மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைச் சுள்ளம் போதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரைச் சுள்ளம் போதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சுள்ளம்போது என்னும் ஊரினை சேர்ந்தவர். மதுரை நகரில் குடிபுகுந்து வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைச் சுள்ளம் போதனார் பாடிய பாடல் நற்றிணையில் 215-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பகலில் மட்டுமே வந்து செல்லும் தலைவனிடம் தலைவியின் துன்பத்தை போக்குவதற்காக இன்று இரவு அவளோடு தங்கி செல்க என்று தோழி உரைப்பதாக நெய்தல் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- கடற்பரப்பை தன் கதிர்களால் ஒளிமிக்கதாக்கிய சூரியன் மாலை வேளையில் மேற்கு மலைக்கு பின்னர் சென்று மறைந்துவிடும்.
- மாலை வேளையில் மீனவர்கள் வாழும் பாக்கம் என்றழைக்கப்படும் ஊர் ஆட்களின் நடமாட்டமற்று அமைதியாக காணப்படும். அத்தனிமை நிலை அங்கிருக்கும் மகளிருக்கு துன்பத்தை தரும்.
- மீனவப் பெண்டிர் தம் கைகளில் அழகிய வளையல்களை அணிந்திருப்பர். மாலை நேரத்து தனிமையை போக்கும் விதமாக மீன் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட நெய்யில் விளக்கேற்றி தம் வீட்டை ஒளிமிக்கதாக்குவர்.
- சிவந்த காலோடு முடிந்துள்ள வலையை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்ற சுறா மீன்களை விடாது துரத்தி சென்று பிடித்த பின்னரே மீனவர் குலத்து ஆண்கள் கரைக்கு திரும்புவர்.
பாடல் நடை
நற்றிணை - 215
- திணை: நெய்தல்
- துறை: பகற்குறிவந்துமீள்வானை அவள்ஆற்றும்தன்மையள்அல்லள்; நீயிர்இங்குத்தங்கற்பாலீர்; எமரும்இன்னதுஒருதவற்றினர் எனத்தோழிதலைமகற்குச்சொல்லியது. இரவுக்குறிமறுத்து வரைவு கடாயதூஉம்ஆம்.
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோதெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- நற்றிணை - 215:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:29:22 IST