under review

போஒர் கிழவோன் பழையன்

From Tamil Wiki

போஒர் கிழவோன் பழையன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். சோழநாட்டின் போஒர் என்ற சீறூரை ஆண்டவன்.

வாழ்க்கைக்குறிப்பு

போஒர் கிழவோன் பழையன் சோழநாட்டின் போஒர் (போர்வை, போஒர், திருப்போர்ப்புறம்) என்ற சீறூரை ஆட்சி செய்தான். இப்போது அவ்வூர் குழித்தலைக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊராக உள்ளது. சோழர்க்கு படைத்தலைவனாக இருந்தான். குறிதவறாது வேலெறிந்து போர் புரியும் திறமை கொண்டிருந்தான். சோழர் கொங்கரைப் பணிவித்ததற்குச் செய்த போரில் பழையனின் வேலெறியும் திறத்தை வெளிப்படுத்தியுள்ளார். அகநானூறு(326), நற்றிணை(10) ஆகிய பாடல்களில் இவனைப்பற்றிய செய்திகள் உள்ளன. பரணரால் பாடப்பட்டவன்.

சோழன் செரும்பூட் சென்னியாகிய செங்கணான், சேரமான் கணைக்கால் இரும்பொறையை எதிர்த்து புரிந்த போரில் பழையன் சோழனின் படையில் முன்னின்று போர் புரிந்தான். சேரனின் படைத்தலைவனான நன்னன் முதலிய அறுவரும் குழுமியிருந்த பாசறையில் சென்று அனைவரையும் கொன்று பருந்துகளுக்கு இரையாக்கித் தானும் மாண்டான். சோழன் இதனால் உந்தப்பட்டு சேரனை வென்று அவன் கழுமலத்தையும் கவர்ந்து கொண்டான். இந்தச் செய்தி குடவாயிற் கீர்த்தனார் பாடிய, அகநானூற்றின் 44-ஆவது பாடலாக உள்ளது.

சிறப்புகள்

  • ’பழையன் ஓக்கிய வேல் போல்’ - பரணர், அகநானூறு(326)
  • ’பழையன் வேல்வாய்த் தன்ன’ - பெயர் தெரியாப் புலவர், நற்றிணை(10)

உசாத்துணை


✅Finalised Page