சிற்பம் உள்ளது.

சிறப்புகள்

  • சோழநாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள 276 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • எழுபத்தி ஒன்றாவது சிவஸ்தலம்.
  • இக்கோயிலில் உள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • இங்குள்ள இறைவனை வழிபட்டால் அனைத்து வகையான நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

வழிபாடு

'ஏகாதசி' (பௌர்ணமி அல்லது அமாவாசைக்குப் பின்வரும் பதினொன்றாம் நாள்), 'பிரதோஷம்' (பௌர்ணமி அல்லது அமாவாசை நாட்களுக்குப் பின்வரும் பதின்மூன்றாம் நாள்) இங்குள்ள இறைவனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 7-12
  • மாலை 4-8

விழாக்கள்

  • திருக்கார்த்திகை
  • வைகாசி விசாகம்
  • மார்கழி திருவாதிரை
  • ஆடி சுவாதியில் சுந்தரருக்கு குருபூஜை

உசாத்துணை


✅Finalised Page