under review

மதுரைப் படைமங்க மன்னியார்

From Tamil Wiki

மதுரைப் படைமங்க மன்னியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைப் படைமங்க மன்னியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. தன் படைமுழுதும் அழிந்த பின்னரும் வீரத்துடன் போரிட்ட வீரன் ஒருவனை பாடியமையால் இவருக்கு படைமங்க மன்னியார் என்ற பெயர் அமைந்திருக்கலாம் என்று ஊகம் செய்யப்படுகிறது. மதுரை நகரில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைப் படைமங்க மன்னியார் பாடிய பாடல் புறநானூறில் 351-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் ஒருவன் தன் மகளை தன் இல்லம் வந்த மன்னர்களுக்கு மணம் செய்து கொடுக்க மாட்டேன் என மறுத்துரைக்கிறான். அதனால் அவன் மேல் பகை கொண்ட மன்னர்கள் தலைவனின் ஊரை தாக்குவதற்கு படை கொண்டு வந்த காட்சியை கூறுவதாக காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சி துறையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பருத்த கால்களை உடைய யானைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் பெருத்த ஒலி எழுப்புகின்றன. தேர்களில் கொடிகள் கட்டப்பட்டு பறக்கின்றன. யானையும் தேரும் குதிரையும் வீரரும் நிறைந்த பெரும்படையுடன் மன்னர்கள் போருக்கு வருவர்.
  • தலைவனின் ஊரானது மீன்கள் நிரம்ப பெற்ற தெளிந்த நீரினை கொண்ட குளம் அமையப்பெற்றது. அக்குளத்தில் சிவந்த வரிகளுடைய நாரை மீன் பிடித்து உண்ணும். பூக்கள் பூத்து குலுங்கும் மருத மரத்தினை விடுத்து காஞ்சி மரத்தில் சென்று நாரை உறங்கும். அத்தகு நல்லூர் அது.
  • வலிமை மிக்க எயினனால் ஆட்சி செய்யப்பெற்ற வாகை என்னும் ஊருக்கு நிகரான அழகு படைத்தவள் தலைவனின் மகள்.

பாடல் நடை

புறநானூறு - 351

  • திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி

படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்
கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்
படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
கடல்கண் டன்ன கண்ணகன் தானை
வென்றுஎறி முரசின் வேந்தர் என்றும்
வண்கை எயினன் வாகை அன்ன
இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என்ஆ வதுகொல் தானே; தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின்இப் பணைநல் லூரே?

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:31:50 IST