under review

பெரும்பாக்கனார்

From Tamil Wiki

பெரும்பாக்கனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

பெரும்பாக்கனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பெரும்பாக்கம் என்னும் ஊரில் பிறந்தவர். எனவே அவ்வூர் பெயரினை கொண்டு பெரும்பாக்கனார் அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

பெரும்பாக்கனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 296-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. களவொழுக்கத்தில் காதலித்துக் கொண்டிருக்கும் போது சில நாள் கழித்து தலைவியை, தலைவன் சந்திக்க வருகிறான். அவனை திட்ட நினைக்கும் தலைவி, தோழியிடம் அவர் வந்தால் கடிந்து கொள்ளாதே என தலைவனுக்கு கேட்கும்படி சொல்வதாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கடற்கரையின் அழிமுகத்தில் வளர்ந்திருக்கும் புன்னை மரத்தில் நாரைகள் வாழும். அவை உப்பகழிகளில் உள்ள மீன்களை பிடித்து உண்ணும். மீன்களை விரும்பாத போது கடற்கரையோர வயல்களில் விளைந்திருக்கும் நெய்தல் பூக்களையும் நெல் மணிகளையும் கொய்து உண்ணும்.

பாடல் நடை

குறுந்தொகை - 296

  • திணை: நெய்தல்
  • கூற்று: காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய தலைமகள்,தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:44:44 IST