under review

போதனார்

From Tamil Wiki

போதனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

போதனார் சங்ககாலப் புலவர். மதுரைச் சுள்ளம் போதனார் என்ற பெயரில் மற்றொரு புலவரும் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

போதனார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 110-வது பாடலாக உள்ளது. பாலைத் திணைப்பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மகள் சிறுமியாக இருக்கையில் செவிலியரின் ஏவலுக்கு போக்கு காட்டி சாப்பிட மறுக்கக்கூடியவள். அப்படிப்பட்டவள் இன்று கணவரின் ஏவலுக்கு ஏற்ப தக்க நடக்கும் அறிவு கொண்டிருப்பதையும், தன் கணவர் வீட்டில் வறுமை இருந்தாலும் தன் தாய் வீட்டின் உதவியை நாடாத திறத்தையும் தாய் வியப்பதாக பாடல் அமைந்துள்ளது.
  • மகள் பிறந்தகத்தில் அனுபவித்த சிறப்புகள்: தேன் கலந்த சுவையான பாலை பொன் கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு முதிய செவிலியர் தம் கையிலுள்ள சிறிய கோலால் பெண் மகவை உண்ணும்படி வற்புறுத்தினர். அவள் வீட்டுப் பந்தலில் முத்துப்பரல் இருக்கும் கால்-சிலம்பு ஒலிக்கும்படி கால் கடுக்க அங்குமிங்கும் ஓடினாள்.

பாடல் நடை

  • நற்றிணை 110

(திணை: பாலை)

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 20:00:05 IST