under review

பேயனார்

From Tamil Wiki

பேயனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய நூற்றி நான்கு பாடல்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, அகநானூறு ஆகியவற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பேயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

பேயனார் ஐங்குறுநூற்றின் ஐந்தாம் நூறாகிய முல்லைத் திணைப் பாடல்களைப் பாடினார். குறுந்தொகை, அகநானூறு ஆகியவற்றிலும் முல்லைத்திணைப் பாடல்கள் பாடினார்.

ஐங்குறுநூறு

ஐங்குறுநூற்றில் பேயனார் எழுதிய முல்லைத் திணை பாடல்கள் பத்து தலைப்புகளின் கீழ் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. செவிலி கூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, விரவுப் பத்து, புறவணிப் பத்து, பாசறைப் பத்து, பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர் வியங்கொண்ட பத்து, வரவுச்சிறப்பு உரைத்த பத்து ஆகிய தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன.

பாடிய பாடல்கள்

  • ஐங்குறுநூறு (முல்லைத்திணை) - நூறு பாடல்கள்
  • குறுந்தொகை - 233, 359, 400
  • அகநானூறு - 234

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நாடு காவல், நன்பொருள் ஈட்டல் ஆகியவை கருதி தலைமகன் பிரிந்து போதல், பிரிந்து சென்றான் செல்லுங்கால் கூறிய உரையினைத் தேறி, தலைமகன் ஆற்றியிருத்தலும், வினைமுடித்து வருவான் வழியின் இன்பங் கண்டு வருந்திக் கூறுவனவும் முல்லைத்திணைக்குரியவை.
  • முல்லை நிலக் காட்சிகள் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
குறுந்தொகை
  • முல்லை நிலத்தின் கார்காலம்: கவலைக்கிழங்கு தோண்டி எடுத்ததால் உண்டான குழியில் கொன்றை மலர் உதிர்ந்து நிறைந்து பரவியுள்ள காட்சி செல்வந்தர்கள் பொன்னையிட்டு வைக்கும் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்தது போல உள்ளது.
அகநானூறு
  • தழைத்திருக்கும் தழையை உண்ணாமல் நிற்கும் பெண்மான், ஆண்மான் புணர்ந்த உவகையில் துள்ளி ஓடும். வண்டினம் முல்லைப் பூவை ஊதும். இப்படிப்பட்ட மாலை வேளையில் தலைவி பசலை மேனியுடன் தலைவனின் பிரிவுக்காக வருந்தியிருப்பதை தலைவன் நினைத்து வருந்துவான்.

பாடல் நடை

  • ஐங்குறுநூறு 462

ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.

  • குறுந்தொகை: 233

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே!

  • அகநானூறு: 234

திணை: முல்லை (தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது)

கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
கால் என மருள, ஏறி, நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!

ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலை,

புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 17:02:26 IST