under review

பொன்மணியார்

From Tamil Wiki

பொன்மணியார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்மணியார், ஆண் புலவரா அல்லது பெண் புலவரா என்பதை உறுதியாக அறியமுடியவில்லை.

இலக்கிய வாழ்க்கை

பொன்மணியார் இயற்றிய ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 391- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

  • குறுந்தொகையில் உள்ள பாடல்கள் அனைத்தும் 4 அடி முதல் 8 அடிகளைக் கொண்டவை. ஆனால், அதற்கு விதிவிலக்காக 307 - ஆவது பாடலும் இப்பாடலும் ஒன்பது அடிகளைக் கொண்டவையாக உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
  • மயிலின் கண் பிளவுபட்டது போல் தோற்றமளிக்கிறது.

பாடல் நடை

குறுந்தொகை 391

முல்லைத் திணைப் பாடல் தோழி கூற்று

உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி உருமிற் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம் நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும்பே தையவே.

(பிரிவிடைப் பருவ வரவின்கண் ஆற்றாளென வருந்திய தோழியை நோக்கி, “கார்காலம் வந்தது; மயில்கள் கூவின; அவை பேதைமையுடையன போலும்” என்று தலைவி கூறியது.

தோழி! எருதுகள் வெப்பத்தை வெறுத்து உழாமல் சோம்பிக்கிடந்தன; மான்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்தியிருந்தன. மழை இல்லாத முல்லைநிலத்தில், விரைவாக இடிக்கும் இடியோசையால், பாம்புகளின் படம் அழிய, இடியோடு கலந்து மழை இனியதாகப் பெய்தது. அங்ஙனம் பெய்த பெரிய மழையால், தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த, துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், மலரையுடைய கொம்பிலிருந்த, பிளவுபட்டதைப் போல் தோன்றும் கண்களையுடைய மயில்கள், பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடங்களில் தனிமைத் துயரம் வருத்துமாறு கூவுகின்றன. அவை மிகுந்த அறியாமையுடையவை).

உசாத்துணை


✅Finalised Page