மதுரைக் கள்ளிற் கடையத்தார் வெண்ணாகனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தார் வெண்ணாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறிலும் அகநானூறிலும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
மதுரைக் கள்ளிற் கடையத்தார் வெண்ணாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வெண்ணாகனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கடையம் என்னும் ஊரில் பிறந்தவர். தொண்டை நாட்டில் உள்ள கள்ளில் என்னும் ஊரில் சிலகாலம் வாழ்ந்த பின்னர் மதுரைக்கு சென்று வாழ்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
மதுரைக் கள்ளிற் கடையத்தார் வெண்ணாகனார் பாடிய பாடல்கள் புறநானூறிலும்(316)அகநானூறிலும்( 170) உள்ளன. புறநானூறு 316-ம் பாடல் போரில் பகைவரை வென்ற தன் அரசனின் பெருமையை பாடும் பாணனின் குரலாக வாகைத் திணையில் வல்லாண் முல்லை துறையில் அமைந்துள்ளது. அகநானூறு 170-ம் பாடல் காம உணர்வு மிகுதியான தலைவி ஒருத்தி தலைவனை பிரிந்து வருந்தும் தன் துயரை நண்டு ஒன்றிடம் கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு - 316
- அரசர்கள் யானை மேல் அமர்ந்து போர் செய்வர். பகை அரசனை கொல்லும் போது அவன் யானையையும் சேர்த்து கொல்வர்.
- போரில் வென்ற அரசன் தன் படைச்சுற்றமும் பாணர்களும் சூழ கள் விற்கும் இடத்திற்கு சென்று கள்ளருந்தி வெற்றியை கொண்டாடுவர்.
- கள் குடிப்பதற்கு விலையாக வெற்றியில் மகிழ்ந்திருக்கும் அரசன் தன் உடைவாளை கள் விற்பவருக்குக் கொடுத்துள்ளான் என்று அறிய முடிகிறது. அது போல் பாணர்களும் தமது சிறிய கருமையான தண்டினையுடைய யாழை பணயம் வைத்து கள்ளருந்தி உள்ளனர் என்றும் அறிய முடிகிறது.
- போர் வென்று மகிழ்ந்திருக்கும் அரசன் தனது அணிகலன்களை சன்மானமாக அளித்து தன்னை நாடி வந்து வாழ்த்தி பாடும் பாணர்களுக்கு விருந்து படைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
அகநானூறு - 170
- கடற்கரைகளில் உப்பங்கழிகளும் அவற்றை ஒட்டி புன்னை மரங்களும் காணப்படும்.
- உப்பங்கழிகளில் கரை சதுப்பில் மலர்ந்திருக்கும் நெய்தல் பூக்களில் வண்டுகள் தேனருந்தி சுற்றி வரும்.
- கடற்சிறு காக்கைகளின் இணை தாழை மடல் புதரில் இரவு நேரத்தில் உறங்கும்.
- கடற்சிறு காக்கைகள் சுறா மீன்கள் மேயாத கடற்பகுதியில் இருக்கும் வெண்ணிற இறால் மீன்களை பிடித்து உண்ணும்.
- கடற்சிறு காக்கை போன்ற பறவைகளும் உறக்கத்தில் கனவு காணும் என்னும் நம்பிக்கை இருந்துள்ளது.
- நள்ளிரவு நேரத்தில் கடற்கரையில் தம் காதலரின் வருகைக்காக காத்திருந்து துயரில் வாடும் இளமகளிர் உண்டு.
பாடல் நடை
புறநானூறு - 316
- திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன்எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்
சென்றுவாய் சிவந்துமேல் வருக
சிறுகண் யானை வேந்து விழுமுறவே.
அகநானூறு - 170
- திணை: நெய்தல் கூற்று: தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது.
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- புறநானூறு - 316:puram400
- அகநானூறு - 170:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:16:17 IST