under review

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு

From Tamil Wiki
மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு (பதிப்பு: 1918), நிகண்டு நூல்களுள் ஒன்று. ஐந்திணைத் தாவரங்களைப் பற்றிக் கூறும் சிறு நிகண்டு என்ற வகையிலும், ‘மஞ்சிகன்’ என்பவரால் இயற்றப்பட்டதாலும் ’மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு’ என்று பெயர் பெற்றது.

பதிப்பு, வெளியீடு

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு நூலின் பழம்பிரதியை, மாகறல் கார்த்திகேய முதலியார் மூலமாகப் பெற்ற மாகறல் தி. பொன்னுசாமி முதலியார், சென்னை சிவனடியார் திருக்கூட்டத்தின் வைதிக சைவ அச்சுக்கூடத்தில், 1918-ம் ஆண்டில் பதிப்பித்தார். விலை: இரண்டு அணா.

நூல் பற்றிய குறிப்பு

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு நூல் பற்றி, “இது இதுகாறும் வெளியாகாத மிகப் பழைய நிகண்டு. இதனுள் தற்காலம் வெளிவந்துள்ள பல நிகண்டுகள், அகராதிகளில் காணக்கூடாத பல சொற்கள் இருக்கின்றமையின், இந்நூல் தமிழ் கற்றவர், கற்கின்றவர் கற்பவராகிய ஒவ்வொருவருடைய கையிலும் இருக்க வேண்டியது அவசியமாம்” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு என்று நூலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், ”’மஞ்சிகன் ஐந்திணை பெருநிகண்டு’ என்ற நூலும் இருக்கக் கூடும்” என பதிப்பாசிரியர் மாகறல் தி. பொன்னுசாமி முதலியார் குறிப்பிட்டடார்.

நூல் அமைப்பு

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்குரிய தாவரங்களைப் பற்றிக் கூறுகிறது. கடவுள் வாழ்த்து, குரு வாழ்த்து, அவையடக்கம் போன்றவை இந்நூலில் இடம்பெறவில்லை. நூலின் தொடக்கத்தில் காப்பு செய்யுள் இடம் பெற்றுள்ளது.

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு, 122 ஓரடி நூற்பாக்களைக் கொண்டுள்ளது. மரங்களின் பெயர்களையும் பிற தாவரங்களின், செடி, கொடிகளின் பெயர்களையும் இந்நூல் கூறுகிறது. இந்நூலில் 122 மரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்பாவும் ’ஆகும்’, ‘எனப்படும்’, ‘எனப்படுமே’ என்று முடிவதாக அமைக்கப்பட்டுள்ளது

உள்ளடக்கம்

மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு நூல் மூலிகையின் பெயர், பிரம்பின் பெயர், சிறு கீரையின் பெயர், தென்னையின் பெயர் என்று தொடங்கி நொச்சியின் பெயர், மயிர் மாணிக்கத்தின் பெயர், தாழையின் பெயர் கருங்குன்றின் பெயர் என்பதோடு 122 வரிகளில் நிறைவடைகிறது.

இந்நூலில் பிரம்பு, சிறுமுன்னை, பெருமுன்னை, தென்னை, பனை, வெண்முருங்கை, மூங்கில், தகரை, ஈஞ்சு, நிலவேம்பு, ஆலம், மகிழ், கொன்றை, குரா, செருந்தி, சந்தனம், அரசு, கோங்கம், ஒதியம், புளி, குங்குமம், அனிச்சம், கொய்யா, ஆத்தி, தேறு, இரும்பிலி, தும்பிலி, கடம்பு, பிடா, ஊசிப்பாலை, பெருமரம், கருங்குன்றி உள்ளிட்ட பல மரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கீரைவகைகள், கொடிவகைகள், மூலிகைகைளின் பெயர்கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. மூலிகை (ஓடதி, ஓடதம்), கருநாகதாளி, அறுகு, சித்திரமூலம், நஞ்சுமுறிச்சான், முடக்கற்றான், பச்சிலை, ஆவிரை, தான்றி, பல்லி, பொருதலை, குதம்பை, தணக்கு, செம்பு, பிரமி, ஈயுணி, வெள்ளறுகு, காக்கணம், கஞ்சாங்கோரை, கொறுக்கை, நன்னாரி, நெடுங்கோரை, கரும் பிரண்டை, திரிதளமூலி, பாற்சொற்றி, சிறுநெல்லி, செந்தூதளை, வெண்தூதளை, கரிசலாங்கண்ணி, நெருஞ்சில், துளசி போன்ற மூலிகைச் செடிகளின் பெயர்களும், சிறுகீரை, தொய்யா, கானாங்கீரை, கரிசலங்கண்ணி, பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நறுவிலி, கோவை, ஆமணக்கு, பூனைக்காஞ்சொறி, பூனைக்காலி, தகரை, பீநாறி, நீர்மேல்நெருப்பு, பனிதாங்கி, மஞ்சாடி, மாதளை, கூவிளம், விண்டுகாந்தி, சூரியகாந்தி, எலுமிச்சை, வேளை, சின்னி, வேடு, எருக்கம், குதிரைக்குளம்பு, உடுப்பை, குருவி, படலைக்கள்ளி, கஞ்சா, கத்தரி, தும்பை, பசலை, புல்லுருவி, சிறுபுள்ளடை, அச்சங்கரணை, சவண்டல், நாயிறுதிரும்பி, நமை, பீர்க்கு, அவுரி, நொச்சி, மயிர்மாணிக்கம், அவரை, மயிர்ச்சிகை, நாரத்தை, வாகை, மஞ்சள்புல், குறிஞ்சி, தாழை ஆகியனவும், உம்பிலம், கோற்கொடி, வள்ளை, பூசணி ஆகிய கொடிவகைகளின் பெயர்களும் இந்நூலில் காணப்படுகின்றன

பாடல்கள்

பூனைக்காஞ்சொறியின் பெயர்:
கண்டூதி தொட்டி பூனைக் காஞ்சொறி.

பூனைக்காலியின் பெயர்:
பூசை பில்லி பூனைக் காலி.

தகரையின் பெயர்:
பிங்கணம் பிஞ்சம் அரத்தம் தகரை.

ஈஞ்சின் பெயர்:
கச்சூரம் ஈந்து ஈஞ்செனப் படுமே.

பீநாறியின் பெயர்:
நாறி முட்டை பீநாறி யாகும்.

புனநெல்லின் பெயர்:
ஐவன மென்பது புனநெல் லாகும்.

குளநெல்லின் பெயர்:
நீவாரழ் வாரம் குளநெல் லெனப்படும்.

நஞ்சுமுறிச்சான் பெயர்:
நஞ்சு கொல்லி நஞ்சுமூ றிச்சான்.

முடக்கற்றான் பெயர்:
திரிபுடை முடக்கற் றானெனப் படுமே.

நீர்மேல் நெருப்பின் பெயர்:
படைகொலி பங்கம் நீர்மே னெருப்பு.

மதிப்பீடு

ஐந்திணைகளில் வளரக்கூடிய தாவரங்கள், செடி, கொடிகளின் பெயர்களை மட்டுமே கூறும் நூலாக மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு அமைந்துள்ளது. தொன்மையான நிகண்டு நூல்களில் ஒன்றாகவும், மாறுபட்ட உள்ளடகத்தைக் கொண்ட நிகண்டு நூலாகவும், மஞ்சிகன் ஐந்திணை சிறுநிகண்டு நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page