under review

பொன். செல்வகணபதி

From Tamil Wiki
பேராசிரியர் பொன். செல்வகணபதி

பொன். செல்வகணபதி (பொன்னம்பலம் செல்வகணபதி) (பிறப்பு: ஜனவரி 29, 1944) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பாரதிதாசன் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

பொன். செல்வகணபதி, ஜனவரி 29, 1944 அன்று, பொன்னம்பலம் - கண்ணம்மாள் இணையருக்குச் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரில் பிறந்தார். பள்ளிக் கல்வியை நிறைவு செய்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து இதே பல்கலையில் பயின்று பி.ஓ.எல் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 'புதுக்கவிதையில் அங்கதம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பொன். செல்வகணபதி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மணமானவர்.

பேராசிரியர், கவிஞர் பொன். செல்வகணபதி

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

பொன். செல்வகணபதி, இளம் வயதிலேயே கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். மாணவப் பருவத்தில் பல கவிதைகள் எழுதினார். மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டு வகைமையிலும் பல கவிதைகளை எழுதினார். கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் செல்வகணபதியை எழுத ஊக்குவித்தார்.

செல்வகணபதியின் முதல் கவிதைத் தொகுப்பு, 'செல்வகணபதி கவிதைகள்', 1972-ல், அவர் சென்னை மாநிலக் கல்லூரி மாணவராக இருக்குப்போது வெளியானது. கண்ணதாசன், டாக்டர் எம்.சுந்தரம் உள்ளிட்டோரால் அந்நூல் பாராட்டப்பட்டது. மு. கருணாநிதி வாழ்த்துரை வழங்கி ஊக்குவித்தார் தொடர்ந்து தமிழ், இயற்கை, காதல், தேசபக்தி, சர்வதேச சகோதரத்துவம், மனிதநேயம் உள்ளிட்டவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டு பல கவிதைகளை எழுதினார். சிறார்களுக்கான பல பாடல்களை எழுதினார்.

செல்வகணபதி அகில இந்திய வானொலி நிலையத்தின் சென்னைப் பிரிவு நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்றுக் கவிதை வாசித்தார். அதன் மூலம் பரவலான கவனம் பெற்றார்.

கவியரங்க நிகழ்வுகள்

செல்வகணபதி, தமிழகத்தில் நிகழ்ந்த பல்வெறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாக் கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கியப் பிரிவு நடத்திய பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். கேரள சாகித்திய அகாதெமி வெளியிடும் இலக்கிய இதழில் செல்வகணபதியின் கவிதைகள் சில மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. தமிழக அரசின் மூன்றாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் செல்வகணபதியின் கவிதை இடம்பெற்றது. செல்வகணபதியின் கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின.

இதழியல்

பொன். செல்வகணபதி 'அரிமா நோக்கு' காலாண்டிதழில் ஆசிரியர்களுள் ஒருவராகச் செயல்பட்டார்.

நாடகம்

பொன். செல்வகணபதி, நாடகங்கள் சிலவற்றை எழுதினார். செல்வகணபதி எழுதிய 'கவரிமான்' என்ற நாடகம் சென்னை வானொலியில் ஒலிபரப்பானது. செல்வகணபதி எழுதிய நாடகம் ஒன்று, மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் நடந்த விழாவில், மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அரசியல்

பொன். செல்வகணபதி, திராவிட முன்னேற்றக் கழக ஆதரவளாரகச் செயல்பட்டார். பல கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். பேச்சாளராகச் செயல்பட்டார்.

விருதுகள்

  • பாரதி நகர் முத்தமிழ் மன்றம் அளித்த முத்தமிழ் வித்தகர் விருது
  • தமிழக அரசின் பாரதிதாசன் விருது

மதிப்பீடு

பொன். செல்வகணபதி மரபுக் கவிஞர். புதுக்கவிதையிலும் தேர்ந்தவர். இவரது கவிதைகள் இயற்கையைப் பேசுபனவாகவும், சமூகத் தீமைகள் குறித்த விமர்சனமாகவும் அமைந்தன. அங்கதச் சுவையோடு சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுபவையாக செல்வகணபதியின் பல கவிதைகள் உள்ளன. பொன். செல்வகணபதி எழுத்து, பேச்சு என இரண்டு துறைகளிலும் இயங்கிய படைப்பாளராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • செல்வகணபதி கவிதைகள்
  • நிழல்களை நோக்கிய போராட்டங்கள் (குறுங்காவியம்)
  • கைது செய்யப்பட்ட நியாயங்கள்
  • சுதந்திர சோகங்கள்
  • முதல் வெளிச்சம்
  • ஞாபகப் பிசகு
  • வானத்திலே திருவிழா (சிறார் கவிதை நூல்)
  • பூமி பூமி ஓடி வா
  • அண்ணாவின் மேடைக்கலை
  • காதல் அலைகள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:22:34 IST