பெருமாள் திருமொழி
- பெருமாள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பெருமாள் (பெயர் பட்டியல்)
பெருமாள் திருமொழி பன்னிரு வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்டது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் ஐந்தாவது பிரபந்தமாக இடம்பெறுகிறது. திவ்யப் பிரபந்தத்தில் 647 முதல் 750 வரையான 105 பாடல்களைக் கொண்டது. திவ்யப் பிரபந்தத்தில் உள்ள ராமனுக்கான ஒரே தாலாட்டுப் பாடல் 'மன்னுபுகழ் கோசலைதன்' பெருமாள் திருமொழியில் இடம்பெறுகிறது
ஆசிரியர்
பெருமாள் திருமொழியை இயற்றியவர் குலசேகர ஆழ்வார். சேர மன்னர். ராமாவதாரத்தின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். திவ்யப் பிரபந்தத்தில் இவர் பாடிய ஒரே பிரபந்தம் பெருமாள் திருமொழி.
நூல் அமைப்பு
பெருமாள் திருமொழி பத்து பதிகங்களாக நூற்றைந்து (105) பாசுரங்களைக் கொண்டது. ஒவ்வொரு பதிகமும் 'திருமொழி' எனப்படுகிறது. ஒவ்வொரு திருமொழிக்கும் அதன் முதல் தொடரே பெயராக வழங்குகின்றது. பெருமாள் திருமொழியின் இரு தனியன்கள்(பாயிரம்) ராமானுஜர், மணக்கால் நம்பி இருவரும் எழுதியவை.
- முதல் திருமொழி - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (11 பாடல்கள்)
- இரண்டாம் திருமொழி - சந்தக் கலி விருத்தம்-(10 பாடல்கள்)
- மூன்றாம் திருமொழி - கலி விருத்தம் (9 பாடல்கள்)
- நான்காம் திருமொழி - தரவு கொச்சகக் கலிப்பா (11 பாடல்கள்)
- ஐந்தாம் திருமொழி - தரவு கொச்சகக் கலிப்பா (10 பாடல்கள்)
- ஆறாம் திருமொழி- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (10 பாடல்கள்)
- ஏழாம் திருமொழி - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்(11 பாடல்கள்)
- எட்டாம் திருமொழி - தரவு கொச்சகக் கலிப்பா (11 பாடல்கள்)
- ஒன்பதாம் திருமொழி- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (11 பாடல்கள்)
- பத்தாம் திருமொழி - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (11 பாடல்கள்)
உள்ளடக்கம்
முதல் மூன்று திருமொழிகள் திருவரங்கத்தில் கோயில் கொண்ட அரங்கனையும், நான்காம் திருமொழி திருப்பதி வேங்கடவனையும், ஐந்தாம் திருமொழி திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாளையும், எட்டாம் திருமொழி திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளையும், பத்தாம் திருமொழி தில்லை நகர் திருச்சித்ரகூடத்து கோவிந்தராஜப் பெருமாளையும் மங்களாசாசனம் செய்கின்றன. ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் திருமொழிகள் ராம, கிருஷ்ண அவதாரங்களை(விபவம்) பாடுகின்றன.
முதல் திருமொழி - இருளிரியச் சுடர்மணிகள்
திருவரங்கத்திற்குச் சென்று அரங்கனைக் காண வேண்டும் என்ற ஆவலும், எதிர்பார்ப்பும் இப்பாடல்களின் பேசுபொருள். அனந்தன் மேல் பள்ளி கொண்டஅழகிய மணவாளனை கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ, பெருமாள் சன்னதிக்கு எதிரே இருக்கின்ற, இரண்டு திருமணத் தூண்களைப் பற்றிக்கொண்டு துதிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ, அடியார்களோடு கூடி ஆராதிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ, பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் வாயாரப்பாடி அதனால் ஆனந்தக்கண்ணீர் பெருகி, தலைகால் தெரியாமல் துள்ளிக்கூத்தாடி, நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் என்று வாய்க்குமோ? எனப் பலவகையாக குலசேகர ஆழ்வாரின் ஏக்கம் வெளிப்படுகிறது.
இரண்டாம் திருமொழி - தெட்டறும் திறல்
இரண்டாம் திருமொழியில் அடியார்களின் தன்மையும், அவர்கள் மீது ஆழ்வார் கொண்ட பக்தியும் கூறப்படுகின்றன. அடியார்கள் திருமாலின் அவதாரங்களை பாடி, பக்தியால் பெருகிய கண்ணீரால் அரங்கனின் சந்நிதியை சேறாக்குவர்; நாவில் தழும்பேற அவனைத் துதிப்பவர்கள்; அரங்கனைக் கண்டு மெய்சிலிர்த்து, ஆடிப்பாடி பித்தரைப்போல் தெரிபவர். அப்படிப்பட்ட பக்தர்களின் பாததூளிகள் கங்கை நீரைவிட உயர்ந்தவை, அவற்றை என் தலைமேல் அணிவேன் என ஆழ்வார் கூறுகிறார்.
மூன்றாம் திருமொழி - மெய்யியல் வாழ்க்கையை
மூன்றாம் பத்து பாடல்களில், அரங்கனை கண்டு அவன்பால் கொண்ட பற்றின் மிகுதியால் உலக இன்பங்கள் வேண்டாம் என்றும், தான் அழகிய மணவாளனுக்கே பித்தன் என்கிறார்.
நான்காம் திருமொழி - ஊனேறு
நான்காம் திருமொழி திருவேங்கடமுடையான் மீது கொண்ட பக்தியின் மிகுதியால், வானுலக இன்பத்தினைக் காட்டிலும் திருவேங்கட மலையில் வாழும் குருகாகவோ, மீனாகவோ, திருவேங்கடத்தான் உமிழ்கின்ற பொன் வட்டாகவோ, செண்பக மலராகவோ, தன்பக மரமாகவோ, அழகிய மலையாகவோ, மலை மீது பாயும் ஆறாகவோ, கோயிலின் நிலைக்கதவாகவோ, வாசற்படியாகவோ அல்லது வேங்கடமலை மீது வேறு ஏதேனும் பொருளாகவோ இருந்து திருவேங்கடமுடையான் அடிகளைக் காண்பேன் என்கிறார்.
ஐந்தாம் திருமொழி - தருதுயரத்தடாயேல்
ஐந்தாம் திருமொழி திருவஞ்சைக்களம் என்னும் வித்துவக்கோட்டில் கோவில் கொண்ட உய்யவந்த பெருமாளிடம் ஆழ்வார் சரணடைந்து பாடிய பாசுரங்களைக் கொண்டது. இறைவன் தரும் சோதனைகளையும் அவனது அருள் என்றே கொள்ளும் தன்மையை தவறு செய்யும் குழந்தையைத் தாய் அன்பு மிகுதியால் தண்டிப்பதற்கும், கணவனின் குற்றங்களை மீறி குலமகள் அவளை நேசிப்பதற்கும், மருத்துவன் காயத்தை குணப்படுத்த அதற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கும் ஒப்புமைப் படுத்துகிறார் குலசேகர ஆழ்வார். வைணவ மரபின் சரணாகதியுடன் சேர்ந்த அநன்ய கதித்துவம் (உன்னை அல்லால் எனக்கு வேறு ஒருவரும் இல்லை என சரணடைதல்), ஆகிஞ்சன்யம்( மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது) என்னும் இரு முக்கிய கோட்பாடுகள் இந்த பதிகத்தில் இடம்பெறுகின்றன.
ஆறாம் திருமொழி- ஏர்மலர்ப்பூங்குழல்
ஆறாம் திருமொழி கண்ணன்மேல் கோபியர் ஊடலும், கோபமும் கொண்டு பாடும் 10 பாடல்களால் ஆனது. பரமாத்மாவை அடைய வேண்டி ஜீவாத்மாவின் தவிப்பாகவும் இப்பாடல்கள் பொருள் கொள்ளப்படுகின்றன.
ஏழாம் திருமொழி- ஆலை நீள் கரும்பு
கண்ணனைப் பெற்ற தாய் தேவகி பிறந்ததும் அவனைப் பிரிந்ததால் தனக்குக் கிடைக்காமல் போன, குழந்தைக் கண்ணனை வளர்க்கும் அனுபவங்களை எண்ணி ஏங்குவதாக அமைந்த பாடல்களைக் கொண்டது. கண்ணனைத் தாலாட்டி, அமுதூட்டி, அவனது சிரிப்பை, அழுகையை, குறும்புகளை, கோவர்த்தன மலையை ஏந்தி மழையிலிருந்து காத்தது, குரவை கூத்து ஆடியது, காளிங்க நர்த்தனம் போன்ற விளையாடல்களைக் காணும் "பேறு ஓன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என தேவகியின் இரங்கல் கூறப்படுகிறது.
எட்டாம் திருமொழி - மன்னுபுகழ்
எட்டாம் திருமொழியில் உள்ள 11 பாடல்களும் திருக்கண்ணபுரத்தில் கோவில் கொண்ட சௌரிராஜப் பெருமாளைப் போற்றி பாடுபவை. கோசலை ராமனைத் தாலாட்டுவதாக அமைந்தவை. பாலகாண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம் என்ற வரிசையில் ராமாயண நிகழ்வுகளைக் குறிப்பிட்டு ஒவ்வொரு பாடலின் மூன்றாம் அடியிலும் 'கணப்புரத்தென் கருமணியே' என்ற தொடர் பயின்று வருகிறது.
ஒன்பதாம் திருமொழி - வன் தாளிணை
ஒன்பதாம் திருமொழி ராமனை விட்டுப் பிரிந்த தசரதனின் துயரை 11 பாடல்களில் விவரிக்கின்றது. இளவரசனாக அரச வாழ்க்கையில் வளர்ந்த ராமன் காட்டில், மர நிழலில் கருங்கல் பாறைகளையே படுக்கையாக கொள்ள வேண்டுமே, கல்லிலும் முள்ளிலும் நடக்க வேண்டுமே, பசியால் துன்பபட வேண்டுமே என வருந்தி, இவ்வாறு நடந்த பின்னுன் என் நெஞ்சம் இரண்டாகப் பிளக்கவில்லையே என தசரத மன்னன் இரங்குகிறார். தந்தையாகிய தன்னுடைய வாக்கையே மெய்ப்பிக்கவேண்டும் என்று கானகம் சென்ற இராமனே, தனக்கு மீண்டும் மீண்டும் பல பிறவிகளில் மகனாகப் பிறக்க வேண்டும் என்று இராமனிடமே வேண்டுகிறார்.
பத்தாம் திருமொழி - அங்கண் நெடுமதில்
பத்தாம் திருமொழியில் 11 பாடல்களில் கடைசி பதிகத்தில், முழு ராமாயணமும், தில்லை நகர் திருச்சித்ரகூடம்(சிதம்பரம்) என்ற திவ்ய தேசத்தைக் கொண்டு கூறப்படுகிறது. ராமன் பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்வுகள் கூறப்படுகின்றன். சம்புகனை ராமன் கொன்றது, துர்வாச முனிவரின் சாபத்தால் இலக்குவன் முதலில் இறந்தது, அவனது பிரிவு தாங்காமல் ராமன் சரயு நதியில் மூழ்கி இறக்க அயோத்தி மக்கள் அனைவரும் உடன் மூழ்கியது வரையான நிகழ்வுகள் உள்ளன.
சிறப்புகள்
பெருமாள் திருமொழியில் ராமாவதாரம் மூன்று பதிகங்களில் பாடப்படுகிறது. திவ்யபிரபந்தத்தில் ராமனுக்குப் பாடப்பட்ட ஒரே தாலாட்டுப் பாடல் குலசேகர ஆழ்வாரின் 'மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே'.
நான்காம் திருமொழியில் குலசேகர ஆழ்வார்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே! (685)
எனத் தன்னை திருவேங்கடத்தின் படியாக இருக்க வரம் கேட்டமையால் திருப்பதி கோவில் கருவறை முன்பு இருக்கும் படி 'குலசேகரப்படி' என்று பெயர் பெற்றது. ஐந்தாம் திருமொழின் பாடல்கள் பரிபூரண சரணாகதியின் உருக்கமான வெளிப்பாடுகள். ஏழாம் திருமொழியில் கண்ணனைப் பெற்றிருந்தும் கிருஷ்ணானுபவமாக அவனது வளர்ச்சியையும், விளையாடல்களையும் அனுபவிக்க முடியாத தேவகியின் இரங்கல் இலக்கியங்களில் அதிகம் பேசப்படாத ஒன்று.
பாடல் நடை
கருமணியைக் காணும் நாள் எந்நாளோ
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி
இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே. (647)
உன் அருள் நினந்தே அழுவேன்
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே. (688)
புள்ளுவம் பேசாதெ
பையர வின்னணைப் பள்ளியினாய்
பண்டையோ மல்லோம்நாம் நீயுகக்கும்
மையரி யொண்கண்ணி னாருமல்லோம்
வைகியெம் சேரி வரவோழிநீ
செய்ய வுடையும் திருமுகமும்
செங்கனி வாயும் குழலும்கண்டு
பொய்யொரு நாள்பட்ட தேயமையும்
புள்ளுவம் பேசாதே போகுநம்பீ. (704)
தேவகி இரங்கல்
மருவு நின்திரு நெற்றியில் சுட்டி
அசைத ரமணி வாயிடை முத்தம்
தருத லும்,உன்றன் தாதையைப் போலும்
வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதைபெற் றாளே. (712)
ராகவனே தாலேலோ
ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ. (725)
உசாத்துணை
- பெருமாள் திருமொழி, சென்னை நூலகம்
- பெருமாள் திருமொழி பெரியவாச்சான் பிள்ளை உரை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- பெருமாள் திருமொழி-Vaishnavism, a simple devotee's views
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:28:15 IST