under review

பொதுக்கயத்துக் கீரந்தை

From Tamil Wiki

பொதுக்கயத்துக் கீரந்தை, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொதுக்கயத்துக் கீரந்தை என்பதில் கீரந்தை என்பது இவரது இயற்பெயர். கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

பொதுக்கயத்துக் கீரந்தை இயற்றிய பாடலாக சங்கத் தொகை நூலான குறுந்தொகையின் 337 - வது பாடல் இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

தலைவியைக் கண்டு தலைவன் காதலுற்றான். அவளை மீண்டும் சந்தித்து அவளோடு பழக விரும்புகிறான். தலைவியைச் சந்திப்பதற்குத் தோழியின் உதவியை நாடிவந்து, அவளைப் பலமுறை பணிவோடு வேண்டுகிறான். ”அவள் மிகவும் இளையவள். நீ அவளைக் காதலிப்பது முறையன்று.” என்று கூறித் தோழி அவன் வேண்டுகோளை மறுக்கிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவன், “ நீ கூறுவதுபோல், அவள் மிகவும் இளையவளாக எனக்குத் தோன்றவில்லை. அவள் அழகால் என்னை வருத்துகிறாள்.” என்று கூறுகிறான்.

பாடல் நடை

குறுந்தொகை 337

குறிஞ்சித்திணை, தலைவன் கூற்று தோழியை இரந்து பின் நின்ற தலைவன் தனது குறை அறியக் கூறியது

முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.

(தலைவியின் முலைகள் அரும்புகளைப் போல் அரும்பின; தலையில் நிறைந்துள்ள மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன; நெருக்கமாகவும் வரிசையாகவும் உள்ள வெண்மையான பற்கள், முறையாக விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும் சில தோன்றின. அவள் என்னை வருத்தும் அழகுடைய பருவத்தினள் என்பதை நான் அறிவேன்; அவள் அதனை அறியாள். பெரிய பழமையான செல்வந்தருடைய ஒப்பற்ற இளமை பொருந்திய தலைவியாகிய ஒரே மகள், எத்தன்மையை உடையவள் ஆவாளோ? (எப்படிப்பட்டவளோ?))

உசாத்துணை


✅Finalised Page