மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
From Tamil Wiki
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கௌசிகன் என்னும் பெயர் கொண்டவர். இளங்கண்ணி என்பாரின் மகன்.
இலக்கிய வாழ்க்கை
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடிய பாடல் புறநானூறில் 309-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. போர் திறம் வீரன் ஒருவனின் புகழைப் பாடுவதாக தும்பைத் திணையில் நூழிலாட்டு என்னும் துறையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- வாள், வேல், அம்பு முதலிய படைக்கருவிகள் இரும்பால் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன.
- வாள். வேல். அம்பு முதலிய கருவிகளை கொண்டு பகைவர்களப் போரில் கொன்று அழித்தல் வீரர்களின் பொது இயல்பு. அதை மட்டுமே செய்யும் வீரனுக்கு தனி சிறப்பில்லை.
- போருக்குப் புறப்பட பாசறையில் காத்திருக்கும் வீரனின் இருப்பை கண்டு எதிரி படையினர் அஞ்சுதல் வேண்டும். அத்தகு வீரனே சிறப்புமிக்கவன். அவன் பகைவர்களுக்கு புற்றில் உறையும் நல்ல பாம்பு போலவும் கண்டாரைக்கொல்லவரும் காளை போலவும் அச்சத்தை உண்டாக்குபவன் என்று போற்றப்படுகிறான்.
பாடல் நடை
புறநானூறு - 309
- திணை: தும்பை துறை: நூழிலாட்டு
இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன்என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- புறநானூறு - 309:puram400
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 14:06:41 IST